.
சந்திரயான் 3 திட்டத்தின் நிறைவாக சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகளை முடித்து, உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருக்கு புதிய ஆபத்து எழுந்திருக்கிறது. இந்த ஆபத்தால் சந்திரனில் மேற்பரப்பில் உறங்கும் இந்த இரண்டும் வெடித்துச் சிதறவும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சந்திரனை ஆராயும் இஸ்ரோவின் மூன்றாவது தவணையான சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. ஜூலை 14 அன்று ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், வெற்றிகரமாக அதன் விக்ரம் லேண்டரை ஆக.23 அன்று சந்திரனின் தென்துருவப் பரப்பில் தரையிறக்கியது.
விக்ரம் லேண்டர் நிலையாக நின்றபடி ஆய்வுகளைத் தொடர, அதிலிருந்து வெளிப்பட்ட பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவின் பரப்பில் தென்படும் பல்வேறு தனிமங்கள் மற்றும் சூழல் மீது அவை ஆய்வுகளை மேற்கொண்டன.
நிலவின் ஒருநாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு இணையானதாகும். எனவே நிலவில் 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் உணரலாம். இந்த வகையில் ரோவர் மற்றும் லேண்டர் ஆகியவை, நிலவின் பகலான 14 நாட்களுக்கு சந்திரனின் பரப்பில் தீவிர ஆய்வு மேற்கொண்டது.
அடுத்து இரவும் அதனையொட்டிய உறைநிலை குளிரும் வந்ததால், இரண்டையும் இஸ்ரோ உறக்கநிலையில் ஆழ்த்தியது. சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கங்களை லேண்டர், ரோவர் ஆகியவை வெற்றிகரமாக நிறைவேற்றியதில், பின்னர் பகல் வந்த பிறகும் அவற்றின் உறக்கத்தை இஸ்ரோ தொடரச் செய்தது.
இந்தியாவின் தூதுவர்களாக நிலவில் அவை இருக்கட்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த சூழலில் நிலவில் அவை இரண்டின் இருப்புக்கும் ஆபத்து எழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்த ஆபத்து சந்திரனில் இருந்து வரவில்லை. சந்திரனுக்கு வெளியிலிருந்து வருகிறது. விண்வெளியிலிருந்து சந்திரனை அடையும் மீச்சிறு விண்கற்களால் லேண்டர், ரோவர் ஆகியவற்றுக்கு அபாயம் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விண்கற்கள் அளவில் மிகச்சிறியது என்றாலும், அவை சந்திரனின் பரப்பில் குண்டுவெடிப்பது போன்று சேதத்தை ஏற்படுத்தக்கூடும். பூமிக்கும் அது போன்று சிறுவிண்கற்களின் ஆபத்து சதா சூழ்ந்திருந்த போதும், பூமியின் வளிமண்டலத்துக்குள் அந்த கற்கள் நுழைந்ததுமே எரிந்து சாம்பலாகிவிடும்.
ஆனால் சந்திரனுக்கு வளிமண்டலம் கிடையாது; ஆக்சிஜனும் இல்லை. எனவே எந்தத் தடையும் இன்றி சிறு விண்கற்களும் சந்திரனின் பரப்பில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இந்த சிறுகற்களால், உறக்கத்திலிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகி வெடித்துச் சிதறவும் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.