இளைய வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதன் பின்னணி.?
08 Jan,2023
இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட இளைய தலைமுறையினருக்கு ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை இளைய தலைமுறை பெற வேண்டும் என இதய சிகிச்சை நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இன்றைய திகதியில் எம்மில் பெரும்பாலானோர் இல்லத்திலும், பணியாற்றும் அலுவலகத்திலும் அல்லது விற்பனை செய்யும் நிலையத்திலும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பணியாற்றுவது என்பது வழக்கமாகிவிட்டது.
இதன் காரணமாகவே இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருபத்தைந்து சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர், நாளாந்தம் பத்து மணி தியாலம் வரை ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயமும், நெருக்கடியும் இருக்கிறது.
இதன் காரணமாகவே இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக இரண்டு மணி தியாலத்திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றினால்... அவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர், தங்களது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒரு மணி தியாலத்திற்கு ஒரு முறை அமர்ந்து பணியாற்றும் இடத்திலிருந்து எழுந்து, மூன்று நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை நடந்து, அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று தேநீரோ அல்லது குடிநீரோ அருந்திவிட்டு வருவது நலம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன் ஒரே இடத்தில் இரண்டு மணி தியாலத்திற்கு மேல் அமர்ந்து பணியாற்றினால்.., ஒரு சிகரட்டை முழுமையாக புகைப்பதற்கு சமம் என்றும் எச்சரிக்கிறார்கள்.
மேலும் தற்போது ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் திடீரென்று ஏற்படுவதால் இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் தங்களது இதய ஆரோக்கியம் குறித்து நாளாந்தமோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அவதானிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.