மீன் மழை? வானில் இருந்து கொட்டிய மீன்கள்!
26 Feb,2023
ஆஸ்திரேலியாவில் 4வது முறை மீன் மழை பொழிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அப்பகுதி மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
சாதாரண மழை மற்றும் ஆலங்கட்டி மழை என்பது வழக்கமான நிகழும் நிகழ்வு என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மீன்மழை பொழிவது என்பது மிகவும் அரிதான ஒரு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. கடலில் இருந்து அல்லது ஆற்றில் இருந்து திடீரென மேகங்கள் தண்ணீரை உள்ளிழுக்கும்போது மீன்களும் சேர்த்து இழுக்கப்படும் என்றும் அவை மேகங்கள் ஆகி குளிர்ந்து மழையாக பொழியும்போது மீன்களும் மழையுடன் சேர்த்து வானத்திலிருந்து கீழே விழும் என்பது தான் மீன் மழை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக அரிதாகவே இந்த மீன் மழை பொழிந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் நான்கு முறை மீன் மழை பொழிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கேத்தரின் என்ற பகுதியில் பாலைவன பகுதியில் எல்லை அருகே திடீரென மீன் மழை பொழிந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கடந்த 1974, 2004 2010 ஆகிய ஆண்டுகளில் மழை பொழிந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் மீன்மழை பொழிந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீன்மழையில் விழுந்த மீன்கள் அனைத்துமே உயிருடன் இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் மீன்களை வளர்ப்பதற்காக அந்த மீன்களை சேகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடுமையான மழைக்கு மத்தியில் வானத்திலிருந்து மீன்கள் சாரை சாரையாக விழும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
வானிலை நிபுணர்கள் இது குறித்து மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தொடர்ச்சியாக மீன் மழை பெய்வது எப்படி என்று ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.