37 ஆண்டுகளாகியும் அழுகாத மனித சடலம் .
11 Aug,2023
உலகில் மிகவும் சுவாரஸ்யமான அதே நேரம் மிகவும் ஆபத்தான விளையாட்டுகளுள் ஒன்று மலை ஏறுதல். உலகின் மிக முக்கியமான மற்றும் அதிக உயரமான மலைச்சிகரங்களில் ஏறுவது தான் சாதனை. அப்படி கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரம் உள்ள மலைச்சிகரங்கள் எப்போதுமே பனியால் சூழப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட சீதோஷ்ன சூழ்நிலையில் மலையேறுவது என்பது மிகவும் சவாலான ஒன்று.
.
அப்படி மலையேறும் போது, இயற்கை சீற்றம், மனித தவறுகள், உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பதும் உண்டு. அப்படி உயிரிழந்தால் சடலத்தை கீழே கொண்டு வருவதே கடினம். அங்கேயே சடலத்தை விட்டு வருவதும் வழக்கம். அவ்வாறு 37 ஆண்டுகளாக பனிக்குள் புதைந்திருந்த சடலம் ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் சிகரத்தின் தென்கிழக்கே பனிப்பாறையில் தான் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உடல் துளி கூட அழுகிப் போகாமல் அப்படியே இருந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் அது 37 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரின் சடலம் என்பது உறுதியாகியுள்ளது.
.
புவி வெப்ப மயமாதல் காரணமாக இதுபோல பல இடங்களில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருகிறது. பல காலமாகப் பனியால் சூழ்ந்து இருந்த இடங்களும் கூட இப்போது உருக ஆரம்பித்துள்ளன. இதனால் கடந்த சில காலமாகவே இதுபோல பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலையேறும் வீரர்கள், பனிச்சறுக்கு வீரர்களின் உடல்கள் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளது.
.
இப்போது கண்டறியப்பட்ட நபர் 1986 செப்டம்பரில் மாயமானவர் என்றும், அவர் 38 வயதான ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இவர் மாயமான போதே தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துள்ளது. இருப்பினும், பல நாட்கள் ஆன பிறகும் அவரது சடலத்தைக் கண்டறிய முடியாத நிலையில், தேடும் பணி கைவிடப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது. பனி உருகியாதால் இந்த சடலம் வெளியே தெரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.
இத்தாலிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பனியால் சூழப்பட்ட தியோடுல் மலையில் சில மலையேற்ற வீரர்கள் ஏறும் போது, இவரது உடலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சடலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரபணு சோதனையில் அவர் யார் என்பது உறுதியானது. இருப்பினும், அவர் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.