தனக்கு துரோகம் செய்ததாக வெளிநாட்டு காதலியை கொல்லத் திட்டமிட்ட டெல்லி இளைஞன், காதலியை இந்தியாவிற்கு வரவழைத்து தீர்த்து கட்டியுள்ளார். குர்பிரீத் சிங் டெல்லியை சேர்ந்தவர். இவர் தனது தொழில் நிமித்தம் அடிக்கடி சுவிட்சர்லாந்து சென்று வருவார். அப்படி ஒரு பயணத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த லீனா பெர்கர் என்ற பெண்ணை சந்தித்ததில் இருவரும் காதலில் விழுந்தார்கள்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக லீனாவின் நடத்தையில் மாற்றம் இருந்ததாக குர்பிரீத் சிங்கிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வேறொரு ஆணுடன் லீனா பெர்கர் பழகி வருவதாக குர்பிரீத்துக்கு தகவல் கிடைத்தது. தனக்கு லீனா துரோகம் செய்துவிட்டதாக குர்பிரீத் ஆவேசம் கொண்டார்.
இதனால் சுவிட்சர்லாந்தில் வைத்தே லீனா பெர்கரை கொல்ல முயற்சித்தார். ஆனால் வெளிநாட்டில் வைத்து அந்நாட்டு பெண்ணை கொன்றால் எளிதில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்தார்.
எனவே உடனே லீனாவை இந்தியாவுக்கு வரும்படியும், இந்தியாவின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து உல்லாசமாக இருக்கலாம் என்றும் குர்பிரீத் அழைப்பு விடுத்தார்.
அதனை நம்பி லீனா ஆவலோடு இந்தியா வந்தார். டெல்லிக்கு வெளியே சில தினங்கள் லீனாவோடு குர்பிரீத் சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்தபடியே, அவரை கொல்வது குறித்து தீவிரமாக யோசித்து வந்தார்.
லீனா சுவிட்சர்லாந்துக்கு திரும்பும் நாளும் வந்தது. இனியும் காத்திருக்கக்கூடாது என லீனாவை டெல்லியில் தனக்கு சொந்தமான இடத்திற்கு வரவழைத்து கொல்லத் துணிந்தார்.
வழக்கமான உல்லாசத்தின் பெயரால் காதலியின் கை, கால்களை கட்டிப்போட்டு காதலியை இம்முறை குர்பிரீத் கொன்று தீர்த்தார்.
காதலியை கொல்லும் திட்டத்தோடு, போலி ஆவணங்களின் பெயரால் அந்த காரை முன்கூட்டியே குர்பிரீத் வாங்கியிருந்தார்.
காரின் பின் சீட்டில் காதலியின் சடலத்தோடு பல தினங்கள் டெல்லியில் வலம் வந்தார். சடலம் மோசமாக நாறவே அரசுப் பள்ளி ஒன்றின் அருகே காரை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
காரையும் சடலத்தையும் கைப்பற்றிய டெல்லி போலீஸார் சிசிடிவி தடயங்கள் வாயிலாக கார் மேற்கு டெல்லியின் தெருக்களில் வலம் வந்ததை கண்டறிந்தனர்.
விசாரித்ததில் காரின் உரிமையாளர் போலி ஆவணங்களில் அதனை வாங்கியிருப்பது தெரிய வந்தது.
இறந்தவர் வெளிநாட்டு பெண் என்பதால் நடத்திய விசாரணையில் இறந்த பெண் சுவிட்சர்லாந்தை சேர்ந்த லீனா பெர்கர் என்பது தெரிய வந்தது.
பின்னர் ஸ்விஸ் போலீஸார் உதவியால், லீனாவை அடிக்கடி சந்தித்த குர்பிரீத் சிங் விவரம் பிடிபட்ட நிலையில் குர்பிரீத் சிங்கை கைது செய்து விசாரித்ததில் குர்பிரீத் மேற்கண்ட விவரங்களை வாக்குமூலமாக தந்தார்.