காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை தாண்டிவிட்டது. ஹமாஸ் குழுவின் ஆயுதப் பிரிவு தலைவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நீடிப்பதால் காஸாவில் மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்ச் சூழ்நிலையை சமாளிப்பதுதான் அவருடைய திட்டமாக உள்ளது.
ஹமாஸ் ஆயுதக் குழுவின் உளவுத்துறை மற்றும் ஆயுதத் துறையின் தலைவராகவும், "வியூகரீ தியிலான வெடிமருந்துகள் மற்றும் ராக்கெட் தயாரிக்கும் அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான மொஹ்சென் அபு ஜினாவைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறுகின்றன. "
இஸ்ரேல் ராணுவம் தினமும் காலையில் அளிக்கும் செய்தி ஒன்றில், ஹமாஸ் உள்கட்டமைப்பைத் தாக்க "காஸாவின் உள்ளே பயங்கரவாதிகளை ஒழிக்கும் விமானத் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக" இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது.
"காஸா நகரில் வான்வழித் தாக்குதல்களில் வீடுகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் பொதுமக்களைக் கொல்லப்பட்டது பற்றிய விவரங்களைத் தான் நாங்கள் பெறுகிறோம் - விரைவில் அதைப் பற்றிய புதிய விவரங்களை வெளியிடுவோம்" என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
காஸா உள்ளூர்வாசி ஒருவருக்கு இஸ்ரேலிய உளவுத்துறையிடம் இருந்து செல்போனில் அழைப்பு வருகிறது
இஸ்ரேல் 12 நாட்களாக காஸா மீது குண்டுவீசிக் கொண்டிருந்தபோது, விடியற்காலையில் மஹ்மூத் ஷஹீனுக்கு அழைப்பு வந்தது.
அவர் காஸாவின் வடபகுதியின் நடுத்தர வர்க்கத்தினரின் வசிப்பிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். மூன்றாவது மாடியில் 3 படுக்கை அறைகளுடன் உள்ள தனது வீட்டில் வசிக்கும் அவர், அவர் குடியிருக்கும் பகுதி அதுவரை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறுகிறார்.
இந்நிலையில், அவர் வீட்டுக்கு வெளியே திடீரென ஒரு கூச்சல் கேட்டது. "உடனடியாக நீங்கள் தப்பிக்க வேண்டும்," என தெருவில் யாரோ கூச்சலிட்டனர். "அவர்கள் அடுக்குமாடிக் கட்டடங்கள் மீது குண்டு வீசுவார்கள்".
அவர் தனது கட்டடத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்தைத் தேடி சாலையைக் கடக்கும்போது, அவரது செல்போன் ஒலித்தது.
"நான் இஸ்ரேலிய உளவுத்துறையிலிருந்து பேசுகிறேன்," என்று ஒரு நபர் கூறினார் என மஹ்மூத் தெரிவித்தார்.
அந்தக் குரல் மஹ்மூத்தை முழுப்பெயரால் அழைத்து அரபி மொழியில் பேசியது.
"அவர் என்னிடம் மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது வெடிகுண்டு வீசப் போவதாகசொன்னார். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும்படி எனக்கு உத்தரவிட்டார்."
இந்த தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவாசிகளை எச்சரிக்க சில சமயங்களில் இதுபோல் தொலைபேசியில் அழைத்தது. மஹ்மூதின் தொலைபேசிக்கு இதுபோல் முன்னெப்போதும் எந்த அழைப்பும் வந்ததில்லை என்றும், அந்த அழைப்பின் போது முழுமையான விவரங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
போர் நிறுத்தம் - உடன்பட மறுக்கும் இஸ்ரேல்
வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கும், சனிக்கிழமை ஜோர்டானுக்கும் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை மேற்குக் கரை, இராக் மற்றும் துருக்கியைச் சென்றடைந்தார். அவர் தங்கியிருக்கும் இடங்களிலெல்லாம் பல்வேறு விதமான சவால்களும் நம்பிக்கையின்மையும் தான் காத்திருந்தன.
பிளிங்கன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான வழியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அதைப் பின்பற்ற யாரும் தயாராக இல்லை.
வெள்ளிக்கிழமையன்று, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை இடைநிறுத்தம் (போர்களை தற்காலிகமாக நிறுத்துதல்) செய்யும் முயற்சியாக இஸ்ரேலிய தலைவர்களை சமாதானப்படுத்த பிளிங்கன் முயன்றார். ஆனால் இஸ்ரேலிய பிரதமர் அதற்கு உடன்படாமல், உடனடியாக மறுத்துவிட்டார்.
அடுத்த நாள், இஸ்ரேலின் அண்டை நாடுகளின் பிரதிநிதிகளை பிளிங்கன் சந்தித்தார். அனைவரும் உடனடியாக போர் நிறுத்தத்தை விரும்புகிறார்கள். இஸ்ரேல் போர்க் குற்றம் இழைக்கிறது என்று ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாடி கூறினார்.
இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் 'நல்ல' முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பைடன் ஒரு மனிதாபிமான ரீதியிலான போர் இடைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் மத்திய கிழக்கில் அப்படி இல்லை. ஞாயிற்றுக் கிழமையன்று பிளிங்கன் எங்கு சென்றாலும் மிகுந்த ரகசியம் காக்கிறார் என்பதிலிருந்தே இங்கு எவ்வளவு பதற்றம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
பாலத்தீன அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸைச் சந்திப்பதற்காக அவர் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க ரமல்லாவை அடைந்தார். சாலையின் பாதுகாப்பை பாலத்தீன அரண்மனை காவலர்கள் கவனித்துக்கொண்டனர்.
அவர் இராக்கிற்குச் சென்றபோது, இரவு நேரமாகிவிட்டது. பாக்தாத் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க தூதரகத்திற்கு ஹெலிகாப்டரில் பிளிங்கனும் அவருடன் வந்த தூதரக அதிகாரிகளும் சென்றபோது, அவர்கள் அனைவரும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மற்றும் ஹெல்மெட்களை அணிந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பிரதமர் ஷியா அல் சுடானியைச் சந்திக்க பாதுகாப்பு வாகனங்களுடன் பயணம் செய்தனர்.
அரபு நாடுகளைப் பொறுத்த வரையில், 'போர் நிறுத்தம் குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் அவர் பேசிய அனைவருமே மனிதாபிமான ரீதியில் போரை இடைநிறுத்தம் செய்வது, பணயக்கைதிகளை விடுவிக்கவும், காஸாவுக்கு உதவிகளை வழங்கவும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றவும் உதவும் என்று நம்புகிறார்கள்.
அண்மைக் காலமாக இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இதில் சில சிக்கல்களும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது, ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக்குள் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதால், அரபு நாடுகளோ அல்லது இஸ்ரேலோ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை.
பிளிங்கன் வருகைக்குப் பின்னர் இதுவரை கிடைத்துள்ள நேர்மறையான தகவல் என்னவென்றால், அவர் அனைத்துத் தரப்பினருடனும் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதுடன், தற்போதைய போர் அனைவரும் அஞ்சிய அளவுக்கு மிகவும் பெரிய தாக்குதலாக உருவெடுக்கவில்லை என்பது மட்டும் தான்.
பாலத்தீனர்களின் நீண்டகால எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அப்பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான வழியைக் கண்டறிய பிளிங்கன் தனது அரபு சகாக்களை ஊக்குவிக்கிறார். ஆனால் இது பெரிய வெற்றியை அடைவதாகத் தெரியவில்லை.
ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் சஃபாடி, 'போருக்குப் பிறகு காஸாவின் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில், எதைப் பற்றியும் எப்படி சிந்திக்க முடியும்?' எனக்கேள்வி எழுப்புகிறார்.
இது தொடர்பாக அவர் பேசியபோது, "நாங்கள் ஒரு பாழடைந்த நிலத்தைப் பற்றி பேசலாமா? அகதிகளாக ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசலாமா?" எனக்கேள்வி எழுப்பினார்.
அக்டோபர் 12 அன்று வெள்ளை மாளிகையில் யூத சமூகத் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய பைடன், "இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடந்த இரத்தக்களரி மற்றும் சோகத்திற்குப் பிறகும் கூட, மத்திய கிழக்கில் சில நல்ல முடிவுகளை ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் மனரீதியாக ஒரு நம்பிக்கையாளர் என்ற நிலையில் இருப்பதாக மட்டும் உணர்கிறேன்," என்றார்.
அங்குள்ள பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையகத்தில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை அவர் சந்தித்தார். அப்போது, மேற்குக் கரையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாலத்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காஸாவில் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
பாலத்தீனர்களை "வலுக்கட்டாயமாக இடம்மாற்றம் செய்யக்கூடாது" என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார் என்று மேத்யூ மில்லர் கூறினார்.
பிளிங்கனும் அப்பாஸும் மேற்குக் கரையில் "அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான" முயற்சிகள் குறித்து விவாதித்தனர். இதில் "பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இத்தாக்குதலுக்கு யார் பொறுப்போ, அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது" ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
"பாலத்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து சமமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியதாக மில்லர் கூறினார்.
"பாலத்தீன அரசை உருவாக்குவதற்காக பாலத்தீனர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான" பணிகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் பிளிங்கன் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசகமாக தெரிவித்துளளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தம் செய்வதை நோக்கி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மையில் அவர் என்ன சொன்னார்?.
சனிக்கிழமை, பைடனிடம் செய்தியாளர்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று கேட்டனர்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன.
ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மற்ற சக்திகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. இது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு பயனளிக்கும் என்று கூறுகின்றன.
நாங்கள் கூறிவருவதைப் போல் அமெரிக்கா அதற்கு பதிலாக ஒரு மனிதாபிமான ரீதியிலான இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.
ஆனால் என்ன வித்தியாசம்?
ஒரு முறையான போர் நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, மனிதாபிமான இடைநிறுத்தங்கள் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். சில நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் பொதுவாக வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நீண்டகால அரசியல் தீர்வுகளை அடைவதற்கு மாறாக, மனிதாபிமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் அவை பொதுவாக செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையில், போர்நிறுத்தங்கள் நீண்ட கால நோக்கம் கொண்டவை. மேலும் பெரும்பாலும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிப்பதை போர் நிறுத்தம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா கூறுகிறது.
வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நான்கு மணி நேர அவகாசத்தை அளிக்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இடம்பெயர்வதற்கான பாதை, காஸா பகுதியில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையான சலா அல்-தின் சாலை என்றும், - உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை (0800-12:00 ஜிஎம்டி) பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையும் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அந்தச் சாலையில் பணியாற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. பொதுமக்களை "மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்த ஹமாஸ் அமைப்பு முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
மீண்டும் நினைவூட்டும் வகையில், வடக்கு காஸாவை பொதுமக்களை வெளியேற்றும் பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தென்பகுதியை நோக்கி பாதுகாப்பாகப் பயணிக்குமாறும் அழைப்பு விடுத்தது. இருப்பினும் தெற்கு பகுதியிலும் அப்போது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தற்போதைய நிலையில், சுமார் 3,50,000 முதல் 4,00,000 பேர் தற்போது வடக்கு பகுதியில் தங்கியுள்ளனர் என்று அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.