விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது, அங்கு ஏற்கனவே நான்கு முக்கிய இனம் அல்லது குலம்
மகாவம்சத்தில் கூறப்படும் இயக்கர் [Yakkhas] தான் இன்றைய வேடர்களின் [Veddas] மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே, ஒரு நாகரிக சமுதாயத்திற்கு வேண்டிய அமைப்பை காண்கிறோம். இயக்கர்கள் தொழிற்சாலைகளை இயக்குவதையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கருவிகள், அரக்கர்களின் விவசாயத்திற்கு ஊக்கமளித்து உதவுவதையும், இரண்டிலும் உற்பத்தியாகும் பொருட்களை நாகர்கள் வர்த்தகம் செய்வதையும், இவை எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு படுத்தி, ஒரு கட்டுப்பாட்டுடன் தேவர்கள் ஆட்சி செய்வதையும், விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை மண்ணில் காண்கிறோம்.
மேலும் Veddas என்ற ஆங்கில, சிங்கள சொல்லின் மூலம் தமிழ் ‘வேடர்’ ஆகும். ஆரியர்களுக்கு முற்பட்ட ‘hunters’ ஐ குறிப்பிட இங்கு தமிழ் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, கட்டாயம் இது ஒரு வரலாற்றை மறைமுகமாக எடுத்து கூறுகிறது என்றே எண்ணுகிறேன்.
இயக்கர்கள் உண்மையில் ஒரு மனித இனமே, ஏன் என்றால், விஜயன் குவேனியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அவளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி, வாளை உயர்த்தியபோது, அவள் பயந்துபோய் தன் உயிருக்காக கெஞ்சியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பயம் என்பது, மனிதரல்லாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் கொண்டதாக கருதப்படும் இயக்கர்களின் பண்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, அது மட்டும் அல்ல, குவேனியை யக்கினி [Yakkhini] என்று அழைக்கப்படுவது உண்மையெனில், அதாவது அவள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி என்றால், அவள் விஜயனின் பிடியில் இருந்து இலகுவாக வெளியேறியிருக்க முடியும்?, ஆனால் அவளால் முடியவில்லை, பயந்து கெஞ்சுகிறாள்,
இது ஒன்றே இயக்கர்களும் மனிதர்கள் தான் என்பதை மெய்ப்பிக்கிறது. அது மட்டும் அல்ல விஜயனின் தாத்தாவே ஒரு மிருகம் [சிங்கம்] எனவும் அவனின் தாயும் தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள் எனவும் மகாவம்சம் கூறுகிறது.
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்
வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட, 3 1/2 அங்குலம் நீளமுள்ளதும் ஓர் அங்குலம் அகலமுள்ளதுமான சிறிய தங்கத் தகட்டில் நாலு வரிகளைக்கொண்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கி. பி. 126 – 170 ஆம் ஆண்டுவரை அனுராதபுரத்தில் ஆட்சி புரிந்த வசப மாமன்னனுடைய அமைச்சரொருவர் நகதிவத்தை (நாகதீபத்தை) ஆட்சி செய்யும் பொழுது [யாழ்ப்பாணக் குடாநாட்டினை] அக்குடாநாட்டின் வட கோடியில் அமைந்த பதகர அதனவில் (இன்றைய வல்லிபுரம் என்ற ஊரில்) பியங்குகதிஸ்ஸ என்பவரால் இந்த விகாரை கட்டப்பட்டது என குறிக்கப்பட்டுள்ளது.
“லலிதவிஸ்தர” என்னும் வடமொழி நூலில் “பிராமி” என்பதன் பொருள் “எழுத்து” எனக் கூறப்பட்டுள்ளது. வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் கண்டு பிடிக்கப்பட்டதற்குப் பின்னர் சில சரித்திர உண்மைகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணக் குடாநாடு நாகதீபம் என்றழைக்கப்பட்டதும் “பியகுகதிஸ்ஸ” என்னும் சொற்றொடரிலுள்ள “பியகுக” என்னும் இடம் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பியங்குதீபமாக இருக்கலாம் என்பதும் ஆகும்.
வரலாற்றுப் பேராசிரியரான சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் சிங்கள மொழி, பிராகிருத மொழியில் இருந்து தோன்றியது எனவும், கி பி 300 க்கும் கி பி 700 க்கும் இடையில் இந்த மாற்றம் படிப்படியாக நடைபெற்று, ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதன் பின்னர் சிங்கள மொழியின் பண்புகள் நன்கு நிறுவப்பட்டன என்கிறார்.
மேலும் இலங்கையில் ஏறத்தாழ 2000இற்கு மேலான பிராமியசாசனங்கள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் பிராகிருதச் சொற்கள், மற்றும், உதாரணமாக, ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம், திசமகாராமை தமிழ் பிராமி நாணயம் மற்றும் இவை போன்றவற்றில் தமிழ் மொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன எனவும் பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு
அத்துடன், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.
இலங்கையின் பூர்வீகக் குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் செப்டெம்பர் 2015 இல் தெரிவித்தார் பத்மநாதன்.
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்