
பல்லவ தூதர்கள்.3
பொன்னனும் வள்ளியும் தங்கள் குடிசையின் கதவைப் பூட்டிக் கொண்டு உறையூரை நோக்கிக் கிளம்பினார்கள். அவர்கள் வசித்த தோணித் துறையிலிருந்து உறையூர் மேற்கே ஒரு காத தூரத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் - அதாவது சுமார் ஆயிரத்தி முந்நூறு வருடங்களுக்கு முன்பு - செந்தமிழ் நாட்டில் ரயில் பாதைகளும் ரயில் வண்டிகளும் இல்லை; மோட்டார் வண்டிகளும் தார் ரோடுகளும் இல்லை. (இவையெல்லாம் அந்த நாளில் உலகில் எந்த நாட்டிலும் கிடையாது) அரசர்களும் பிரபுக்களும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் ஆரோகணித்துச் சென்றனர். குதிரை பூட்டிய ரதங்களிலும் சென்றனர். மற்ற சாதாரண மக்கள் நாட்டு மாட்டு வண்டிகளில் பிரயாணம் செய்தார்கள். இந்த வாகனங்களெல்லாம் போவதற்காக விஸ்தாரமான சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. குளிர்ந்த நிழல் தரும் மரங்கள் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த அழகான சாலைகளுக்குச் சோழவள நாடு அந்தக் காலத்திலே பெயர் போனதாயிருந்தது. அந்தச் சாலைகளுக்குள்ளே காவேரி நதியின் தென்கரையோரமாகச் சென்ற, ராஜபாட்டை மிகப் பிரசித்தி பெற்றிருந்தது.
இந்த ராஜபாட்டை வழியாகத்தான் பொன்னனும் வள்ளியும் சோழ நாட்டின் தலைநகரமான உறையூருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சோழநாடு அந்த நாளில் தன்னுடைய புராதனப் பெருமையை இழந்து ஒரு சிற்றரசாகத்தான் இருந்தது. தெற்கே பாண்டியர்களும் வடக்கே புதிதாகப் பெருமையடைந்திருந்த பல்லவர்களும் சோழ நாட்டை நெருக்கி அதன் பெருமையைக் குன்றச் செய்திருந்தார்கள். ஆனால், சோழ நாட்டின் வளத்தையும் வண்மையையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வளத்துக்குக் காரணமாயிருந்த காவேரி நதியையும் அவர்களால் கொள்ளை கொண்டு போக முடியவில்லை. உறையூர் ராஜபாட்டையின் இருபுறமும் பார்த்தால் சோழ நாட்டு நீர் வளத்தின் பெருமையை ஒருவாறு அறிந்து கொள்ளும் படியிருந்தது. ஒரு புறத்தில் கரையை முட்டி அலை மோதிக்கொண்டு கம்பீரமாய்ச் சென்ற காவேரியின் பிரவாகம்; ஆற்றுக்கு அக்கரையில் நீல வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடர்த்தியான தென்னை மரத்தோப்புகளின் காட்சி; இந்தப் புறம் பார்த்தாலோ கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை, பசுமை, பசுமைதான். கழனிகளெல்லாம் பெரும்பாலும் நடவு ஆகியிருந்தன. இளம் நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து கொண்டிருந்த காலம். ‘குளு குளு’ சத்தத்துடன் ஜலம் பாய்ந்து கொண்டிருந்த மடைகளில் ஒற்றைக் காலால் தவம் செய்து கொண்டிருந்த வெள்ளை நாரைகள் இளம் பயிர்களின் பசுமை நிறத்தை இன்னும் நன்றாய் எடுத்துக்காட்டின. நெல் வயல்களுக்கு மத்தியில் ஆங்காங்கே சில வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும் கரும்புக் கொல்லைகளும் காணப்பட்டன.
இத்தகைய வளங்கொழிக்கும் அழகிய நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனால் சோழ நாட்டுக் குடிகளின் உள்ளம் எவ்வளவு தூரம் பரபரப்பு அடைந்திருந்ததென்பதைப் பொன்னனும் வள்ளியும் உறையூர்ப் பிரயாணத்தின் போது நன்கு கண்டார்கள். பக்கத்துக் கழனிகளில் வேலை செய்து கொண்டிருந்த உழவர்களும் பயிர்களுக்குக் களைபிடுங்கிக் கொண்டிருந்த ஸ்திரீகளும், பொன்னனையும் வள்ளியையும் கண்டதும் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடோடியும் வந்தார்கள்.
“பொன்னா! என்ன சேதி?” என்று சிலர் ஆவலுடன் கேட்டார்கள். “சண்டை நிச்சயந்தானா?” என்று சிலர் விசாரித்தார்கள். “தூதர்கள் வந்த சமாசாரம் ஏதாவது தெரியுமா?” என்று வினவினார்கள். பொன்னன் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாய்ப் பதில் சொன்னான். “சண்டையைப் பற்றிச் சந்தேகம் என்ன, நமது மகாராஜா ஒரு நாளும் கப்பம் கட்டப் போவதில்லை. எல்லாரும் அவரவர்கள் வாளையும் வேலையும் தீட்டிக் கொண்டு வந்து சேருங்கள்” என்று சிலரிடம் சொன்னான். வேறு சிலரிடம் “எனக்கு என்ன தெரியும்? உங்களுக்குத் தெரிந்ததுதான் எனக்கும் தெரியும்?” என்றான். அவர்கள் நன்றாயிருக்கிறது, பொன்னா! உனக்குத் தெரியாமலிருக்குமா? சோழ நாட்டுக்கே இப்போது முக்கிய மந்திரி நீதானே? உனக்குத் தெரியாத ராஜ ரகசியம் ஏது?” என்றார்கள். அப்போது வள்ளி அடைந்த பெருமையைச் சொல்லி முடியாது.
ஆனால், வேறு சிலர் “பொன்னா! மகாராஜா யுத்தத்துக்குப் போனால் நீயும் போவாயோ, இல்லையோ?” என்று கேட்டபோது வள்ளிக்கு ரொம்ப எரிச்சலாயிருந்தது. அவர்களுக்கு “அது என் இஷ்டமா? மகாராஜாவின் இஷ்டம்!” என்றான் பொன்னன். அவர்கள் போன பிறகு வள்ளியிடம், “பார்த்தாயா வள்ளி! நான் யுத்தத்துக்குப் போகாமலிருந்தால் நன்றாயிருக்குமா? நாலு பேர் சிரிக்கமாட்டார்களா?” என்றான். அதற்கு வள்ளி “உன்னை யார் போக வேண்டாமென்று சொன்னார்கள்? மகாராஜா உத்தரவு கொடுத்தால் போ, என்னையும் அழைத்துக் கொண்டு போ என்று தானே சொல்லுகிறேன்” என்றாள்.
இப்படி வழியெல்லாம் பொன்னன் நின்று நின்று, கேட்டவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டு போக வேண்டியதாயிருந்தது. உறையூர்க் கோட்டை வாசலை அணுகியபோது, அஸ்தமிக்கும் நேரம் ஆகிவிட்டது. அவர்கள் வந்து சேர்ந்த அதே சமயத்தில் கோட்டை வாசல் திறந்தது, உள்ளிருந்து சில குதிரை வீரர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த வீரன் கையில் சிங்கக் கொடியைப் பார்த்ததும், அவர்கள் தாம் மத்தியானம் உறையூருக்குச் சென்ற பல்லவ தூதர்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்துவிட்டது. இருவரும் சிறிது ஒதுங்கி நின்றார்கள். கோட்டை வாசல் தாண்டியதும் குதிரைகள் காற்றிலும் கடிய வேகத்துடன் பறக்கத் தொடங்கின. அவற்றின் காற்குளம்பின் புழுதி மறையும் வரையில் அவை சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பொன்னனும் வள்ளியும் கோட்டை வாசல் வழியாகப் புகுந்து சென்று நகருக்குள் பிரவேசித்தார்கள்.
நகரின் வீதிகளில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பலின் ஓரத்தில் பொன்னனும் வள்ளியும் போய் நின்றனர். பல்லவ தூதர்கள் வந்தபோது ராஜ சபையில் நடந்த சம்பவங்களை ஒருவன் வர்ணித்துக் கொண்டிருந்தான், “ஆகா! அந்தக் காட்சியை நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! மகாராஜா சிங்காதனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இளவரசரும் மந்திரி, சேனாதிபதி எல்லாரும் அவரவர்களின் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். எள் போட்டால் எள் விழுகிற சத்தம் கேட்கும்; அந்த மாதிரி நிசப்தம் சபையில் குடி கொண்டிருந்தது. “தூதர்களை அழைத்து வாருங்கள்!” என்று மகாராஜா சொன்னார். அவருடைய குரலில் எவ்வளவு வேகம் ததும்பிற்று இன்றைக்கு? தூதர்கள் வந்தார்கள், அவர்களுடைய தலைவன் முன்னால் வந்து நின்று மகாராஜாவுக்கு வந்தனம் செலுத்தினான்.
“தூதரே! என்ன சேதி?” என்று கேட்டார். “அந்தக் குரலின் கம்பீரத்திலேயே தூதன் நடுங்கிப் போய்விட்டான். அவனுக்குப் பேசவே முடியவில்லை. தட்டுத் தடுமாறிக் கொண்டே ‘திரிலோக சக்கரவர்த்தி காஞ்சி மண்டலாதிபதி சத்ரு சம்ஹாரி நரசிம்மவர்ம பல்லவராயருடைய தூதர்கள் நாங்கள்....” என்று அவன் ஆரம்பிக்கும் போது நம்முடைய அரண்மனை விதூஷகன் குறுக்கிட்டான். “தூதரே! நிறுத்தும்! எந்தத் திரிலோகத்துக்குச் சக்கரவர்த்தி! அதல ஸதல பாதாளமா? இந்திரலோக, சந்திரலோக, யமலோகமா?” என்றான். சபையில் எல்லோரும் “கொல்லென்று” சிரித்தார்கள். தூதன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அவனுடைய உடம்பு நடுங்கிற்று; நாகுழறிற்று. மெதுவாகச் சமாளித்துக்கொண்டு “தங்கள் பாட்டனார் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டிவந்த கப்பத்தைச் சென்ற ஆறு வருடமாய் மகாராஜா கட்டவில்லையாம். அதற்கு முகாந்திரம் கேட்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை” என்றான். ஆகா! அப்போது நமது மகாராஜாவின் தோற்றத்தைப் பார்க்கவேணுமே? “தூதரே! உங்கள் சக்கரவர்த்தி கேட்டிருக்கும் முகாந்திரத்தைப் போர் முனையிலே தெரிவிப்பதாகப் போய்ச் சொல்லும்” என்றார். எனக்கு அப்போது உடல் சிலிர்த்து விட்டது....”
இவ்விதம் வர்ணித்து வந்தவன் சற்றே நிறுத்தியதும் பல பேர் ஏக காலத்தில் “அப்புறம் என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்கள். “அந்தத் தூதன் சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு, “அப்படியானால், யுத்தத்துக்குச் சித்தமாகும்படி சக்கரவர்த்தி தெரிவிக்கச் சொன்னார்கள். இதற்குள்ளே பல்லவ சைன்யம் காஞ்சியிலிருந்து கிளம்பியிருக்கும். போர்க்களமும் யுத்த ஆரம்ப தினமும் நீங்களே குறிப்பிடலாமென்று தெரியப்படுத்தச் சொன்னார்கள் என்றான். அதற்கு நம் மகாராஜா, “புரட்டாசிப் பௌர்ணமியில் வெண்ணாற்றங் கரையில் சந்திப்போம்” என்று விடையளித்தார். உடனே சபையோர் அனைவரும், “வெற்றிவேல்! வீரவேல்! என்று வீர கர்ஜனை புரிந்தார்கள்...”
இதைக் கேட்டதும் அந்தக் கும்பலில் இருந்தவர்களும் “வெற்றிவேல்! வீரவேல்!” என்று முழங்கினார்கள். பொன்னனும் உரத்த குரலில் அம்மாதிரி வீர முழக்கம் செய்து விட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மேலே சென்றான். இதற்குள் இருட்டிவிட்டது. வெண் மேகங்களால் திரையிடப்பட்ட சந்திரன் மங்கலாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வீதி மூலையிலும் நாட்டியிருந்த கல்தூணின் மேல் பெரிய அகல் விளக்குகள் இருந்தன. அவை ஒவ்வொன்றாய்க் கொளுத்தப்பட்டதும் புகை விட்டுக் கொண்டு எரிய ஆரம்பித்தன.
திடீரென்று எங்கேயோ உயரமான இடத்திலிருந்து பேரிகை முழக்கம் கேட்கத் தொடங்கியது. ‘தம்ம்ம்’ ‘தம்ம்ம்’ என்ற அந்தக் கம்பீரமான சத்தம் வான வெளியில் எட்டுத் திக்கிலும் பரவி ‘அதம்ம்ம்’ ‘அதம்ம்ம்’ என்ற பிரதித் தொனியை உண்டாக்கிற்று. உறையூரின் மண்டபங்களும், மாடமாளிகைகளும், கோபுரங்களும் கோட்டை வாசல்களும் சேர்ந்து ஏககாலத்தில் ‘அதம்ம்ம்’ ‘அதம்ம்ம்’ என்று எதிரொலி செய்தன. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சப்தம் ‘யுத்தம்ம் யுத்தம்ம்’ என்றே கேட்கத் தொடங்கியது.
இடி முழக்கம் போன்று அந்தப் பேரிகை ஒலியைக் கேட்டதும் பொன்னனுடைய உடம்பில் மயிர்க் கூச்சம் உண்டாயிற்று. அவனுடைய ரத்தம் கொதித்தது. நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டன. வள்ளியோ நடுங்கிப் போனாள். “இது என்ன இது? இம்மாதிரி ஓசை இதுவரையில் நான் கேட்டதேயில்லை!” என்றாள். “யுத்த பேரிகை முழங்குகிறது” என்றான் பொன்னன். அவனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்ட வள்ளி, “ஐயோ, உனக்கு என்ன?” என்று கேட்டாள். “ஒன்றுமில்லை, வள்ளி! எனக்கு ஒன்றுமில்லை” என்றான் பொன்னன். சற்றுப் பொறுத்து “வள்ளி! யுத்தத்துக்கு நான் கட்டாயம் போக வேண்டும்!” என்றான்.
பாட்டனும் பேத்தியும்,4
உறையூர்க் கம்மாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும் வள்ளியும் நின்றார்கள். கதவு சாத்தியிருந்தது. "தாத்தா!" என்று வள்ளி கூப்பிட்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் "வா வள்ளி! வாருங்கள் மாப்பிள்ளை!" என்று அவன் வந்தவர்களை வரவேற்றான். பிறகு வீட்டுக்குள்ளே நோக்கி, "கிழவி இங்கே வா! யார் வந்திருக்கிறது பார்" என்றான். மூன்று பேரும் வீட்டுக்குள் போனார்கள். "யார் வந்திருக்கிறது?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்த கிழவி வள்ளியையும் பொன்னனையும் பார்த்துப் பல்லில்லாத வாயினால் புன்னகை புரிந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். வள்ளியைக் கட்டிக்கொண்டு "சுகமாயிருக்கயா, கண்ணு! அவர் சுகமாயிருக்காரா என்று கேட்டாள்.
பொன்னன் "தாத்தா, உங்கள் பேத்தியைக் கொண்டு வந்து ஒப்புவித்து விட்டேன். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்" என்றான். "வந்ததும் வராததுமாய் எங்கே போகிறாய்?" என்று கிழவன் கேட்டான். "மகாராஜாவைப் பார்க்கப் போகிறேன்" என்றான் பொன்னன். "மகாராஜா இப்போது அரண்மனையில் இல்லை, மலைக்குப் போயிருக்கிறார். இங்கே வா காட்டுகிறேன்" என்று கிழவன் அவர்களை வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். முற்றத்திலிருந்து அவன் காட்டிய திக்கை எல்லோரும் பார்த்தார்கள். உச்சிப் பிள்ளையார் கோவில் தீபம் தெரிந்தது. அங்கிருந்து தீவர்த்திகளுடன் சிலர் இறங்கி வருவது தெரிந்தது. இறங்கி வந்த தீவர்த்திகள் வழியில் ஓரிடத்தில் சிறிது நின்றன. "அங்கே நின்று என்ன பார்க்கிறார்கள்?" என்று வள்ளி கேட்டாள். "மகேந்திர சக்கரவர்த்தியின் சிலை அங்கே இருக்கிறது. மகாராஜா, இளவரசருக்கு அதைக் காட்டுகிறார் என்று தோன்றுகிறது" என்றான் கிழவன்.
"அவர்கள்தான் இறங்கி வருகிறார்களே, தாத்தா! நான் அரண்மனை வாசலுக்குப் போகிறேன். இன்று ராத்திரி மகாராஜாவை எப்படியும் நான் பார்த்துவிட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் வெளிக் கிளம்பினான். கிழவன் அவனோடு வாசல் வரை வந்து இரகசியம் பேசும் குரலில், "பொன்னா! ஒரு முக்கியமான சமாசாரம் மகாராஜாவிடம் தெரிவிக்க வேணும். மாரப்ப பூபதி விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. அதை அந்தரங்கமாக அவரிடம் சொல்லவேணும்!" என்றான்.
"மாரப்ப பூபதியைப் பற்றி என்ன?" என்று பொன்னன் கேட்டான். "அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். மகாராஜாவின் காதில் எப்படியாவது இந்தச் சேதியைப் போட்டுவிடு" என்றான் கிழவன். கிழவி விருந்தாளிகளுக்குச் சமையல் செய்வதற்காக உள்ளே போனாள். பாட்டனும் பேத்தியும் முற்றத்தில் உட்கார்ந்தார்கள். திடீரென்று வள்ளி, "ஐயோ தாத்தா! இதெல்லாம் என்ன?" என்று கேட்டாள்.
முற்றத்தில் ஒரு பக்கத்தில் உலைக்களம் இருந்தது. அதன் அருகில் கத்திகளும் வாள்களும் வேல்களும் அடுக்கியிருந்தன. அவைகளைப் பார்த்து விட்டுத்தான் வள்ளி அவ்விதம் கூச்சல் போட்டாள். "என்னவா! வாளும் வேலும் சூலமுந்தான். நீ எங்கே பார்த்திருக்கப் போகிறாய்? முன்காலத்தில்...." "இதெல்லாம் என்னத்திற்கு, தாத்தா?" "என்னத்திற்காகவா? கோவிலில் வைத்து தூப தீபம் காட்டிக் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காகத்தான்! கேள்வியைப் பார் கேள்வியை! தேங்காய்க் குலை சாய்ப்பது போல் எதிராளிகளின் தலைகளை வெட்டிச் சாய்ப்பதற்கு வாள், பகைவர்களின் வயிற்றைக் கிழித்துக் குடலை எடுத்து மாலையாய்ப் போட்டுக் கொள்வதற்கு வேல், தெரிந்ததா!" "ஐயையோ! பயமாயிருக்கிறதே!" என்று வள்ளி கூவினாள்.
"இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த நாட்டு ஆண்பிள்ளைகள்கூட உன்னைப்போலேதான் ஆகிவிடுவார்கள். வாளையும் வேலையும் கொண்டு என்ன செய்கிறது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வள்ளி! இந்தக் கேள்வி என்னுடைய பாட்டன், முப்பாட்டன் காலங்களில் எல்லாம் எப்படித் தெரியுமா? அப்போது கொல்லுப் பட்டறையில் எல்லாம் வாளும் வேலும் சூலமும் செய்த வண்ணமாயிருப்பார்களாம். ஒவ்வொரு பட்டணத்திலும் கம்மாளத் தெரு தான் எப்போதும் 'ஜே ஜே' என்று இருக்குமாம். ராஜாக்களும் ராஜகுமாரர்களும் சேனாதிபதிகளும் கம்மாளனைத் தேடி வந்து கொண்டிருப்பார்களாம். என் அப்பன் காலத்திலேயே இதெல்லாம் போய்விட்டது. வாழைக்கொல்லை அரிவாள்களும் வண்டிக்குக் கடையாணிகளும், வண்டி மாட்டுக்குத் தார்குச்சிகளும் செய்து கம்மாளன் வயிறுவளர்க்கும்படி ஆகிவிட்டது. என் வயதில் இப்போது தான் நான் வாளையும் வேலையும் கண்ணால் பார்க்கிறேன்.... ஆகா! இந்தக் கதைகளிலே மட்டும் முன்னைப் போல வலிவு இருந்தால்? இருபது வருஷத்துக்கு முன்னாலே இந்த யுத்தம் வந்திருக்கக் கூடாதா!"
"சரியாய்ப் போச்சு, தாத்தா! இவருக்கு நீ புத்தி சொல்லி திருப்புவாயாக்கும் என்றல்லவா பார்த்தேன்! யுத்தத்துக்குப் போகணும் என்று இவர் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்...." "பொன்னா! அவன் எங்கே யுத்தத்துக்குப் போகப் போகிறான் வள்ளி? பொன்னனாவது உன்னை விட்டு விட்டுப் போகவாவது! துடுப்புப் பிடித்த கை, வாளைப் பிடிக்குமா? பெண் மோகம் கொண்டவன் சண்டைக்குப் போவானா?"
"அப்படி ஒன்றும் சொல்ல வேண்டாம் தாத்தா! இவர் போகணும் போகணும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார். மகாராஜாதான் வரக்கூடாது என்கிறார். இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க இவர் இருக்க வேணுமாம்." "அடடா! உன்னுடைய அப்பனும் சித்தப்பன்மார்களும் மட்டும் இப்போது இருந்தால், ஒவ்வொருவன் கையிலும் ஒரு வாளையும் வேலையும் கொடுத்து நான் அனுப்ப மாட்டேனா? எல்லாரையும் ஒரே நாளில் காவேரியம்மன் பலி கொண்டுவிட வேண்டுமா?" என்று சொல்லிக் கொண்டே கிழவன் பெருமூச்சுவிட்டான்.
வள்ளிக்கு அந்தப் பயங்கரமான சம்பவம் ஞாபகம் வந்தது. நாலு வருஷத்துக்கு முன்பு கிழவனையும் கிழவியையும் தவிர, குடும்பத்தார் அனைவரும் ஆற்றுக்கு அக்கரையில் நடந்த ஒரு கலியாணத்துக்குப் படகில் ஏறிப் போய்க் கொண்டிருந்தார்கள். நடு ஆற்றில் திடீரென்று ஒரு சூறாவளிக் காற்று அடித்தது படகு கவிழ்ந்துவிட்டது. அச்சமயம் கரையில் இருந்த பொன்னன் உடனே நதியில் குதித்து நீந்திப் போய்த் தண்ணீரில் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயன்றான். தெய்வ பத்தனத்தினால் வள்ளியை மட்டுந்தான் அவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் எல்லாரும் நதிக்குப் பலியானார்கள்.
கிழவன் மேலும் சொன்னான். "என் குலத்தை விளங்க வைக்க நீ ஒருத்தி தான் இருக்கிறாய். உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், பொன்னனை நானே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன் யுத்தத்துக்குப் போ" என்று. "யுத்தம் என்னத்திற்காக நடக்கிறது, தாத்தா! அதுதான் புரியவில்லை" என்றாள் வள்ளி. "யுத்தம் என்னத்திற்காகவா - மானம் ஒன்று இருக்கிறதே, அதுக்காகத்தான்! எருதுக் கொடிக்குப் புலிக் கொடி தாழ்ந்து போகலாமா? தொண்டை நாட்டுக்குச் சோழ நாடு பணிந்து போகிறதா? இந்த அவமானத்தைப் போக்குவதற்காகத்தான்" "எருதுக்கொடி யாருடையது?" "இது தெரியாதா உனக்கு? எருதுக் கொடி காஞ்சி பல்லவ ராஜாவினுடையது." "சிங்கக் கொடி என்று சொல்லு." "இல்லை, எருதுக் கொடி தான்."
"நான் இன்றைக்குப் பார்த்தேன் தாத்தா! தூதர்களின் கொடியில் சிங்கந்தான் போட்டிருந்தது." "ஆமாம்; எருதுக் கொடியைச் சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார்கள். ஆனால் எருது பன்றியை ஜயித்து விட்டதால் சிங்கமாகி விடுமா?" என்றான் கிழவன். "எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா! விபரமாய்ச் சொல்லேன்" என்றாள் வள்ளி. "சரி, அடியிலிருந்து சொல்கிறேன் கேள்!" என்று கிழவன் கதையை ஆரம்பித்தான்.
"நீ பிறந்த வருஷத்தில் இது நடந்தது. அப்போது காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய வீரபராக்கிரமங்களைப் பற்றி நாடெங்கும் பிரமாதமாய்ப் பேசிக்கொண்டிருந்த காலம். இந்த உறையூருக்கும் அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் விஜயத்தின் ஞாபகார்த்தமாகத்தான் நமது மலையிலே கூட அவருடைய சிலையை அமைத்திருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் வடக்கே இருந்து வாதாபியின் அரசன் புலிகேசி என்பவன் - பெரிய படை திரட்டிக் கொண்டு தென்னாட்டின் மேல் படையெடுத்து வந்தான். சமுத்திரம் பொங்கி வருவதுபோல் வந்த அந்தச் சைன்யத்துடன் யுத்தகளத்தில் நின்று போர் செய்ய மகேந்திர சக்கரவர்த்திக்குத் தைரியம் வரவில்லை. காஞ்சிக் கோட்டைக்குள் சைன்யத்துடன் பதுங்கிக் கொண்டார். கோட்டையைக் கொஞ்ச காலம் முற்றுகையிட்டுப் பார்த்தான் புலிகேசி. அதில் பயனில்லையென்று கண்டு தெற்குத் திக்கை நோக்கி வந்தான். அப்பப்பா! அப்போது இந்த உறையூர் பட்ட பாட்டை என்னவென்று சொல்லுவேன்! நமது பார்த்திப மகாராஜா அப்போது பட்டத்துக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. புலிகேசியை எதிர்க்கப் பலமான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இதற்குள் வடக்கே புலிகேசியின் ராஜ்யத்துக்கே ஏதோ ஆபத்து வந்துவிட்டது போலிருந்தது. புலிகேசி கொள்ளிடத்தைத் தாண்டவேயில்லை திரும்பிப் போய்விட்டான். போகும்போது அந்தக் கிராதகனும் அவனுடைய ராட்சத சைன்யங்களும் செய்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லையாம். ஊர்களையெல்லாம் சூறையாடிக் கொண்டும் தீ வைத்துக் கொண்டும் போனார்களாம். அதிலிருந்து மகேந்திர சக்கரவர்த்தியினுடைய புகழ் மங்கி விட்டது. 'சளுக்கரின் பன்றிக் கொடிக்குப் பல்லவரின் ரிஷபக் கொடி பயந்துவிட்டது' என்று ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள். இந்த அவமானத்துக்குப் பிறகு மகேந்திர சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்கவில்லை. அவருக்குப் பிறகு நரசிம்மவர்ம சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்தார். இவர் பட்டத்திற்கு வந்ததிலிருந்து புலிகேசியைப் பழிக்குப் பழி வாங்கிப் பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க வேணுமென்று ஆயத்தங்கள் செய்து வந்தார். கடைசியில் ஆறு வருஷங்களுக்கு முன்பு பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடக்கே போனார். புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று வாதாபி நகரையும் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுத் திரும்பி வந்தார். இந்தப் பெரிய வெற்றியின் ஞாபகார்த்தமாகப் பல்லவர்களின் ரிஷபக் கொடியை நரசிம்ம சக்கரவர்த்தி சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார். அவர் திரும்பி வந்து இப்போது ஒரு மாதந்தான் ஆகிறது. வள்ளி! அதற்குள்ளே...."
இத்தனை நேரமும் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவள், "அப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியுடன் நமது மகாராஜா எதற்காக யுத்தம் செய்யப் போகிறார் தாத்தா!அவருடன் சிநேகமாயிருந்தாலென்ன?" என்று கேட்டாள். "அடி பைத்தியக்காரி..." என்று கிழவன் மறுமொழி சொல்ல ஆரம்பித்தான். அப்போது வீதியில் குதிரை வரும் சத்தம் கேட்டது. அந்த வீட்டின் வாசலிலேதான் வந்து நின்றது. "வீரபத்திர ஆச்சாரி!" என்று யாரோ அதிகாரக் குரலில் கூப்பிட்டார்கள். உடன் கிழவன், " அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி வந்துவிட்டான். வள்ளி, நீ அவன் கண்ணில் படக்கூடாது, சமையற்கட்டுக்குள் போ, அவன் தொலைந்ததும் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்றான்