உலகளவில் 20 வயது முதல் 50 வயது வரையிலான ஆண் மற்றும் பெண்களில் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலானோருக்கு 'பெல்ஸ் பால்சி' எனப்படும் புற முகவாத பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த பாதிப்புக்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முகத்தில் உள்ள தசைகளின் இயங்குதிறனில் சமச்சீரற்ற தன்மை, பலவீனம், முகத்தினை இருபுறமும் நகர்த்தும் திறன் இழப்பு, கண்ணிமை வீக்கம், காது மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, சுவையில் மாற்றம், ஒலி உணர்திறனில் சமநிலையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுக்கு 'பெல்ஸ் பால்சி' எனப்படும் புற முகவாத பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
முகத்தின் ஒரு புறத்தில் உள்ள தசைகள் மட்டும் பலவீனமடைந்து, முடங்கிப்போகும் நிலையே 'புற முகவாத பாதிப்பு' என வகைப்படுத்துகிறார்கள்.
முகத்தில் உள்ள நரம்புகள் சேதமடைவதன் காரணமாகவும் இவை தற்காலிகமாக பாதிக்கப்படுகின்றன.
பொதுவாக இத்தகைய பாதிப்பால் முகத்தின் ஒரு புறத்தில் மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. மிக அரிதாக, ஒரு சதவீதத்தினருக்கும் குறைவானோருக்கே இத்தகைய பாதிப்பு முகத்தின் இரண்டு புறங்களிலும் ஏற்படுகிறது.
முகத்தின் அசைவுகளை கட்டுப்படுத்தும் நரம்புகளில் வீக்கம் அல்லது பாதிப்பு ஏற்படுவதால் உண்டாகும் இத்தகைய புற முகவாதம் காரணமாக நோயாளிகளால் கண்களை இமைக்க இயலாத நிலை ஏற்படும். வாயை அசைக்கவும் சிரிக்கவும் உணவை மெல்வதற்கும் கூட கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு தாடை பகுதியில் வலி ஏற்படலாம். உமிழ்நீர் வாயின் ஒரு புறத்திலிருந்து ஒழுக நேரிடும். சிலருக்கு நாக்கின் சுவை உணர்திறன் பகுதி பாதிக்கப்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் துல்லியமாக அவதானிக்கப்படவில்லை என்றாலும், பல்வேறு வகையான வைரஸ் தொற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், இரத்த கொதிப்பு, உயர் இரத்த அழுத்த பாதிப்பின் காரணமாகவும் இது ஏற்படலாம்.
மேலும், சிலருக்கு கருத்தரித்த மூன்றாவது மாதத்திலும், வேறு சிலருக்கு பாரம்பரிய மரபணு குறைபாட்டின் காரணமாகவும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதற்கு தீர்வாக எலக்ட்ரோமயோகிராபி, சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.எஸ் ஸ்கேன், இரத்த பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் மருந்துகளை வழங்கி முதன்மையான நிவாரண சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்வர்.
சிலருக்கு பிசியோதெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சையும் அவசியம் ஏற்படலாம். மிக சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்புக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
-Dr. விக்னேஷ்