வவுனியாவை அதிரவைத்த படுகொலை சம்பவம்; மூவருக்கு பிடியாணை!
21 Sep,2023
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இளம் தம்பதி உயிரிழந்திருந்தனர்
இந்நிலையில் அந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அத்துடன், எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த யுவதி, தான் ஒருவரை கண்டதாகவும் அவரை அடையாளம் காட்ட முடியும் எனவும் விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
மேலும், மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதேசமயம் சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகவுள்ளதால் அவர்களை கைது செய்ய பகிரங்க பிடியாணை உத்தரவு வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த , வழக்கு விசாரணையும் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு நீதிமன்றினால் திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை வவுனியாவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.