நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியத்தை வெளியிட்ட 111 வயது முதியவர்!
02 Sep,2023
யுகே-வை சேர்ந்த ஒரு முதியவர் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக நூறு வயதை தாண்டி சமீபத்தில் தான் தன்னுடைய 111வது பிறந்த நாளையும் அவர் கொண்டாடியுள்ளார்.
நம்மில் அனைவருக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்தவித நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக 100 வயது வரை வாழ்வது என்பது அனைவருக்கும் சாத்தியமற்ற ஒன்று. ஆனால் யுகே-வை சேர்ந்த ஒரு முதியவர் நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக நூறு வயதை தாண்டி சமீபத்தில் தான் தன்னுடைய 111வது பிறந்த நாளையும் அவர் கொண்டாடியுள்ளார்.
யூகே-வின் அதிக வயதான மனிதர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான ஜான் டின்னிஸ்வுட் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தன்னுடைய 111வது பிறந்த நாளை கொண்டாடினார். யூகே-வில் உள்ள லிவர்பூல் என்னும் இடத்தில் 1912 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலியாவிடமிருந்தும் இந்த முதியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது சவுத் போர்ட்டில் உள்ள ஒரு வீட்டில் இவர் வசித்து வருகிறார்.
111வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை பற்றி எவ்வாறு உணர்கிறார் என்ற கேள்விக்கு “110 வயது வரை வாழ்வதில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. கடந்த 10 முதல் 20 வருடங்களாகவே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது நீண்ட நாள் வாழ்வதற்குரிய ரகசியத்தை பற்றி கேட்டபோது “அளவாக இருப்பது” என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அளவாக இருக்க வேண்டும் படிப்பதும், உணவு உட்கொள்வதும், வாக்கிங் செல்வதும் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எதையும் செய்யக்கூடாது. அதே சமயத்தில் தேவையான அளவு உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அம்மனிதர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி தொலைக்காட்சியில் இந்த முதியவரின் 111வது பிறந்தநாள் கொண்டாட்டம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைனில் இதைக் கண்டு ரசித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பலரும் தனது வாழ்த்துகளை கூறி பதிவிட்டு வருகின்றனர். இதை பற்றி இணையதளவாசி ஒருவர் கூறுகையில் “இந்த மனிதர் நீண்ட நாள் வாழ்வது கடவுளின் அருளாகும். இதில் அதிர்ஷ்டத்தினால் எந்த ஒரு பயனும் இல்லை. அளவோடு இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்! அதை நான் முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன்! கடவுளை இவரை ஆசீர்வதிக்கட்டும்! என்று மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
மற்றொரு இணையதள வாசி தன்னுடைய பதிவில் “இவர் ஜீன்களைப் பற்றி மறந்துவிட்டார் போலும்! உங்களது குடும்பத்தில் எவரேனும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தார்கள் எனில் நீங்களும் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது. நீண்ட நாள் வாழ்வதற்கு ஜீன்களும் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது” என்று அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.