எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தடை செய்த பாரீஸ் நகரம்.. என்ன காரணம்..?
07 Sep,2023
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில், பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகர தெருக்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தடை செய்த முதல் ஐரோப்பிய தலைநகரம் என்ற பெயரையும் பாரீஸ் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை தருவதாக கூறி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என பாரீஸ் நகரத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 90 சதவிகிதத்தினருக்கும் மேற்பட்டோர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என அந்நகர மேயர் அன்னி ஹிடால்கோ கூறியுள்ளார். எனினும், வாக்கெடுப்பில் வெறும் 7.5 சதவிகித மக்களே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடையானது வாடகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதே சமயத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சொந்தமாக வைத்திருக்கும் நபர்கள் எந்தவித தடையுமின்றி ஓட்டிச் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு முதல் பல நிறுவனங்கள் பாரீஸ் நகரில் வாடகை மின்சார ஸ்கூட்டர்களை இயக்கி வருகின்றன.
இந்த வாடகை ஸ்கூட்டர்கள் குறித்து பல மாதங்களாகவே பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். பாதசாரிகள் செல்லும் நடைபாதையில் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்கிறார்கள் என்றும் சாலை சந்திப்புகளில் ஏடாகூடமாக தங்கள் சவாரிகளை இறக்கிவிடுகிறார்கள் என இவர்கள் மேல் புகார்கள் மலை போல் குவிந்தன. Tier, Lime மற்றும் Dott போன்ற நிறுவனங்கள் 15,000-க்கு மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பாரீஸ் நகரத்தில் இயக்கி வருகின்றன. 2022-ம் ஆண்டில் மட்டும் இந்த ஸ்கூட்டர் சேவையை 400,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தியுள்ளனர். எனினும், இவை பாதசாரிகளுக்கு மிகப்பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளதாக ஏற்கனவே முன்பொருமுறை பாரீஸ் மேயர் ஹிண்டால்கோ கூறியிருந்தார்.
வாடகை ஸ்கூட்டரை தடை செய்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “இதில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மெட்ரோ சேவைகள் இல்லாத போது இதில் பாதுகாப்பாக நம் வீட்டிற்குச் செல்லலாம். முதன் முதலில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பாரீஸ் நகரத்திற்கு அறிமுகமான புதிதில், இரவு நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா நேரில் வந்தது போல் இருந்தது. பலமுறை இதில் நண்பர்களோடு ஊர் சுற்றியுள்ளேன்” என நினைவுகூர்கிறார் பாரீஸ் நகரத்தில் வாழ்ந்து வரும் பிரபல அமெரிக்க இன்ஃப்ளுயென்சரான அமண்டா ரோலின்ஸ்.
வாடகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தடை செய்ததன் காரணமாக பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை சொந்தமாக வாங்கவோ அல்லது கவர்ச்சிகரமான எலெக்ட்ரிக் மோனோவீல்களில் பயணம் செய்யவோ முடிவெடுத்துள்ளனர். சொந்தமாக பைக் வாங்கும் பலருக்கு இந்த வாடகை ஸ்கூட்டர்தான் நுழைவாயிலாக இருந்து வந்தது.
மெட்ரோ அல்லது புறநகர் ரயில்களை விட இது வசதியாக இருந்தது. டாக்ஸியில் சென்றவர்கள் ஸ்கூட்டரில் செல்லத் தொடங்கினர். இது வந்தபிறகு பலரும் தங்கள் பர்சனல் கார்கள் பயன்படுத்துவதை கூட குறைத்தனர். இதன் காரணமாக கார்பன் மாசு உமிழ்வு கட்டுப்பாட்டிலும் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. சுற்றுச்சூழலில் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மின்சார ஸ்கூட்டர்கள் ஏற்படுத்தி வந்தாலும், ஜூலை மாதத்தில் மட்டும் இதில் சவாரி செய்த 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன.