ஜப்பான் கடலுக்கடியில் வெடித்த எரிமலை: புதிதாக உருவான தீவால் மக்கள் ஆச்சரியம்!
09 Nov,2023
ஜப்பான் அருகே எரிமலை வெடிப்பு காரணமாக கடல் பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது மக்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெற்கு ஜப்பான் பகுதியில் உள்ள ஐஓஜிமா தீவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு பெயரிடப்படாத எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. இதிலிருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் எரிமலை குழம்பு ஆகியவை காரணமாக அப்பகுதியில் கடலில் கடுமையான வெப்பம் தோன்றியதோடு, கடல் நீரும் ஆவியாகி வந்தது.
மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது முழுமையாக குளுமை அடைந்துள்ள எரிமலை குழம்பு, சுமார் 20 மீட்டர் உயரமும், 100 மீட்டர் விட்டமும் கொண்ட தீவுப் பகுதியாக கடல் பரப்பிற்கு மேலே உயர்ந்து நிற்கிறது.
எரிமலை வெடிப்பு காரணமாக உருவாகியுள்ள இந்த புதிய நிலப்பரப்பு நிலைத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும், கடல் அரிப்பு காரணமாக விரைவில் கடலில் கரைந்து விடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
’ரிங் ஆப் பயர்’ என்று அழைக்கப்படும், பசிபிக் பெருங்கடலில் எரிமலைகள் அதிகம் உள்ள பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. ஏராளமான தீவுகளைக் கொண்ட ஜப்பானில் அவ்வப்போது இதுபோன்று எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது.
உலகம் முழுவதும் தற்போது 1,500 எரிமலைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சுமார் 116 எரிமலைகள், ஜப்பானில் உள்ளன. இதனால் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என ஏராளமான இயற்கை சீற்றங்களுக்கு அந்நாடு ஆளாகி வருகிறது.
இந்த சூழலில் தான் இரண்டாம் உலகப்போரின் போது, முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்த இவோ ஜிமா தீவின் அருகே புதிய தீவுப்பகுதி உருவாகியுள்ளது, அந்நாட்டு மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.