ஒரு நாளுக்கு மட்டும் கணவன் - மனைவி.சீனாவில் அதிகரிக்கும் 'ஒரு நாள் திருமணம்'ஏன்
16 Aug,2023
உலகில் நடைபெறும் விநோதமான நிகழ்வுகளுக்கெல்லாம் சீனா முன்னோடியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்கள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் சீனாவில் இப்போது டிரெண்டாகி வருகிறது ஒருநாள் திருமணம். ஒரு நாள் திருமணமா? இது சாத்தியமா?என்று தானே கேட்கிறீர்கள். அதற்கான காரணத்தை கேட்டால் உங்களுக்கு புரியும்.
சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் இதுபோல ஒரு நாள் திருமணங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப்படி இவர்கள் ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.
அங்குள்ள வழக்கத்தின் படி திருமணம் செய்து கொண்டு மனைவி, மக்கள் என குடும்பதை சுமக்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது. இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்கத்திற்புக் போய் சேர முடியாது என்பது அவர்களின் நம்பிக்கை. இதனால் ஏற்படும் பாவம் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சொர்க்கத்தில் மூதாதையருடன் இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்.
இன்னொரு விநோதமான பழக்கத்தையும் வைத்துள்ளார்கள் சீனர்கள். அவர்கள் புதைக்கப்படும் போது சொர்க்கத்தில் தேவை என அவர்களுக்குப் பணத்தையும் தேவையான பொருட்களையும் கூட சேர்த்தே புதைக்கிறார்கள். இந்த நம்பிக்கையின் காரணமாகத் தான் அங்கு இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த 5, 6 ஆண்டுகளாக இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அங்கே அதிகரித்துள்ளதாம். முன்பு இங்கு உயிருடன் இருக்கும் நபர்கள் உயிரிழந்தோரைக் கூட இந்த சம்பிரதாயத்திற்காகத் திருமணம் செய்து கொள்வார்களாம். அதற்குப் பதிலாக இப்போது இவர்கள் இப்படி ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்படி ஒரு நாள் திருமணத்திற்காகவே அங்குத் தனியாக கம்பெனி எல்லாம் இருக்கிறதாம்.
இது குறித்து ஒரு நாள் திருமணங்களை ஏற்பாடு செய்யும் தரகர் ஒருவர் கூறுகையில், இப்போது இதுபோன்ற ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது. இதற்காகவே இங்குப் பல தொழில்முறை மணமகள்கள் உள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 3,600 யுவான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 41ஆயிரத்து 400 ரூபாய். இதுபோக தரகருக்கு தனியாக கமிஷன் 1,000 யுவான் கட்டணம் என்கிறார் அந்த தரகர்.
இந்த வழக்கத்தின்படி இருவருக்கும் திருமணம் நடக்கும். அப்படி தனக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்குக் தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்ப கல்லறைக்குச் செல்வார்கள். உள்ளூர் பெண்கள் இப்படி ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குகிறார்கள். இதனால் வெளியூரில் இருந்து பெண்கள் வரவழைக்கப்பட்டு ஒரு நாள் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களே பணத்திற்காக இதுபோல ஒரு நாள் திருமணங்களுக்குச் சம்மதம் தெரிவிக்கிறார்களாம். திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இதுபோன்ற ஒரு நாள் திருமணங்களைச் செய்து வருகிறார்கள். இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானது இல்லை. எல்லாமே வெறும் சடங்கிற்காகச் செய்யப்படுகிறதாம். திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ தான்.
சீனாவில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணம் என்கிறார்கள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கேர்ள் பிரண்ட் மற்றும் பாய் பிரண்ட்டை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை இருப்பது பற்றியும் நாம் ஏற்கனவே கட்டுரையாக வெளியிட்டிருப்பதை நினைவூட்டுகிறோம்.