மன அழுத்தத்தை எதிர்கொள்ள பல வழிகள் இருக்கின்றது. இதில், உணவு பழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் மனநலனிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உள்ளதோ அதே அளவிற்கு நாம் சாப்பிடும் உணவுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையில் நம் உணர்ச்சிகளுக்கும், நம் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உட்கொள்ளும் உணர்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு மனம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படும் போது எந்த வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும்..? இங்கே பார்ப்போம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள்:
எண்ணெயில் பொறித்த உணவுகள் பலருக்கும் விருப்பமான ஒன்று. இதை, பொதுவாகவே அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எண்ணெயில் பொறித்த உணவுகள் தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர்க்கும். இது, சோம்பேறி தனம், உணர்ச்சி மாற்றங்கள் போன்றவை ஏற்படும். இதனால், மன அழுத்தம் இன்னும் மேலோங்கும்.
பானங்கள்:
மன அழுத்தத்தால் அவதிப்படுவோர் சர்க்கரை அல்லது கேஸ் கலந்த பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். எனர்ஜி டிரிங்க்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் பானங்களிலும் சர்க்கரை கலந்திருக்கும். ஆதலால், அவற்றை குடிக்கும் பொழுது கவனம் அவசியம். இது போன்ற பானங்களை குடிப்பதனால் வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படும். மேலும், மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் இது நெகடிவான மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும்.
காபி:
கஃபைன் கலந்த பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபி பிரியர்கள், தாங்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் போதோ காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். டீ அல்லது காபி போன்ற பானங்கள் பதற்றத்தை (anxiety)அதிகரிக்கும். இது நமது தூக்கத்தை கெட்க்கும். மன அழுத்ததால் தவிப்போருக்கு தூக்கம் மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பு அதிகமான உணவுகள்:
உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். அதில் மன அழுத்தமும் ஒன்று. ஆதலால் உப்பு அதிகம் கலந்த பொருட்களை இந்த சமயங்களில் தவிர்க்க வேண்டும். உடலை சம நிலையில் வைக்க உதவும் எலக்ட்ரோலைட்ஸ்களையும் உப்பு சம்மந்தமான உணவுகள் குலைத்து விடும். ஆதலால் எப்போதும் சாப்பிடும் உணவுகளில் கூட குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வது நல்லது. இதை மன அழுத்தம் ஏற்படும் போது மட்டுமன்றி உடலை பிற நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வழி முறையாகவும் பின்பற்றலாம்.
ஆல்கஹால்:
குடி குடியை கெடுக்கும், குடி உடல் நலனிற்கு கேடு என எத்தனை விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டாலும் மனம் சோர்வாக இருக்கும் ஆட்கள் முதலில் தேடுவது மதுவைத்தான். பலர், மது தங்கள் உடலுக்கு அமைதியை தருவதாக கருதுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. மது அதிகம் குடிப்பதால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். தூக்கத்தையும் மது பழக்கம் கெடுத்து விடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடலுக்கும் கேடு-மனதிற்கும் கேடு. இதில், தேவையற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் அதிகம் காணப்படும். இது, உங்கள் ஆற்றலை சீர்குலைக்க வழி வகுக்கும். தேவையற்ற பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் தடுக்க இது போன்ற உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.