போன் வாங்கி தரேன். சிறுமியை சீரழித்த அரசு ஊழியர்.. கட்டி வைத்து அடித்த மக்கள்..
14 Aug,2023
இலவச செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் நகரத்திற்கு அருகே உள்ள குன்சாய் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அருகிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார். மாணவியின் வீட்டிற்கு மாநில அரசின் குடிநீர் வழங்கல் துறையில் கேஷியராக பணியாற்றும் சுனில் குமார் ஜாங்கிட் என்பவர் கடந்த 10ஆம் தேதி சென்றுள்ளார். தந்தை ஜெய்ப்பூரில் உள்ள நிலையில், தாய் கூலி வேலைக்குச் சென்றுவிட்டதால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அங்கு சென்ற ஜாங்கிட் சிறுமியிடம் மாநில அரசு திட்டத்தின் கீழ், இலவச மொபைல் போன்கள் வழங்கப்படுவதாகவும், திட்டப் பட்டியலில் அவரது எண் வந்திருப்பதாகவும் நயவஞ்சகத்துடன் கூறினார். செல்போன் இருப்பு சீக்கிரம் தீர்ந்துவிடும் என்பதால், போனை வாங்கிச் செல்ல தன்னுடன் காரில் வரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
முதலில் தாயிடம் கேட்டுவிட்டு வருவதாக சிறுமி கூறியுள்ளார். ஆனால் செல்போன் வாங்கி வந்த பிறகு தாயிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், தனக்கு நடக்க இருக்கும் கொடூரத்தை அந்த சிறுமி அறிந்திருக்கவில்லை. செல்போன் வாங்க அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள ஊரில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சுனில். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த சிறுமி அலறவே கத்தியால் கைகளில் தாக்கியுள்ளார். தன்னை விட்டுவிடுங்கள் என்று சிறுமி கெஞ்சியபோதும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த விவரங்களை தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதுதொடர்பாக அவரது தந்தை கரோலி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதனிடையே ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் சுனிலை பிடித்து குடிநீர் வழங்கல் அலுவலம் முன்பு உள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துவைத்து பின்பு அவரை விடுவித்தனர். ஆனால், குற்றவாளியை போலீஸாரிடம் ஒப்படைக்காததால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
சுனில் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கரோலி காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். இதனிடையே அரசுப் பணியிலிருந்து சுனிலை இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.