ஒப்புதலுடன் உறவு கொண்டால் கிரிமினல் குற்றம் அல்ல.. ஐ.நா அறிக்கை.!
24 Apr,2023
தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட LGBTQ சமூகத்தினர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. வழக்கின் வாதங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
இந்த நிலையில் பாலியல் உறவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை சார்பில் வெளியிட்டுள்ள ஆய்வுகள் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளன. அதன்படி, இருவரும் ஒருமித்த கருத்துடன் பாலியல் உறவில் ஈடுபடும்போது, அது கிரிமினல் குற்றம் அல்ல.
அந்த உறவு பால், பாலினம், பாலியல் சார்பு என எந்த விதத்தில் இருந்தாலும் அது ஒருமித்த கருத்துடன் இருக்கும் போது அது கிரிமினல் குற்றம் அல்ல. எனவே, திருமணத்தின் மூலமாகவோ, திருமணத்திற்கு முன்னரோ, திருமணத்திற்கு பின்போ மாறுபட்ட பாலியல் உறவில் இருந்தாலும் அது ஒருமித்த கருத்துடன் இருக்கும் போதும் கிரிமினல் குற்றமல்ல என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கையாளர் திருணம் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஐநாவின் இந்த அறிக்கை கவனம் பெற்றுள்ளது. தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்குவதில் மாநில அரசுகளின் கருத்துகள் முதலில் கேட்கப்பட வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 10 நாட்களுக்குள் மாநில அரசுகள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.