பாராசூட்டில் பறந்தபோது திடீரென சிக்கிக் கொண்ட கயிறுகள் -
01 Sep,2023
கெவின் பிலிப் என்ற பாராசூட் வீரர் வழக்கம் போல பாராசூட் பயணத்தை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரது பாராசூட்டில் உள்ள கயிறுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளத் தொடங்கின.
சாகச விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் பாராசூட் பயணத்தை நாம் அனுபவித்து இருக்காவிட்டாலும், நம்மில் பலர் ரோப் காரில் பயணித்திருப்போம். பாதுகாப்புடன் செல்கின்ற அந்த பயணத்தின் போது கீழே ஒரு கணம் குனிந்து பார்த்தால் நமக்கு பதற்றம் வந்துவிடும்.
ரோப் காரை விட உயரமான இடத்தில் இருந்து வருகின்ற பாராசூட் பயணம் எப்படி இருக்கும் என்று ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். நன்கு பயிற்சி பெற்ற பிறகே இது போன்ற பாராசூட் பயணங்களை வீரர்கள் மேற்கொள்வார்கள் என்ற நிலையில் அவர்களுக்கு அவ்வாறான பதற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.ஆனால் பாராசூட் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென்று ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த நொடி எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்வை குறித்து டிவிட்டர் என்ற எக்ஸ் தளத்தில் Enezator என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் ஓர்கான்யா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது. கெவின் பிலிப் என்ற பாராசூட் வீரர் வழக்கம் போல பாராசூட் பயணத்தை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரது பாராசூட்டில் உள்ள கயிறுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளத் தொடங்கின.
இதை சற்றும் எதிர்பாராத அவர் திணறிப் போனார். சுதாரித்துக் கொள்வதற்கு அவகாசம் எதுவும் பெரிய அளவில் இல்லை, பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாராசூட்டிலும் உள்ள மீட்பு பாராசூட்டை கெவின் பிலிப் இயக்குவதற்கு முயன்றார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. மீட்பு பாராசூட் அமைந்திருந்த இடத்தின் மீதும் கயிறுகள் பின்னி கிடந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது . பாராசூட் வழக்கமாக தரையிறங்கும் வேகத்தை காட்டிலும் பல மடங்கு கூடுதல் வேகத்துடன் தரையை நோக்கி பாயத் தொடங்கியது.
தரைக்கும், கெவின் பிலிப்புக்குமான இடைவெளி மிகக் குறைவாக இருந்த சமயத்தில் எப்படியோ முயற்சி செய்து மீட்பு பாராசூட்டை அவர் இயக்கி விட்டார். இதனால் பாராசூட்டின் வேகம் குறைந்து சற்று பத்திரமாக அவர் தரையிறங்கினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இது இறப்பதற்கான நாளாக எனக்கு அமையவில்லை, இது போன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கும் . நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான், உயர்ந்து பறந்து செல்லுங்க ஆனால் பத்திரமாக தரையிறங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை டிவிட்டர் பயனர்கள் பலரும் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மிகுந்த பதற்றம் கொண்ட சவால்களை எதிர்கொள்ளும் போது தான் நமக்குள் இருக்கும் உண்மையான வீரம் தெரியவரும் என்று டிவிட்டர் பயனாளர் ஒருவர் கூறியுள்ளார்.