உலகில் மிக நீண்ட ஆயுளை கொண்ட மனிதர்கள் வாழும் அதிசய தீவு!
02 Aug,2023
மனிதர்களின் ஆயுட்காலத்தின் அவர்களின் வாழ்வியலை பொறுத்து மாரிக்கொண்டே இருக்கும். கடந்த 50 ஆண்டுகளில் இருந்ததை விட, தற்போது ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது என்று சமீபத்திய அறிக்கைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த 1960 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அளித்த தரவில் அப்போதைய மனிதனின் சராசரி ஆயுட்காலம் 52 ஆகும். தற்போது அது 72 ஆக அதிகரித்துள்ளது.
புராண இதிகாசங்களிலும் மனிதனுடைய ஆயுள் காலத்தை பற்றிய கூற்றுகளை நம்மால் காண முடியும். குறிப்பாக இந்து மதத்தின் வேதங்களின் அடிப்படையில் சத்ய யுகம் மற்றும் துவாப்பர யுகத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆயுட்காலத்தை விட தற்போது கலியுகத்தில் வாழும் மனிதனின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகும். அப்போது வாழ்ந்த மனிதர்கள் கிட்டத்தட்ட 200 வருடங்கள் வரை வாழ்ந்தார்கள் என்று நம்பப்படுகிறது.
ஆனால் இதற்கு முன்னர் இருந்த யுகத்தைப் போலவே, தற்போதும் உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும், அதிக அளவிலான சராசரி ஆயுட்காலத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம்! ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு “மரணமில்லாதவர்கள் வாழும் இடம்” அல்லது “அமரர்கள் வாழும் தீவு” என அழைக்கப்படுகிறது. ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது.
உலகில் அதிக ஆயுட்காலத்துடன் ஆரோக்கியமான மனிதர்கள் வாழும் பகுதி “ப்ளூ சோன்” என அழைக்கப்படுகிறது. உலகில் மொத்தம் உள்ள ஐந்து “ப்ளூ சோன்” களில் ஜப்பானின் இந்த ஒகினாவா தீவும் ஒன்றாகும். உலகில் வேறு எங்கேயும் இருப்பதைவிட ஒக்கினாவா தீவில் தான் நூறு வயதை தாண்டிய மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த தீவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகளாகும். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80.27 ஆண்டுகளாகும்.
யுட்யூப் பிளாகர் ஆன ட்ரு பின்ஸ்கி என்பவர் இந்த தீவிற்கு சென்று, இந்த தீவை பற்றிய பல்வேறு ரகசியங்களை வெளியுலத்திற்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த தீவில் வாழும் மக்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பது தான் ரகசியம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டே இருப்பார்களாம் இதுதான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியமாம்.
மேலும் அங்கு வாழும் மக்களின் உணவு முறையும் அவர்களின் நீண்ட கால ஆயுளுக்கான ரகசியமாக உள்ளது. கடற்பாசி, பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவை இவர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக ட்ரூ கூறியுள்ளார்.