ரஷ்யா லூனா 25 நாளை தரையிறங்குவதில் சிக்கல்!
20 Aug,2023
நிலவின் தென் துருவத்திற்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா திடீரென லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது. இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியதும் அதனுடன் போட்டி போட்டுக் கொண்ட ரஷ்யாவும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் விஞ்ஞானிகள் இதில் போட்டி என்று எதுவும் இல்லை குறிப்பிட்ட காலத்தில்தான் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்ப முடியும் என்பதால் ரஷ்யா கடந்த 11 ஆம் தேதி லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான் 3 விண்கலத்திற்கு பின்னர் அனுப்பப்பட்டாலும் அதற்கு முன்பே நிலவின் தென் துருவத்தில் லூனா 25 தரையிறங்கும் என கூறப்பட்டது.
சந்திராயனை விட பல மடங்கு வேகமாக சென்று நிலவை நெருங்கியது லூனா 25. இந்நிலையில் லூனா 25 விண்கலத்தை தரை இறக்குவதற்கான பணிகளை மேற்கொண்டது ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ். ஆனால் இந்த பணியின் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விண்கலத்தின் தானியங்கி பகுதியில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டப்படி லூனா 25 விண்கலத்தின் நகர்வை செயல்படுத்த முடியவில்லை என ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி நாளை லூனா 25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் ஆய்வு செய்ய லூனா 25 விண்கலத்தை ரஷ்ய அனுப்பியது. இந்த லூனா 25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி 15 சென்டி மீட்டர் ஆழத்திற்கு குழி பறித்து, அப்பகுதியில் உள்ள மண் மாதிரிகள் மற்றும் நீர் மூலக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லூனா 25 திட்டமிட்டப்படி நிலவில் தரையிறங்குமா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது.