பார்ப்பதற்கு திராட்சை பழம் போன்று இருக்கும் இந்த கனி ‘கேசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. புதர்ச் செடிகளில் விளையும் சிறு உருண்டை வடிவ கருநிறக் கனி வகையான இது பிரிட்டனில் அதிகம் சுவைக்கப்படுகிறது. உடல் நலத்திற்கு தேவையான பல்வேறு சத்துகளை கொண்டுள்ள இந்த பழம் தற்போது இந்திய சந்தைகளிலும், ஆன்லைனிலும் கிடைக்கிறது.
ஆரஞ்சு பழத்தை விட இதில் வைட்டமின் சி சத்து நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் செல்களைப் பாதுகாக்க பயன்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் எனும் சத்தும் கேசிஸ் பழத்தில் நிறைந்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எதிர்காலத்தில் சில வகை மருந்துகள் தயாரிப்பில் இந்த பழங்களில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் பயன்படுத்தப்படலாம். மனித மூளையின் செயல்பாடு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் உலர்த்தப்பட்ட கேசிஸ் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலியல் பிரச்னைக்கு தீர்வா?
இந்த ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்க, கேசிஸ் பழம் தொடர்பான மற்றொரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டார் பிரிட்டனின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான எடின் காசிடி. பாலியல் புணர்வின் போது ஆண்குறி விரைப்புத்தன்மையில் சில ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு இயற்கை முறையிலான தீர்வு இந்த பழத்தில் உள்ளதா என்பதுதான் காசிடி மேற்கொண்ட ஆராய்ச்சி.
ஆண்குறி விரைப்புத்தன்மை இல்லாமல் போவதற்கு பெரும்பாலோருக்கு பிறப்பு உறுப்புக்கு சீரான அளவு இரத்த விநியோகம் இல்லாமல் போவதே காரணமாக உள்ளது. கேசிஸ் பழத்தில் உள்ள அந்தோசயினின்கள் (ஆன்ட்ஆக்ஸிடன்ட்களின் தொகுப்பு), ஃபிளாவனாய்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் சில ஆண்களுக்கு உள்ள முக்கியமான இந்த பிரச்னையை போக்க வல்லது என்கிறார் பேராசிரியர் எடின் காசிடி.
“இந்த பழத்தை உட்கொள்பவரின் ரத்த நாளங்கள் சிறிதளவு திறக்கப்பட்டு ஆண்குறிக்கு செல்லும் இரத்த விநியோகம் மேம்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்கிறார் அவர்.
“இதுதொடர்பான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த பத்து ஆண்டுகளில் 25 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் கேசிஸ் பழத்தை வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உட்கொண்டவர்களுக்கு ஆண்குறி விரைப்பின்மை பிரச்னை, இந்தப் பழத்தை சுவைக்காதவர்களை ஒப்பிடும்போது 19 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது” என்கிறார் காசிடி.
பிற மருத்துவ பயன்கள் என்ன?
உடம்பில் இரத்த விநியோகத்தை சீராக்குவதை தவிர, கேசிஸ் பழத்தில் உள்ள அந்தோசயினின்களால் வேறெந்த மருத்துவ பயன்கள் உள்ளன என்பது குறித்து கடந்த தசாப்தங்களில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“மனித இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், அறிவுசார் திறனை மேம்படுத்துவதிலும் இந்த வேதிப்பொருட்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பார்க்கின்சன் நோய்க்கு ஆளானவர்களுக்கும் இந்த பழம் நன்மை பயக்கக் கூடியது” என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறார் பேராசிரியர் எடின் காசிடி.
எடின் காசிடியை போலவே, சிசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்க் வில்லியம்ஸும், கேசிஸ் பழத்தின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, உலர்நிலையில் இந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடியின் மருத்துவ பயன்கள் குறித்து ஆய்வு செய்தார்.
“சிறு சதைப்பற்றுள்ள விதைகளை உள்ளடக்கிய பிற கனிகளை ஒப்பிடும்போது கேசிஸ் பழத்தில் உடல் நலம் சார்ந்த நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதற்காக இதை சிறந்த உணவு வகை (சூப்பர் ஃபுட்) என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற விதைப் பழங்களை ஒப்பிடும்போது கேசிஸ் பழங்கள் சிறந்தவை” என்கிறார் வில்லியம்ஸ்.
“முதியவர்களுக்கு ஏற்படும் நரம்பு விரைத்தல் பிரச்னையை குறைப்பதற்கு இந்த கருநிற பழம் பயன்படுகிறது என்று ஜப்பானிய நிப்பான் விளையாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் மேற்கொள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்கிறார் அவர்.
ரத்த நாளங்கள் விறைத்து கடினமாகி போனால், அவை பெரிதாவதிலும், விரிவடைவதிலும் சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக உடலின் இரத்தம் அழுத்தம் பாதிக்கப்படும் என்கிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.
கேசிஸ் பழத்தின் மருத்துவ பயன்கள் குறித்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நரம்பு பிரச்னை கண்டறியப்பட்ட முதியவர்களுக்கு ஏழு நாட்கள் இந்த பழத்தின் சாறு கொடுக்கப்பட்டது. அதன் பயனாக அவர்களின் நரம்பு கடினமாகும் தன்மை குறைந்திருந்தது பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்ததாக கூறுகிறார் வில்லியம்ஸ்.
இந்த பழத்தின் கொட்டைகள் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மற்றொரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதேநேரம், நடைபயணம் அல்லது உடற்பயிற்சி மேற்கொண்ட பின் கேசிஸ் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியை உட்கொண்டால், அதன் மூலம் தசைப் புண்கள் ஆறாது என்றும் கூறுகிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.
கேசிஸ் பழத்தின் கொட்டைகள் மலையேற்ற வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது
உடல் துர்நாற்றத்தை குறைக்குமா?
கேசிஸ் பழத்தின் பொடி மனித உடலில் உண்டாகும் துர்நாற்றத்தை குறைக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
45 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடம்பில் இருந்து ஒருவித வாயு வெளியேறுகிறது. தோலில் ஏற்படும் ஒருவித வேதிவினையின் விளைவாக, இன்னும் வயது கூட, கூட துர்நாற்றம் வீசும் வாயு வெளியேறும் அளவும் அதிகரிக்கும் என்கிறார் மார்க் வில்லியம்ஸ்.
“இந்த உடல்நல பிரச்னைக்கு ஆளான 55 வயதுக்கு மேற்பட்ட 14 பேரை வில்லியம்ஸ் குழுவினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களுக்கு கேசிஸ் பழப் பொடி தொடர்ந்து ஏழு நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பயனாக, அவர்களின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசும் வாயு வெளியேறும் அளவு 25 சதவீதம் குறைந்திருந்தது தெரிய வந்தது” என்கிறார் அவர். கேசிஸ் போன்ற இன்னும் பிற விதையுடன்கூடிய சதைப் பற்றுள்ள பழங்களை கொண்டு இதுதொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்றும் கூறுகிறார் வில்லியம்ஸ்.
சஞ்சீவனி மருந்து அல்ல
கேசிஸ் பழத்தில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இரத்த ஓட்டம், நரம்பு சம்பந்தமான சில பிரச்னைகள் உள்ளிட்டவற்றை தீர்க்கவோ, குறைக்கவோ பயன்படுகிறது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக உடல் ரீதியான எல்லா பிரச்னைகளையும் தீர்க்க கூடிய சஞ்சீவினி மருந்தாக இதை சிலர் கருதுகின்றனர். “ஆனால் எல்லா விதமான உடல் பிரச்னைகளுக்கும் கேசிஸ் பழத்தை மருந்தாக பார்க்க கூடாது; இதுபோன்ற விஷயங்களில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் மார்க் வில்லியம்ஸ்.
அத்துடன் கேசிஸ் பழத்தின் மருத்துவ பயன்கள் குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்ப நிலையில் தான் உள்ளதாக கூறும் அவர், இது தொடர்பாக இன்னும் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது என்கிறார்.
தற்போதைய நிலையில், “எல்லோராலும் வாங்க முடியாத அளவுக்கு கேசிஸ் பழத்தின் விலை சற்று அதிகம் தான் உள்ளது” என்றும் கூறுகிறார் மார்க் வில்லியம்ஸ்.