இஸ்ரேல் விமான நிலையத்தில் தரையில் பதுங்கிய ஜெர்மனி பிரதமர்!
19 Oct,2023
ஹமாஸ் உடனான போரில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றிருந்த ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷால்ஸ், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக விமான நிலைய தரையில் படுக்க வைக்கப்பட்டார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஹமாஸ் உடனான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ் அந்த நாட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த 17-ம் தேதி இரவு அவர் ஜெர்மனி திரும்புவதற்காக விமானத்தில் ஏறிய போது இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து விமான நிலையம் அருகே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
உடனே விமானத்திலிருந்து ஸ்கால்ஸையும், அவருடன் வந்திருந்தவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றிய பாதுகாலர்கள், பாதுகாப்புக்காக அவரை தரையில் படுக்கச் செய்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் விமானத்தில் ஏறி ஜெர்மனி புறப்பட்டார்.