பள்ளியில் தூங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி.. அதிர்ந்த பெற்றோர்கள்
12 Sep,2023
சீனாவில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றில், மதிய உணவு இடைவேளையின் போது தலையணை அல்லது மேட் வைத்து தூங்கும் மாணவர்களுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்திருக்கும் WeChat தகவல் தொடர்பு குரூப்பில் இந்த கட்டண வசூல் முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதன் அடிப்படையில் இந்த புதிய கட்டண வசூல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் பெற்றோர்களை இது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “மேஜையின் மீது படுத்து உறங்கும் மாணவர்களிடம் 200 யுவான் (ரூ.2275) கட்டணமாக வசூல் செய்யப்படும். மேட் விரித்து உறங்கும் மாணவர்கள் 360 யுவான் (ரூ.4,094) கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பள்ளி வளாகத்தில் உள்ள ஓய்வறைகளில் மெத்தையில் உறங்க விரும்பும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 680 யுவான் (ரூ.7,856) கட்டணம் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் பேசுகையில், “விதிமுறைகளின் அடிப்படையில் தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டணம் வசூல் செய்வதற்கு தனியார் பள்ளிகளுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறினார். மாணவர்கள் தூங்கும் போது அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டி இருக்கிறது என்பதால் இந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
உணவு இடைவேளையின் போது மாணவர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் இல்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்த நிலையில் உணவு இடைவெளி என்பது மாணவர்கள் வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டு மீண்டும் பள்ளிக்கு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தூங்குவது என்ற அடிப்படையான விஷயத்திற்கு கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது சரிதான் என்று அப்பகுதி உள்ளூர் நிர்வாகம் தெரிவிக்கிறது. எனினும் சமூக வலைதளங்களில் இதற்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது.