சத்தமான ஏப்பம் விட்டு உலக சாதனை படைத்த அமெரிக்க பெண்
08 Aug,2023
நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏப்பம் விடுவதை மோசமான செயலாகவே பார்க்கிறார்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் போது, நமக்கு ஏப்பம் வந்தால் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கிம்பர்லி “கிமிகோலா” விண்டர் அப்படியானவர் அல்ல. ஏப்பம் விடுவது என்பது அவரைப் பொறுத்தவரை மகிழ்ச்சியை தரக் கூடியது. வழக்கமாக இவர் எப்போதுமே மிகவும் சத்தமாக ஏப்பம்விடும் பழக்கம் உடையவர். சமீபத்தில் இவர் ஒரு உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே (பெண்கள் பிரிவில்) அதிக சத்தத்துடம் ஏப்பம் விட்டவர் என்ற சாதனையை படைத்துள்ளார் விண்டர்.
இவரது ஏப்ப சத்தம் 107.3 டெசிபல் அளவை எட்டியுள்ளது. இதற்கு முன்பு, 2009-ம் ஆண்டு, இத்தாலியைச் சேர்ந்த எலிஸா க்கோனி என்ற பெண் 107 டெசிபல் அளவு ஓசையில் ஏப்பம் விட்டதே சாதனையாக இருந்தது. ஆண்கள் பிரிவை எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவிலி ஷார்ப் என்பவர் 2021-ம் ஆண்டு 112.7 டெசிபல் அளவிற்கு ஏப்பம் விட்டதே உலக சாதனையாக இருக்கிறது.
விண்டரின் ஏப்ப சத்தம் மிக்ஸி சத்தத்தை விடவும் (70-80 டெசிபல்), எலெக்ட்ரிக் ட்ரிலிங் மெஷின் (90-95 டெசிபல்) ஓசையை விடவும், மோட்டார் பைக்கை முழுதாக முறுக்கும் போது (100-110 டெசிபல்) வரும் ஓசையை விடவும் அதிகமாக இருந்ததாக கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறியுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்வதற்காக, விண்டரை சவுண்ட் ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வரவழைத்து, அங்கு அவரை ஏப்பம் விடுமாறு கூறினர். ஏனென்றால் அப்போதுதான் வேறு சத்தங்கள் எதிரொலிப்பது பதிவாகாது. iHeartRadio நிலையத்திலுள்ள ஸ்டூடியோவிற்கு வருகை தந்த விண்டர், டிஜே எலியட் சீகல் நடத்தும் பிரபலமான ரேடியோ டாக் ஷோவான “எலியட் இன் த மார்னிங்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பும் போதுதான் ஏப்பம் விடும் தனது சாதனை முயற்சியை பதிவு செய்தார் விண்டர்.
சத்தமாக ஏப்பம் விடுவதற்கு வசதியாக காலை பிரேக்ஃபாஸ்ட் உணவோடு சேர்த்து காஃபியும் பீரும் குடித்து வந்தேன் என கூலாக பேசுகிறார் விண்டர். சிறு வயதாக இருக்கும் போதே விண்டரின் ஏப்ப ஓசை மிகவும் சத்தமாக இருந்துள்ளது. இதை விண்டரும் உணர்ந்திருக்கிறார். இதன் காரணமாக பொது இடங்களில் இவருக்கு அவமானமே ஏற்பட்டுள்ளது. ஆனால் யூடுயூபிலும் டிக் டாக்கிலும் இவரது வித்தியாசமான திறமைக்கு பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
இவருடைய ஏப்பம் ஒன்பது நொடிகள் நீள்கின்றன. உலகின் நீண்ட ஏப்பம் என்ற சாதனையை மைக்கேல் ஃபர்கோய்ன் என்பவர் 2009-ம் ஆண்டு படைத்துள்ளார். இவரது ஏப்பம் ஒரு நிமிடம் 13 நொடிகள் நீடித்துள்ளது. ஆனால் விண்டர் இந்த சாதனையை முறியடிக்க ஆர்வம் காட்டவில்லை. “என்னுடைய ஏப்பம் நீண்ட நேரம் நீடிக்காது. எனக்கு சத்தம் தான் பலம். இதை நான் பெருமிதமாக கருதுகிறேன்” என்கிறார்