1,000-க்கும் மேற்பட்ட நாய்களை உணவளிக்காமல் சாகடித்த கொடூர நபர்.. தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்!
10 Mar,2023
தென்கொரியாவில் நாய்கள் பராமரிப்பு முகாம் என்ற பெயரில் நாய்களை வாங்கி அதற்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு கொலை செய்யும் கொடூர அரக்கரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சடலங்களையும் தூக்கி வீசாததால் கூண்டிலேயே அழுகி மக்கும் அவல நிலையும் உருவாகியுள்ளது.
தென்கொரியாவில் வடமேற்கில் அமைந்திருக்கும் கியாங்கி மாகாணத்தில் உள்ளது யாங் பியாங் நகர். இந்த நகரில் வசித்து வரும் நபர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயை காணவில்லை என்று ஒவ்வொரு வீடாக சென்று தேடியிருக்கிறார். அப்போது ஒரு வீட்டில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருவதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.
அந்த வீட்டில் சாக்கு பைகள், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகளில் ஆயிரக்கணக்கில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போட்டு படுகொலை செய்யப்படுவதை பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். பல நாட்களாக, பல வருடங்களாக இப்படி நாய்கள் கூட்டம் கூட்டமாக கொடுமைப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதால் சில நாய்கள் எலும்புக்கூடுகளாக இருந்திருக்கின்றன.
சில நாய்கள் சதைகள் எல்லாம் அழுகி அந்த கூண்டுகளில், சாக்குப்பைகளில், ரப்பர் பெட்டிகளில் கிடந்திருக்கின்றன. பல நாய்கள் தண்ணீர், உணவு இல்லாமல் நோய் வாய்ப்பட்டு எழக் கூடிய முடியாமல் கிடந்திருக்கின்றன. இதை பார்த்து பதறிப்போன அந்த நபர் உடனடியாக விலங்குகள் ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து அங்கு விசாரணை செய்த போது தான், அந்த வீட்டில் உள்ள 60 வயது நபர் தான் நாய்களை இப்படி அடைத்து வைத்து படுகொலை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து மூன்று வருடங்களாக இந்த கொலைபாதகச் செயலை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
நாய்கள் பராமரிப்பு இல்லம் என்கிற பெயரில் பராமரிப்புத் தொகையையும் வாங்கிக்கொண்டு உரிமையாளர்களிடம் நாயை வாங்கிய பின்னர் அவற்றை இப்படி பட்டினி போட்டு கொலை செய்து வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்த நாய்கள் மீட்கப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் நடுநடுங்க செய்கிறது.