.
சிங்கப்பூரில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் 3 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சிறிய தீவை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் பொது வாக்கெடுப்பாகவே இந்த தேர்தல் கருதப்படுகிறது.
இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்று அடுத்த அதிபராக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அவர் யார்?
அதிபர் தேர்தலில் தமிழர் உள்பட 3 பேர் போட்டி
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்களில் முன்னாள் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம்(66) என்பவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. ஆளும் மக்கள் செயல் கட்சியின் தேர்வாக அவர் கருதப்பட்டாலும், அதுகுறித்து அந்த கட்சி சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.
தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான்(75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
இந்த 3 பேரில் வெற்றி பெறும் வேட்பாளர், சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்பிடம் இருந்து பொறுப்புகளை ஏற்பார்கள்.
.
நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தங்களால், 2017-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது அவர் மட்டுமே போட்டியிடத் தகுதியானவராக இருந்தார். அந்த திருத்தத்தின்படி, குறிப்பிட்ட இனக்குழுவில் இருந்து தொடர்ந்து 5 தடவை யாரும் அதிபராகவில்லை என்றால் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார். 2017-ம் ஆண்டு 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அங்கே அரிதான நிகழ்வாக போராட்டங்கள் எழுந்தன.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா அல்லது யுராஷியன் வம்சாவளியினர் ஆவர்.
இந்த ஆண்டு அனைத்து இனக் குழுவினரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு சட்டம் பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பிறகு நடைபெறும் மூன்றாவது தேர்தல் இது. சிங்கப்பூரில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். 2016-ம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
1959-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது. அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தான் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். 2025-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்மசங்கடப்படுத்தும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால் அதுகுறித்த தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்னமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்னத்தை அதிபராக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 13-ம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமாவின் பதவிக்காலம் முடிவடையும் என்பதால் அதற்குள் தர்மன் சண்முகரத்னம் அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.