ஒரு கரு வளர்ச்சிக்கு விந்து, கருமுட்டை, கருப்பை என அனைத்தும் தேவை. ஆனால் இது எதுவும் இல்லாமல் 14 நாட்கள் ஆன மனித கரு போன்ற 'கரு மாதிரியை' வெய்ஸ்மேன் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள விஞ்ஞானிகள் குழு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இது குறித்துக் கூறிய விஞ்ஞானிகள் குழு, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட ஸ்டெல் செல்கள் மூலம் மனித கருக்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதோடு கர்ப்ப பரிசோதனையை பாஸிட்டிவாக மாற்றிய ஹார்மோன்கள் குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி, கரு மாடலிங் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும்.
இந்த செயற்கை கரு மாதிரிகள், நஞ்சுக்கொடி, மஞ்சள் கரு, கோரியானிக் சாக் மற்றும் பிற வெளிப்புற திசுக்கள் உள்ளிட்ட இந்தக் கட்டத்திற்கான போதுமான வளர்ச்சியை உறுதி செய்யும் அனைத்தையும் கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "இந்த செயற்கைக் கரு தற்போது முதல் மாதத்தில் உள்ளது, கர்ப்பத்தின் மீதமுள்ள எட்டு மாதங்கள் நிறைய வளர்ச்சியைக் கொண்டுள்ளன" என்று பேராசிரியர் ஜேக்கப் ஹன்னா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த அவர், “ஆனால் இந்த முதல் மாதம் இன்னும் இருளாகவே உள்ளது. எங்களின் ஸ்டெம் செல்-பெறப்பட்ட மனித கரு மாதிரியானது, நெறிமுறை மற்றும் அணுகக்கூடிய வழியை வழங்குகிறது. இது ஒரு உண்மையான மனித கருவின் வளர்ச்சியை, குறிப்பாக அதன் நேர்த்தியான நுண்ணியக் கூறுகள் வெளிப்படுவதை நெருக்கமாக பிரதிபலிக்கிறது" என்றார்.
இந்த ஆய்வு நேச்சர் என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபிசி, விந்து மற்றும் முட்டைக்கு பதிலாக, இதன் அடிப்படைப் பொருள் ஸ்டெம் செல்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாகவும், அவை உடலில் எந்த வகையான திசுக்களாக மாறும் திறனைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மனித கருக்களின் ஆரம்ப கட்டங்களில் 4 வகையான செல்கள் கண்டறியப்பட்டன,
சரியான கருவாக மாறும் எபிபிளாஸ்ட் செல்கள்
நஞ்சுக்கொடியாக மாறும் ட்ரோபோபிளாஸ்ட் செல்கள்
கருப்பைக்கு சப்போர்டிவாக இருக்கும் ஹைப்போபிளாஸ்ட் செல்கள்
எக்ஸ்ட்ராஎம்பிரியோனிக் மீசோடெர்ம் செல்கள்
120 செல்களை ஒரு துல்லியமான விகிதத்தில் கலந்து பின்னர் முடிவுகளுக்காக காத்திருந்தனர் விஞ்ஞானிகள். ஆனால் இது மனிதக் கருவைப் போல் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த கருக்கள் ஆரம்பகால வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் திறனைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது செயற்கை கருத்தரித்தல் வெற்றி விகிதங்களை மேம்படுத்துவதற்கும், கர்ப்ப காலத்தில் மருந்துகளின் பாதுகாப்பை சோதிப்பதற்கும் பங்களிக்கும் எனக் கூறப்படுகிறது.