மூன்று லட்சத்து பதினைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய "ஹோமோ செப்பியன்கள்" எனப்படும் தற்கால மனிதர்கள் கடல் வாழ் உயிரினங்களை உணவாக பயன்படுத்திய சான்றுகள் உள்ளன. இன்று வரை கடலோர கிராமங்களில் தினசரி உணவு மீன் சார்ந்த உணவாகவே இருக்கும். நகர்ப்புறங்களிலும் மீன் சந்தைகள் விற்பனைபடுஜோர். பழைய மீன் குழம்பைநாம் ருசித்து சாப்பிட்டிருப்போம். எனவே தான் கடல் உணவுகள் பெரும்பாலும் சர்வதேச சந்தைகளில் அதிகளவில் விரும்பப்படுகிறது.
கடல் மீன்களின் சுவை: கடல் நிலப்பரப்பிற்கு ஏற்ப அங்கு விளையும் மீன் வகைகள் ருசியிலும் தோற்றத்திலும் மாறுபடும். கடல் தாவரங்கள் இருக்கும் இடத்தில் இனப்பெருக்கம் செய்து வளரும் இறால் மீன்கள் சுவையாக இருக்கும். பாசிகளும், நீர்வாழ் தாவரங்களும் கரையோர நீர்ப்பரப்பில் அதிகம் இருக்கும் இடங்களில் வளரும் மீன்கள் தனிச்சுவை வாய்ந்தவை. காற்றோட்டம் அதிகமுள்ள கடல் பகுதிகளில் மீன்களின் வகைகளும் அவற்றின் சுவையும் பருவநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்.
பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. மீன்களில் உள்ள அமினோ அமிலம் அவை இறந்த பிறகு பயோஜெனிக் அமிலம், அம்மோனியாவாக சிதைகிறது. அதுவே கருவாடு வாசனை.பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன.
இவை நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், இதய நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றிலிருந்து தடுக்கும். மேலும் இவற்றை உட்கொள்வதால் முடி, தோல், மூட்டு, மூளை, இதயம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும். கீல்வாதம் நோய் கண்டவர்களுக்கு நட்சத்திர மீன் மருந்தாகிறது. சிறிய சங்கு போன்ற ஓடுகளுக்குள் வாழும் கடல் ஊறி மீன்களை அரைத்து ரத்தக்கட்டுக்கு மருந்தாக பத்து போடுவார்கள்.
சத்துக்கள்: சராசரியாக பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிராம் (1000 மில்லி கிராம்) கால்சியம் தேவைப்படுகிறது. சால்மன், மத்தி, வஞ்சிரம் , இறால், கவலை மீன்களில் 90 கிராம் மீனில் 350 கிராம் வரை கால்சியம் உள்ளது. கெளுத்தி, செங்கனி மற்றும் சூரை மீன்களில் வைட்டமின்-B12 வைட்டமின்-D, ஒமேகா-3 அதிகம் உள்ளன.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக அவசியமான கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. சிப்பிகள், கிளிஞ்சல்கள், ஈச்சங்கனவாய், ஆக்டோபஸ் ஆகியவை மட்டி மீன்கள் எனப்படும் மெல்லுடலிகள் ஆகும்.
இறால், நண்டு, ஓட்டு கனவாய் ஆகியவை ஓட்டுடலிகள் எனப்படும். இவை அனைத்தும் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும் கொண்ட உணவுகள். அதிலும் சிப்பி மீன்களில் துத்தநாகம்(Zn) சத்து மிக அதிகம். நண்டு, இறால், சிப்பி உணவுகளை உண்ணும் போது நம் மூளைக்கு அருகே உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கப்படும் எண்டோர்ஃபின் (Feel-good brain chemical) ஹார்மோன் சுரக்கப்பட்டு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஈச்சங்கனவாய் மீன்களில் ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின்கள் உள்ளன. மத்தி மீன், சால்மன் (சீனிக் காளை), உறுமீன் போன்வற்றில் கால்சியம் அதிகமுள்ளது.
சில மீன்களின் ஆங்கில பெயர்களையும் அறிந்து கொள்வோம். சூரை மீன் (Tuna fish), மத்தி மீன் (sardine), கெண்டை மீன் (Herring), சால்மன் மீன்(Trout fish), பண்ணா மீன் (codfish), ஈச்சங்கனவாய் (Squid), ஓட்டுக் கனவாய் (octopus), சிப்பி (oyster), நெத்தலி மீன் (Anchovy fish) வஞ்சரம்/ சீலா மீன் (Emerald fish), நகரை மீன் (Red mullet), இறால் (Prawn). உணவுப் பட்டியலில் மீன் உணவுகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.