சக்தி வாய்ந்த பென்குயின்ஸ ஒரு நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல்!
30 Aug,2023
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சக்தி என்பது உடல் பலத்தை வைத்து கணக்கிடப்படுவது கிடையாது. ஒருவர் வகிக்கும் பதவி, பொறுப்பு மற்றும் அதற்கு உண்டான அதிகாரம் ஆகியவற்றைப் பொறுத்து அவருடைய சக்தி கணக்கிடப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த கணக்கீடு இருந்தாலும், விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு இதே கணக்கீட்டை பொருத்த முடியுமா என்ற கேள்வி நமக்கு எழக் கூடும்.ஆனால், உலகின் பல பாதுகாப்பு படைகளில் நாய்களின் திறன் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றுக்கென தனிப்பட்ட பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் ஒரு நாட்டின் ராணுவ பிரிவில் இடம்பெற்று இருப்பதால் பென்குயின் ஒன்று உலகின் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் வசித்து வந்த சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.நார்வேஜியன் அரச பிரிவு படைக்கு தளபதியாக இந்த பென்குயின் செயல்பட உள்ளது.
எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் பென்குயின் தளபதியாக பொறுப்பேற்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் அந்தப் படைப் பிரிவை சேர்ந்த 150 வீரர்கள் கலந்து கொண்டனர்.வனவாழ்வு பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பிரத்தியேகமிக்க விழாவில் இந்த பென்குயினுக்கு மிக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.
ரீகல் பிளாக் (கருப்பு) நிறம் அதிகமாகவும், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் ஆங்காங்கே இடம்பெற்ற வகையிலும் பென்குயின் உள்ளது. நார்வேஜியன் அரச பிரிவு படைக்கு இதே நிறத்தில் தான் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் சீருடை வழங்கப்பட்டு வருகிறது. நில்ஸ் ஓலவ் என்ற பட்டம் இதற்கு முன்பு இரண்டு பென்குயின் பறவைகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது மூன்றாவது பென்குயின் பறவைக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் ராஜா அந்தஸ்தில் வருகின்ற பென்குயின் பறவைகளுக்கு நில்ஸ் ஓலவ் என்று பெயரிடப்படுவதன் பின்னணியில் சுவாரசியமான வரலாறு உள்ளது.இந்த விலங்கியல் பூங்காவில் முதன்முதலாக பென்குயின் பறவைகளைக் கடந்த 1972 ஆம் ஆண்டில் சேர்த்துக்கொண்ட ராணுவ தளபதி நில்ஸ் எகிலைன், நார்வே நாட்டின் முன்னாள் மன்னர் கிங் ஓலவ் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்கள் இருவரின் பெயர்களை சேர்த்து நில்ஸ் ஓலவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது தளபதி பட்டம் சூட்டப்பட்டுள்ள பென்குயின் பறவை, இதற்கு முன்பு ராணுவத்தில் பல கட்ட பொறுப்புகளை வெவ்வேறு காலகட்டங்களில் வகித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவும், பதவி உயர்வு அளிக்கும் வகையிலும் தற்போது தளபதி பட்டம் சூட்டப்பட்டுள்ளது.