எதிர்கால தலைமுறைக்கு தூய்மையான சுவாச காற்றை விட்டுச் செல்வது என்பது நம்முடைய கடமை என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகிலேயே மிகவும் தூய்மையான காற்று உள்ள பகுதி குறித்து ஆய்வு தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பகுதியை பூமியின் சொர்க்கம் என்று அறிவியலாளர்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
மனிதன் வாழ்வதற்கு ஆக்சிஜன் நிறைந்த காற்று அடிப்படையான விஷயம். தண்ணீர், உணவு இன்றி உயிரினங்களால் நீண்ட நாட்கள் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் 3 நிமிடத்திற்கு மேல் தாக்குப்பிடிப்பது கடினம். அந்த ஆக்சிஜன் நிறைந்த காற்றுதான் பூமியையும், பால்வெளி அண்டத்தில் உள்ள மற்ற கோள்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
பூமியில் சுத்தமான காற்றைத் தேடுவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதுடன், தூய்மையான காற்று நிறைந்த பகுதி அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உலகமயமாதல், மனிதர்களின் நடவடிக்கை, தொழிற் பெருக்கம், உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகிலேயே அதிக தூய்மையான இயற்கை காற்று நிறைந்த பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கேப் கிரிம் என்று அழைக்கப்படும் இந்த தீபகற்ப பகுதி ஆஸ்திரேலிய தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கு முனையில் உள்ளது. "உலகின் விளிம்பு" என்று பிரபலமாக அறியப்படும் கேப் க்ரிமிற்கு மிக குறைவானவர்களே சென்றுள்ளனர். காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டு, பூமியிலேயே இந்த பகுதியில்தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
அண்டார்டிகாவிலிருந்து மாசு அடையாத காற்றை எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பயங்கரமான காற்றுக்கு இப்பகுதி பிரபலமானது.
ஹவாய் தீவில் உள்ள மௌனா லோவா நிலையம், மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் உள்ளிட்டவற்றில் தூய்மை நிறைந்த இயற்கை காற்று உள்ளது.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் காற்றின் தரத்தை கண்காணிக்கவும், தொழில்துறை மற்றும் போக்குவரத்து மூலங்களிலிருந்து மாசு நிறைந்த காற்று வெளியேறுவதை குறைக்கவும், பூமியின் வளி மண்டலத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது பூமி மற்றும் மனித குலத்தின் எதிர்கால தலைமுறை மீது கொண்ட அக்கறை என்று கூறலாம்.
எதிர்கால தலைமுறைக்கு தூய்மையான சுவாச காற்றை விட்டுச் செல்வது என்பது நம்முடைய கடமை என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் மற்ற மாசுபட்ட இடங்களில் டாஸ்மேனியன் காற்று சுவாசத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.