கடந்த தசாப்தங்களில் ஐம்பது அல்லது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் இடுப்பு வலி என்பது ஏற்படும். ஆனால் தற்போது இருபத்தைந்து வயதுள்ள இளைஞர்களும் இடுப்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.
இடுப்பு வலியை உடனடியாக அவதானித்து, அதற்குரிய ஆலோசனையையும், சிகிச்சையும் பெற வேண்டும். இதனை தவிர்த்தால் நாளடைவில் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி, உங்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குரியதாக்கிவிடும்.
இன்றைய சூழலில் இளைய தலைமுறை துவிசக்கர வண்டிகளில் விரைவாக பயணிக்கிறார்கள். அதிலும் துவிசக்கர வண்டிகளின் வடிவமைப்பு இளைஞர்களின் முதுகு மற்றும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
மேலும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு பிரதான காரணம் முதுகு தண்டுவட பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் வலிமை வாய்ந்த தசைகளை, அதன் இயல்பான அளவைவிட கூடுதலாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.
வேறு சிலருக்கு தண்டுவட எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் அரிய பாதிப்பின் காரணமாகவும் இடுப்பு வலி உண்டாகலாம். வேறு சிலருக்கு அவர்கள் அணிந்திருக்கும் குதி உயர்காலணியின் காரணமாகவும், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் இடுப்பு வலி உண்டாகும்.
இடுப்பு வலியை வராமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் ஸ்டண்ட் ஸ்மார்ட், ஸிட் ஸ்மார்ட், லிஃப்ட் ஸ்மார்ட் என மூன்று ஸ்மார்ட்டான விடயங்களில் கவன செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
ஏனெனில் தற்போதைய இணைய தலைமுறையினர் ஸ்மார்ட் வொட்ச் அணிந்து, ஸ்மார்ட்டாக பணியாற்றுகிறார்கள்.
அமர்ந்து பணியாற்றும்போது சௌகரியத்திற்கு ஏற்ப அமராமல், முதுகு வலி ஏற்படாத வகையில் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ற வகையில் நேராக அமர்ந்து பணியாற்ற வேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
இடுப்பு வலி இரண்டு வாரங்களுக்கு மேல் நீண்டாலோ.. சிறுநீர் அல்லது மலம் கழிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலோ..
இடுப்பு பகுதியில் எங்கேயும் மரத்துப் போனாலும் அல்லது வலது அல்லது இடது கால்களில் சோர்வு தென்பட்டாலோ.. காரணமற்ற முறையில் திடீரென்று எடை குறைவு ஏற்பட்டாலோ.. காய்ச்சல் ஏற்பட்டாலோ.. அடிவயிற்றில் வலி ஏற்பட்டாலோ.. இவையெல்லாம் இடுப்பு வலி தீவிரமடைந்திருக்கிறது என்பதன் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
இடுப்பு வலி தொடக்க நிலையில் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று அங்கு ஐஸ் கட்டி ஒத்தடம் அல்லது சுடுநீர் ஒத்தடத்தை தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ அளித்தால் நிவாரணம் கிடைக்கும். மருத்துவர் பரிந்துரைக்கும் காலகட்டம் வரை வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். இதன்போது மருத்துவர் பரிந்துரைக்கும் இயன்முறை பயிற்சியையும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இவற்றையெல்லாம் விட ஒரு வார காலத்திற்கு பரிபூரணமாக ஓய்வில் இருக்க வேண்டும்.