ஒரு தாயின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் முழுமை பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஏதோ காரணத்தினால், 37 வாரங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தால் அது குறைபிரசவம் ஆகும்.
அதாவது, பச்சிளம் பருவத்துக்கு முன்பே குழந்தை பிறந்துவிடுவதாகும். இந்தக் குழந்தைகளை ப்ரீ டெர்ம் பேபி என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.
உதாரணமாக, குறைப்பிரசவத்தில் 100 குழந்தை பிறக்கிறது என்றால், அதில் 80 குழந்தைகள் 34-36 வாரங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
மீதம் உள்ள 20 குழந்தைகளில் ஒன்றரை கிலோவுக்கு மேல் 10 பேரும், ஒன்றரை கிலோவுக்கு கீழே 10 பேரும் இருப்பார்கள். அதிலும், இவர்கள், 24- 26 வாரங்களுக்கும் குறைவாக இருப்பார்கள். இந்த ஒன்றரை கிலோவுக்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றும் நம்பிக்கை இன்னும் நம்மிடைய வரவில்லை.
ஏனென்றால், 26-27 வாரங்கள் ஆகும்போதுதான், ஒரு குழந்தை குறைந்தபட்சம் 800 கிராம் உடல் எடையைத் தொடும். அந்த சமயத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் தாய்க்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அல்லது கர்ப்ப வாய் பலவீனமாக இருந்தால் குழந்தை பிறந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம்.
குறைப்பிரசவம் எதனால் ஏற்படுகிறது?
இன்ன காரணத்தினால்தான் குறைப்பிரசவம் ஏற்படுகிறது என்று எளிதில் கூறிவிட முடியாது. ஆனால், சில முக்கியமான காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால், கர்ப்ப வாய் பலவீனம், இரட்டைக் குழந்தைகள் அல்லது இரண்டுக்கு மேல் குழந்தைகள் தரித்திருப்பது, கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்படுவது, கர்ப்பப்பையும், நஞ்சுப் பையும் ஒன்றாக இணையாமல் பிரிந்திருப்பது போன்றவை பொதுவான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இதைத் தாண்டி கர்ப்பகாலத்தில் காய்ச்சல் வருவது, திடீர் உயர் ரத்த அழுத்தம், திடீர் சர்க்கரை, சிறுநீரகத் தொற்று ஏற்படுவது, விபத்து நேரிடுவது இவைகளாலும் குறைபிரசவம் ஏற்படுகிறது.
குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கர்ப்பகாலத்திலேயே கண்டறிய முடியுமா?
நிச்சயம் கண்டறிய முடியும். அதாவது, ஒரு பெண் கர்ப்பம் தரித்த காலத்திலிருந்து ரெகுலராக மருத்துவ செக்கப் எடுத்துக்கொண்டால், அந்தத் தாயின் உடல்நிலை எப்படி இருக்கிறது, அவரின் வயது என்ன , அவருக்கு சர்க்கரை இருக்கிறதா, உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா, அவருக்கு முதல் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்ததா, அவருடைய வாழ்வியல் முறை எப்படி இருக்கிறது. அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதையெல்லாம் கண்டறிந்து அதை வைத்து அவருக்குக் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை அறியமுடியும்.
அப்படிக் கண்டறியும்பட்சத்தில் அவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி தகுந்த சிகிச்சை அளித்து அந்த கர்ப்பத்தைக் காப்பாற்றி அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட முடியும்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற எவ்வளவு கால அளவு ஆகும். அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
ஒரு குழந்தை எவ்வளவு குறைவான காலத்தில் பிறக்கிறது என்பதைப் பொறுத்துதான் அந்த குழந்தைக்கு எவ்வளவு நாள் சிகிச்சை தேவைப்படுகிறது என்பது தெரியும். 34-36 ஆவது வாரங்களில் பிறந்திருந்தால், சராசரியாக 3-5 நாளில் அவர்கள் சாதாரணமாக வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். அதுவே 28- 30 வாரங்களுக்குள் பிறந்திருந்தால் 4- 5 வாரங்கள் அந்த குழந்தைக்குச் சிகிச்சை தேவைப்படும். அதுவே, 28 வாரங்களுக்கும் கீழே பிறக்கும் குழந்தைகளுக்கு 8 வாரத்திலிருந்து 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் . குறைந்தபட்சம் 90 நாட்கள் தேவைப்படும். இந்த 90 நாளில் அந்த குழந்தைக்கு பால்குடிக்க தெரிய ஆரம்பிக்கும். எனவேதான் இந்த கால அளவு தேவைப்படுகிறது. இதுவே, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு இன்னும் காலஅளவுகூடும்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா?
அந்த குழந்தை பிறக்கும்போது, எவ்வளவு நாள் வென்டிலேட்டரில் இருக்கிறது. அதற்கு பிறந்தபோது வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா, உதாரணமாக மூளை நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருந்ததா அல்லது கசிவு ஏதேனும் இருந்ததா, கண்களில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா, பால் செரிமானம் நன்றாக இருந்ததா இதை பொறுத்துதான் அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறமுடியும்.
அது சிறியளவில் இருந்தால் அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது வரை ஆஸ்துமா பிரச்சினை இருக்கலாம். பின்னர் அது வளர வளர சரியாகிவிடும். அதுவே, மூளை நரம்புகளில் ரத்தக் கசிவு அதிகம் இருந்து, வேறு பிரச்சினைகளும் இருந்திருந்தால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என்பது வைத்தியர்களுக்கு தெரிந்துவிடும்.
இந்தக் குழந்தை வளர வளர இந்தப் பிரச்சினைகளைச் சந்திக்கலாம் என்று சொல்லிவிடுவார்கள். அதுபோன்று, குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்கள் பாதிக்கப்படும். அதனால், பிறந்த மூன்றாவது வாரத்தில் இருந்து கண்ணுக்கான சிகிச்சைகளைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், அந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டுவிடலாம்.
500 கிராமுக்கும் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளையும் காப்பாற்றுவது சாத்தியமா?
நிச்சயம் காப்பாற்ற முடியும். அதே சமயம் எல்லா குழந்தைகளையும் காப்பாற்றிவிட முடியுமா என்றால் எங்களால் உறுதி அளிக்க முடியாது. அது அந்தக் குழந்தை பிறக்கும்போது எவ்வளவு ஸ்டாமினாவுடன் இருக்கிறது என்பதை பொறுத்துதான். ஏனென்றால், 440, 450 கிராமில் பிறந்த குழந்தைகளையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம். தற்போது அந்த குழந்தைகள், 3- 4 வயதை கடந்துவிட்டார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
குறைப்பிரசவம் ஏற்படாமல் இருப்பதற்கு கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன?
குறைப்பிரசவம் நடவாமல் தடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களது ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பெண் குழந்தைகள் உடல் பருமனாகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் மெலிந்தும் இருக்கக் கூடாது. அதுபோன்று பெண் குழந்தைகள் சரிவிகித உணவுகள் உட்கொள்ள வேண்டும்.
சரியான வயதில் திருமணம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தை பெற்று கொள்ளும் மன நிலையில் இருக்க வேண்டும். விருப்பம் இல்லாத கர்ப்பம்கூட குறைப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். அதுபோன்று ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியாகிவிட்டால் அதன் பின்னர், மாதா மாதம் ரெகுலராக செக்கப் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன் எல்லாம் சரியாகச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போதே அந்த தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.