கண் பார்வை இழந்து வாழும் விசித்திர குருட்டு கிராமம்!
03 Sep,2023
இது ஒரு பசுமையான மலைகளால் சூழப்பட்ட மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு அழகான கிராமம். ஆனால் அந்த அழகை கண்களால் ரசிக்க முடியாத துரதிஷ்டசாலிகள் அந்த கிராம மக்கள். ஏனென்றால் அந்த கிராமத்தில் யாரும் கண்ணால் பார்க்க முடியாது. அவர்கள் பிறக்கும் போது நன்றாக இருக்கிறார்கள். குழந்தை பருவத்திலும் கண்பார்வை நன்றாக இருக்கும். ஆனால் வயதாக ஆக அவர்கள் கண்பார்வை இழக்கிறார்கள். அவர்கள் குருடர்களாக மாறுகிறார்கள்.
இந்த கிராமத்தில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பார்க்க முடியாது. கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், அந்த கிராம மக்கள் அனைவரும் பார்வையற்றவர்களாக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். குச்சிகள், ஊன்றுகோல்களின் உதவியுடன் நடக்கின்றனர்.
இந்த கிராமத்தில் மனிதர்களும், விலங்குகளும் பார்வையற்றவர்களாக இருப்பதற்கு ஒரு 'மரம்' தான் காரணம் என்கிறார்கள் கிராம மக்கள்.
இருண்ட வாழ்க்கையோடு தங்கள் நாட்களைக் கழிப்பதால், இந்த கிராமம் குருட்டு கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிராமம் மெக்சிகோவில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் 'டில்டெபாக்'. இவர்கள் அனைவரும் பழங்குடியினர். இங்கு பிறக்கும் குழந்தைகள் முதலில் நன்றாக இருக்கும். ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க, பார்வை படிப்படியாக இழக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பார்வையை முற்றிலும் இழக்கிறார்கள். இதன் காரணமாக உலக அளவில் பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலைக்குக் காரணம் என்ன? என்று யாராவது கேட்டால் அது மரம் என்று ஊரார் சொல்வார்கள். இவர்களது ஊரில் சாபம் கொண்ட லவசுலா மரம் இருப்பதாகவும், அந்த மரத்தைப் பார்த்தால் கண்பார்வை பறிபோய்விடும் என்பது ஐதீகம். குறி பார்க்கும் மனிதர்களும் விலங்குகளும் கண்பார்வை இழக்கக்கூடும் என்று அம்மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் அது அவர்களின் அப்பாவித்தனம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பார்வையற்றோர் கிராமம் குறித்து விஞ்ஞானிகள் கருத்து: இக்கிராமத்தில் சிறப்பு இனத்தின் விஷ ஈக்களால் கண்பார்வை பறிபோவதாகக் கூறுகின்றனர். விஷ ஈக்கள் கொட்டுவதால் அங்கு வாழும் மக்கள், விலங்குகள் படிப்படியாக பார்வையை இழந்து வருவதாக கூறப்படுகிறது.
அவர்களை அந்தப் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மாற்ற மெக்சிகோ அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நல்ல வசதி செய்து தருவதாக கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பொதுவாக, பழங்குடியினர் தங்கள் பகுதிகளை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்ல விரும்ப மாட்டார்கள். இந்த கிராம மக்களும் அப்படித்தான். அவர்கள் அனைவரும் பழங்குடியினர்.தங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வருகின்றனர். அதனால்தான் அவர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல விரும்பவில்லை. அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் குடிசைகளில் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 70 குடிசைகள் உள்ளன. இதில் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள். இவர்களின் குடிசைகளுக்கு ஜன்னல்கள் கூட இல்லை என்பது ஆச்சரியம். இங்கு சிலருக்கு பார்வை திரும்பியதாகவும் நம்பப்படுகிறது. அதனால் அவர்களின் உதவியால் பிறர் வாழ உதவுகிறார்கள்.