ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படை வீரர் கைதுஸ பின்னணி என்ன?
28 Aug,2023
பின்லேடனை கொன்றது குறித்து 2017-இல் ராபர்ட் ஓ நெய்ல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த தகவலை அமெரிக்க அரசு மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீதான தாக்குதலுக்கு மூளையாக அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் இருந்தார். அவர் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பின் லேடன் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அங்கு அரசு மாற்றம் ஏற்பட்ட சூழலில் பின் லேடன் தனது பதுங்குமிடத்தை பாகிஸ்தானுக்கு மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நேவி சீல் படை பிரிவினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது 2011-இல் பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை ராபர்ட் ஓ நெய்ல் என்ற வீரர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த ராபர்ட் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடிதடி வழக்கு ஒன்றில் ராபர்ட் கடந்த புதன் அன்று கைதாகியுள்ளார். அவர் மீது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், உடல் காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதை தொடர்ந்து 3500 அமெரிக்க டாலர் (ரூ.3 லட்சம்) ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். பின்லேடனை கொன்றது குறித்து 2017-இல் ராபர்ட் ஓ நெய்ல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த தகவலை அமெரிக்க அரசு மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016 ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.