இன்னும் நமது சமூகத்தில் பாலியல் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கும் விவாதிப்பதற்குமான சூழல் உருவாகவில்லை. இதனால் ஒவ்வொரு தனிநபர்களின் பாலியல் வாழ்க்கையும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கிறது என்பது உண்மை.
ஆரோக்கியமான உடலுறவு ஏற்படுவதன் மூலம் உடல் மற்றும் மனம் இரண்டும் மேம்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியுடனும் அமைகிறது. இதனால் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகையில், அதை சரியான நேரத்தில் தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். பெரும்பாலும் பாலுறவு தொடர்பான விஷயங்களை வெளிப்படையாக பேச முடிவதில்லை. அதற்கான உகந்த சூழலை நம் சமுதாயம் உருவாக்க தவறி வருகிறது என்பது தான் உண்மை. இதனால் பாலியல் பிரச்னையை சந்திக்கும் தனிநபர்களின் வாழ்க்கை மிகவும் சவாலாக மாறிவிடுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் நிலையை அறிந்துகொள்ள என்றுமே நமது சமூகம் தயாராக இருப்பது இல்லை. உடலுறவின் போது ஆரம்ப கட்டங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பில் சில வேதனைகள் ஏற்படுவது இயல்பானது தான். இது ஒப்பீட்டளவில் பெண்களில் மிகவும் பொதுவாக உள்ளது. அதேசமயத்தில் இது உடலுறவின் ஒரு பகுதியாக வரும் வலி என்று கூட கருதுபவர்கள் உள்ளனர். உடலுறவின் போது பெண்களுக்கு கடுமையான வலி ஏற்பட்டால், அது 'வைஜினிசம்' எனப்படும் நிலையின் ஒரு பகுதியாக அறியப்படுகிறது.
வைஜினிசம் என்றால் என்ன?
இது பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பாலியல் பிரச்னையாகும். பெண்ணுறுப்பின் தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும் பட்சத்தில், ஆண்குறி உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுதான் வைஜினிசம் என்று கூறப்படுகிறது. இந்த பாதிப்பை கொண்ட பெண்கள் உடலுறவுக்கு பின் தங்களுடைய பிறப்புறுப்பில் கடுமையான வலியை அனுபவிக்க நேரிடும்.
ஏன் வைஜினிசம் ஏற்படுகிறது?
இதுதொடர்பாக ஐக்கிய ஒன்றியத்தின் தேசிய சுகாதார சேவைகள் மையம் வெளியிட்டுள்ள தகவலில், வைஜினிசம் ஏற்படுவதற்கு பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. ஆனால் இதுவரை பெறப்பட்ட பாதிப்பு கணக்குகளை வைத்து ஒருசில காரணிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை
1.) யோனியின் நுழைவுப் பகுதி சிறியதாக இருப்பதாக பெண்கள் கருதுவது.
2.) முதன்முதலாக ஏற்படும் பாலியல் அனுபவத்தின் மீது ஏற்படும் அச்சம்.
3.) ஆரோக்கியமற்ற மருத்துவ பரிசோதனை மற்றும் அதுதொடர்பான நினைவாற்றல்
4.) பாலியல் உறுப்பு மீதான தவறான புரிதல் மற்றும் குற்ற உணர்வு.
5.) ஏதேனும் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை எடுப்பது.
வைஜினிசத்தின் அறிகுறிகள் என்ன?
இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும். ஆனால் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் மற்றும் பிறவகையான பாலியல் இன்பத்தின் மீது பற்றில்லாமல் இருக்காது. அவர்களால் பாலியல் உடலுறவில் மட்டும் முழுமையாக ஈடுபட முடியாது. ஆண்குறி தரும் அழுத்தத்தால் அவர்களுடைய பிறப்புறுப்பில் வலி ஏற்படும். ஆண்குறி பிறப்புறுப்புக்குள் நுழையும் போது அசவுகரியம் ஏற்படுவது முதல் அறிகுறியாகும்.
வைஜினிசத்துக்கான சிகிச்சை முறைகள்?
வைஜினிசத்தை மிகவும் தீவிரமான பிரச்னையாக கருதக்கூடாது. இதற்கு தகுந்த சிகிச்சைகள் உள்ளது. உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் உள்ளிட்டவையும் வாழ்க்கையின் முறையின் மாற்றங்களாகும். இதுவும் சிகிச்சையின் ஒரு பகுதியாக கருத வேண்டும். இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் தங்களுடைய உடலைப் புரிந்துகொண்டு, சிகிச்சைக்கு தாயாராக வேண்டும். இதுபோன்ற செயல்பாடுக்கு துணையின் ஆதரவு பெறுவது முக்கியம். இது தனிமனிதர்களின் தவறாகவும் கருதக்கூடாது. இந்த பிரச்னையை களையும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டு, தைரியமாக அணுகுங்கள்.