நண்பர்கள் 12 பேரை விஷம் கொடுத்து கொன்றாரா இளம்பெண்... அதிர்ச்சியில் காவல்துறை
01 May,2023
தாய்லாந்து நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 12 நண்பர்களை கொலைசெய்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
32 வயதான சரரத் ரங்சிவுதபோர்ன் என்ற பெண் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் 33-ல் இருந்து 44 வயதுடைய 12 பேரைக் கொலை செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நண்பருடன் இணைந்து ரட்சபுரி மாகாணம் பகுதியில் உள்ள நதியில் ஆன்மீக வழிபாடு செய்யச் சென்றுள்ளனர். அப்போது அவர் நதியில் தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை செய்த போது, இறந்தவரின் உடலில் சயனைடு எனப்படும் விஷம் கண்டறியப்பட்டது.
இந்த விஷம் உடலில் செலுத்துவதனால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கக்கூடும். இதனால், அவருடன் அப்போது உடனிருந்த நண்பரான சரரத் ரங்சிவுதபோர்னை விசாரணை நடத்தியதில், அவரை விஷம் கொடுத்த கொன்றது இவர் தான் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவரின் நண்பர்களில் 12 பேர் ஒரே மாதிரியான முறையில் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதில் சிலரின் உடலில் சயனைடு கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சரரத் ரங்சிவுதபோர்ன் மேல் சந்தேக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணத்திற்காகத் தான் இவர் இந்த கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினர் இவர் மேல் புகார் அளிக்கவில்லை. இவர் மேல் கூறப்படுகிற குற்றங்கள் உண்மையாக்கப்பட்டால் தாய்லாந்தின் பெரிய சீரியல் கில்லராக இவர் அறிவிக்கப்படுவார்.