1,507 மீட்டர் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எங்கு இருக்கு தெரியுமா?
10 Sep,2023
உலக அளவில் சரக்கு மற்றும் மனிதர்கள் போக்குவரத்திற்கு பெரிய அளவில் பயன்படும் பொதுப் போக்குவரத்து என்றால் அது ரயில் போக்குவரத்து தான். அப்படிப்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன. அந்த வரிசையில் ரயில் நிலையங்களும் இணையும். அப்படி உலகிலேயே மிகப் பெரிய ரயில்நிலையம் பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனக்கென சில சிறப்புகளைக் கொண்டுள்ளன. அப்படி பார்க்கையில் உலகின் மிக நீளமான நடைமேடை என்ற பட்டத்தை இந்திய ரயில் நிலையம் பெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹுப்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அந்த நடைமேடையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நடைமேடையின் நீளம் 1,507 மீட்டர். கிட்டத்தட்ட ஒன்றை கிலோமீட்டர் நீளம்.
ஹுப்ளி ரயில் நிலையம்
அதே போல நம் நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது என்று கேட்டால், அது ஹவுரா சந்திப்பு. இங்கு 26 நடைமேடைகள் உள்ளன. ஆனால் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா? இந்த ரயில் நிலையத்தின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தின் சில சிறப்பு அம்சங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். பரப்பளவில் மட்டுமின்றி, அதிகமான நடைமேடைகள் என அதன் பிரம்மாண்டம் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் தான் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம். இது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் 1903 முதல் 1913 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இந்த நியூயார்க் ரயில் நிலையத்தில் மொத்தம் 44 நடைமேடைகள் உள்ளன. அதாவது, மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இங்கு நிற்க முடியும். இந்த ரயில் நிலையத்தின் வழியாக தினமும் சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன. ஒரு லட்சத்து 25,000 பயணிகள் இந்த ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் இரண்டு அண்டர் கிரவுண்ட் நிலைகள் உள்ளன. இங்கு 41 தடங்கள் மேல் மட்டத்திலும், 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் செல்கின்றன. இந்த நிலையம் சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ரகசிய நடைமேடை தளமும் கட்டப்பட்டுள்ளது. இது வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு கீழே கட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் ரூஸ்வெல்ட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இந்த நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்வாராம். இதனால் அவர் பொதுமக்களையும் ஊடகத்தையும் எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு. டிராக் 61 என்று அழைக்கப்படும் அந்த நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.