ஊட்டி மாணவி ஓட்டலில் அடைத்து பாலியல் வன்கொடுமை!
30 Apr,2023
கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக உதவி கேட்ட மாணவியை இருவர் ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்த ஆங்கிலோ இந்தியன் இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். தாய் – தந்தை இருவரும் பிரிந்து விட்ட நிலையில் கோவையில் தனி அறை எடுத்து தங்கி படித்து வரும் அந்த மாணவி அவ்வபோது நண்பர்கள் உதவியுடன் கல்வி கட்டணம் செலுத்தி படித்து வந்துள்ளார்.
அவ்வாறாக கல்வி கட்டண உதவிக்காக சக மாணவர்களிடம் கேட்டபோது ஒரு மாணவர் வழியாக ராஜேஷ், ரவீந்திரன் என்ற இருவர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர். கல்வி உதவி செய்வதாக கூறி மாணவியை கோவையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு அழைத்து சென்ற அவர்கள் அங்கு மாணவியை அடைத்து வைத்து 3 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
எப்படியோ அங்கிருந்து தப்பித்த மாணவி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜேஷ், ரவீந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் ஊட்டி சாலையில் வாகன சோதனையின்போது தப்பி ஓட முயன்ற ராஜேஷ், ரவீந்திரனை போலீஸார் துரத்தி சென்றனர். அப்போது கீழே விழுந்ததில் ராஜேஷ், ரவீந்திரனுக்கு கை, கால்கள் உடைந்தன. அவர்களை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், குணமானதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.