* சட்னியில் காரம் அதிகமாகி விட்டதா? ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்த்தால் போதும்.
* அடைமாவில் கைப்பிடி ஜவ்வரிசியை போட்டு ஊறிய பின் அடை ஊற்றினால் சுவை அலாதி.
* மாவு பிசைந்த உடனே பூரியோ, பஜ்ஜியோ போட்டு எடுத்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
* கொத்தமல்லி துவையல் அரைக்கிறீர்களா? புளிக்கு பதில் தக்காளி சேர்த்து அரைத்தால் புது சுவைதான்.
* புளி, இஞ்சி, மிளகாய், உப்பு, வெல்லம் இவற்றுடன் தலா அரை கப் மாதுளம் பழம், வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் எல்லா சுவையும் நிறைந்த துவையல் தயார்.
* பீட்ரூட்டை வேகவைத்து மசித்து வெண்ணெய், நாட்டுச் சர்க்கரை தூள் சேர்த்துக் கலந்து டோஸ்ட் செய்த பிரட் மீது தடவினால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
* சப்பாத்தி மாவுடன் குடைமிளகாயை சிறியதாக நறுக்கிச் சேர்க்கலாம். சிவப்பு, மஞ்சள் நிற குடைமிளகாய்களை நறுக்கி எண்ணெயில் வதக்கி மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி சுட, வண்ணமயமான சப்பாத்தி ரெடி. சுவையும் அபாரமாக இருக்கும்.
* கஞ்சி வடாம் செய்யும் போது, கஞ்சியைக் காய்ச்சி, ஆற வைத்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால் அல்லது சிறிதளவு மோர் கலந்து போட்டால் வடாம் வெள்ளையாக இருக்கும்.
* கஞ்சி வடாம் செய்யும் போது நீரை கொதிக்க வைக்கும் போது அடுப்பின் தீயை அதிகமாக்கியும், அரிசிமாவு அல்லது ஜவ்வரிசி சேர்த்ததும் தீயை குறைத்தும் கிளற வேண்டும். கஞ்சி பதம் வந்ததும் இறக்குவதற்கு முன் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
* அரிசி வடாம் பிழியும் போது மாவில் சிறிது பால் சேர்த்துக் கொண்டால் வடாம் வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
* உளுந்துவடை, பருப்பு வடை செய்யும் போது சேமியாத்தூள் (அ) அவல்தூள் (அ) பாசிப்பருப்பு வறுத்த பொடி 1 டேபிள் ஸ்பூன் கலந்து செய்ய, மொறுமொறுப்பு அதிகமாய், சுவை அதிகரிக்கும்.
* பண்டிகைக்கு சுண்டல், வடை என தயாரிக்கும் போது சிறுதானிய வகை ஏதாவது ஒன்றை சுண்டலில் ஊறவைத்து, வடை எனில் சிறுதானிய வறுத்த பொடி சேர்க்க, சுவையோடு சத்து சேரும்.
* சுண்டல், கார பட்சணங்கள் செய்யும் போது, தாளிப்புடன் புதினா பொடி தூவி ஆம்சூர் கலந்து, கசூரிமேத்தி என வெரைட்டியான சுவையில் தயாரிக்க, சூப்பராக இருக்கும்.
* பருப்பு வடை செய்யும்போது கொர கொர வென்று அரைத்த பருப்புடன் ஒரு கப் பிடி ெபாட்டுக் கடலையை மாவாக்கி கலந்து வடை தட்ட மொறு மொறு சூப்பர் வடை ரெடி.
* உளுந்து வடை செய்யும்போது 2 ஸ்பூன் துவரம்பருப்பு சேர்த்து அரைக்க சாஃப்டாக வடை இருக்கும்.
* திடீர் வடைக்கு அரிசி மாவு 1 ஸ்பூன், கடலைமாவு 2 ஸ்பூன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொஞ்ச நெய், உப்பு சேர்த்து பிசைந்து வடை தட்ட சூப்பர் வடை ரெடி.
* உளுந்து வடையில் தண்ணீர் அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம். வடை மாவை ஃபிரிட்ஜில் கால் மணி நேரம் வைத்து கொஞ்சம் நெய் விழுது சேர்த்து வடை தட்டினால் சூப்பர் வடை ரெடி. எண்ணெயும் குடிக்காது.
* அப்பளம் ஈரம்பட்டு நமுத்துப் போனால் உளுத்தம் பருப்பு மீது வைத்து மூடி விட்டால் வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்.
* இறைச்சி முற்றியதாக இருந்தால், வேக வைக்கும் போது பப்பாளி பழத்துண்டுகள் இரண்டைச் சேர்த்து வேக விட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* ஜவ்வரிசிப் பாயசம் செய்யும் போது இரண்டு ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கலந்து ஊற்றினால் திக்காகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
* பருப்பை வேகவிடும் போது இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டால் பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.
.
சிறுதானிய கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு – 1 கப்,
முளைகட்டிய பச்சைப் பயறு – 1 கப்,
துருவிய தேங்காய் – ண கப்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து வதக்கி, தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும். பயறு நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் தண்ணீர் விட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும் போது மாவை கொட்டி கெட்டியாக ெவந்தவுடன் இறக்கி, ஆற வைத்து பிசைந்து உருண்டையாக உருட்டி சொப்பு போல் செய்து அதனுள் பயறு கலவையை வைத்து மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான சூப்பரான சிறுதானிய கொழுக்கட்டை ரெடி.