தோள்பட்டைவலிகான சிகிச்சை
14 Jan,2023
எம்மில் சிலருக்கு கைகளில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பிறகோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தோள்பட்டையில் வலி ஏற்படும்.
பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்தகைய தோள்பட்டை வலி அதிகளவில் உண்டாகிறது. இதனை மருத்துவத்துறை 'ஃப்ரோஸன் ஷோல்டர்' எனப்படும் உறைந்த தோள்பட்டை வலி என வகைப்படுத்துகிறது.
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றாலும், தைரொய்ட் எனும் சுரப்பியின் செயற்பாடு சமச்சீரற்ற நிலையில் இருந்தாலும், விபத்து காரணமாக மாதக்கணக்கில் கைகளை அசைவில்லாமல் வைத்திருந்தாலும், வேறு சில காரணங்களினாலும் இத்தகைய தோள்பட்டை வலி உண்டாகிறது.
சிலருக்கு இது தொடக்க நிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், நாளடைவில் தோள்பட்டையை அசைக்க இயலாத அளவில் வலியை உண்டாக்குகிறது. இதன் காரணமாக நாளாந்த செயற்பாட்டில் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்காக மருத்துவர்களிடம் முறையான சிகிச்சையை பெற வேண்டும்.
மருத்துவர்கள் தோள்பட்டையினை எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பரிசோதித்து, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, உரிய மருந்துகளையும் இயன்முறை சிகிச்சைகளையும் வலி நிவாரண சிகிச்சையாக பரிந்துரைப்பர்.
இத்தகைய சிகிச்சைகளை தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை மேற்கொண்டால், தோள்பட்டை வலியிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம். சிலருக்கு மட்டும் அரிதாக சிகிச்சைக்குப் பின்னரும் வலி நீடித்தால், அவர்களுக்கு மேலும் சில பரிசோதனைகளை செய்து, கீ ஹோல் அறுவை சிகிச்சை எனப்படும் நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் தோள்பட்டை பகுதியின் தசைகளில் இருக்கும் அழுத்தம் நீக்கப்பட்டு, வலி குறைக்கப்படுகிறது.
இத்தகைய பாதிப்பு வராமல் தடுக்க வேண்டும் என்றால், நாற்பது வயதுக்கு மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவினையும் தைரொய்ட் சுரப்பியின் செயல்திறனையும் பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் நாளாந்தம் நடைபயிற்சியுடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.