மீனுக்கு மனித பற்கள்... அதிர்ச்சியில் உறைந்த பெண்.!
01 Sep,2023
நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் எதிர்பாராமல் நடந்துவிடும். சில நேரங்களில் அது உங்களுக்கு அதிர்ச்சியை கூட ஏற்படுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் சமைக்க எடுக்கும் உணவு, உங்களை முறைத்துப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
இதெல்லாம் கனவில்தான் நடக்கும் என தட்டிக்கழிக்க முடியாது. ஏனென்றால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜத்தில் இப்படி நடந்துள்ளது. மற்ற நாட்களைப் போலவே அன்றும் அவர் சாதாரணமாக மதிய உணவை தயார் செய்து கொண்டிருக்கும் போது, விசித்திரமான ஒன்று அவரது கவனத்தை ஈர்த்தது. அவர் சமைக்க எடுத்து வைத்த மீனின் பற்கள் மனிதனுடைய பற்கள் போலவே இருப்பதை கண்டுணர்ந்த அவர், தன்னைப் பார்த்து அது சிரிப்பது போன்றும் அவருக்கு தோன்றியது.
இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளாத நிலையில், விசித்திரமான அந்த மீனின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் மரியா கிறிஸ்டினா குஸி. இவர் அருகிலுள்ள மீன் சந்தையிலிருந்து ஒரு கிலோவிற்கு பல வகையான மீன்களை வாங்கி வந்துள்ளார். மீனை சுத்தம் செய்யும் போதுதான் அவரது கண்ணில் ஏதோ வித்தியாசமாக தென்பட்டுள்ளது. அந்த மீனின் பற்கள் அப்படியே அச்சு அசலாக மனிதனின் பற்கள் போலவே இருந்தது. சிறிது நேரம் அந்த மீனையே பார்த்துக் கொண்டிருந்தவர், ஒருவேளை இந்த மீனால் தங்கள் குடும்பத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், அதை உடனடியாக தூக்கி எறிந்தார்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மரியா வாங்கியது பெரிய தலையுடைய கெண்டை மீனாகும். நண்ணீர் மீனான இது 60 இன்ச் நீளம் வரை வளரக்கூடியது. ஆனால் மரியா கூறுவது போல, இதன் பல் வரிசைகள் அந்தளவிற்கு வித்தியாசமாக எல்லாம் இருக்காது. இந்த மீனை பிலிப்பைன்ஸ் நாட்டில் இமெல்டா என அழைக்கிறார்கள்.
இப்படி மீனின் பற்கள் மனிதனுடைய பற்கள் போலவே இருக்கிறது எனக் கூறுவது இது முதன்முறை அல்ல. தென் அமெரிக்காவில் உள்ள பக்கூ மீன் குடும்பத்தைச் சேர்ந்த பல வகை மீன்களின் பற்கள் அப்படியே மனிதர்களின் பல் வரிசை போலவே இருக்கும். அதிலும் குறிப்பாக பிரானா வகை மீன்கள், இந்த பற்களை வைத்துக் கொண்டு மனிதர்களையும் கூட சில நேரங்களில் தாக்கும்.
இந்த வகையான மீன்களின் வீடியோக்கள் அடிக்கடி இணையத்திலும் வைரலாகும். குறிப்பாக இதைவிட பயங்கரமான மீன் ஒன்று மூன்று வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் பிடிபட்டது. இப்படி மனிதர்களைப் போன்ற பல் வரிசையும், உதடும் உள்ள வித்தியாசமான மீன்கள் நிஜத்திலும் இருக்கிறதா என கேட்கும் மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.