அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக 4800 கிலோமீட்டர் தூரம் பயணித்து, இறுதியில் வேறொரு நபரின் திருமண நிகழ்வில் தவறுதலாக கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக 4800 கிலோமீட்டர் தூரம் பயணித்து, இறுதியில் வேறொரு நபரின் திருமண நிகழ்வில் தவறுதலாக கலந்து கொண்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆர்த்தி மாலா என்ற அந்த பெண் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் குறித்து அண்மையில் டிக் டாக் தளத்தில் வீடியோ மூலமாக பகிர்ந்து கொண்டார். இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், இந்திய வகை சைவ உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள தன்னுடைய நண்பர் கௌரவின் திருமணத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலமாக மாலா அந்நாட்டுக்குச் சென்றார். நண்பரின் திருமணம் நடைபெற இருந்த கிளாஸ்கோ நகருக்கு ஊபர் டாக்ஸி சேவை மூலமாக அவர் சென்றார்.
வீடியோவில் அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்ட டெக்ஸ்ட் செய்தியில், “3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களுக்கு (4800 கி.மீ.) அப்பால் பயணித்து இறுதியாக வேறொரு திருமணத்திற்கு நீ வந்திருக்கிறாய்” என்று குறிப்பிட்டிருந்தார். தான் தவறுதலாக வந்திருந்த இடம் குறித்து வீடியோவில் ஆர்த்தி மாலா காண்பித்தபோது, அங்கு கெய்ட்லின் மற்றும் ஸ்டீபன் –12/08/2023; இந்த சிறப்புமிக்க நாளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி” என்று எழுதப்பட்டிருந்தது.
முன்பின் தெரியாத மணமகன் மற்றும் மணமகளை பார்த்து ஆர்த்தி மாலா திகைத்து நின்ற போது, அவர்கள் இருவரும் தன்னை குளிர்பானம் அருந்துமாறு அழைப்பு விடுத்ததாக மாலா தனது பதிவில் கூறியிருந்தார்.
முன்னதாக, திருமண நிகழ்வு அரங்கிற்குள் நுழைந்தபோது அங்கிருந்த விருந்தினர்கள் யாருமே தனக்குத் தெரியாத புதியவர்களாக இருந்த போதிலும், தொலைதூரத்தில் இருந்து வந்திருப்பதால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டதாக மாலா தெரிவித்தார். பங்கேற்க இருந்த நண்பரின் திருமண விழா நடைபெற இருந்த இடமும், தவறுதலாக வந்து சேர்ந்த இடமும் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக மாலா கூறினார்.
திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆடம்பரமான ஆடைகளை மாற்றிக்கொண்ட பிறகு, அவசரமாக ஊபர் டாக்சி சேவையை மாலா புக்கிங் செய்தபோது, மற்றொரு ஏரியாவின் பெயரை குறிப்பிட்டு தவறுதலாக புக்கிங் செய்ததன் காரணமாக, நண்பரின் திருமண விழாவை தவறவிட்டு வேறொரு நபரின் திருமண விழாவுக்கு அவர் செல்ல நேர்ந்தது.
நண்பர்கள் மற்றும் தோழிகளின் இல்ல விசேஷங்களில் பங்கேற்பதற்காக நாமும் கூட வெகு தொலைவு பயணித்து சென்று, இறுதியாக காலதாமதம் காரணமாக அந்த நிகழ்வுக்கு சரியான தருணத்தில் சென்றடைய முடியாத அனுபவம் ஏற்பட்டிருக்கும். ஆனால் முற்றிலுமாக வேறொரு நிகழ்ச்சிக்கு சென்ற மாலாவின் அனுபவம் புதுமையானதாகதான் இருக்கிறது.