விட்டமின் டி, உடல் எடையை கணிசமாகக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் எடை பிரச்சினையால் இன்று பலரும் அவதிப்படுகின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மாறி வருவதால் தற்போது உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்திய ஒரு முக்கியமான ஆய்வின் மூலமாக உடல் பருமனுக்குத் தீர்வு கிடைத்துள்ளது என்று கூறலாம்.
விட்டமின் டி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பதுடன், உடல் எடையைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விட்டமின் டி கல்சியத்தை உறிஞ்சி எலும்பு, திசு, பெருங்குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
அதேநேரத்தில் விட்டமின் டி குறைபாடு டைப் 2 நீரிழிவு, இருதய நோய் (CVD), உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். உடல் பருமன் ஏற்பட்டால் மேலும் பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில் ஆய்வில் 6 வாரங்களுக்கு விட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு உடல் நிறை குறியீட்டெண் எனும் பிஎம்ஐ(BMI) கணிசமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியம், தசைகளை உருவாக்குதல், இன்சுலின் சுரப்பு, மூட்டு வலியைக் குறைத்தல், புற்றுநோயைத் தடுப்பது, எடையைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு வைட்டமின் டி பயன்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படி பெறுவது?
சூரிய ஒளியில் இருந்து நாம் விட்டமின் டி பெறலாம். காலையில் சூரிய ஒளியைப் பெறுவது நலம். ஒவ்வொருவருக்கும் தோல் மற்றும் உடல் எடையைப் பொருத்து விட்டமின் டி தேவைப்படுகிறது.
கொழுப்பு நிறைந்த மீன், கடற்பாசி, முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள், காட்லிவர் எண்ணெய், ஸ்பைருலினா மற்றும் பால், தயிர், தோடம்பழச் சாறு, பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் விட்டமின் டி மிகுந்த உணவுகள்.
மாத்திரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஒரு நாளைக்கு 1000 IU அளவு எடுத்துக்கொள்ளலாம்.
உடலில் அதிகப்படியான விட்டமின் டி நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
உடல் எடையைக் குறைக்குமா?
ஆய்வுகளின்படி, விட்டமின் டி உடலில் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைக் குறைக்கும். மேலும், கொழுப்பு செல்களின் சேமிப்பை அடக்கி கொழுப்பு சேர்வதைக் குறைக்கும். எனவே, விட்டமின் டி உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
மனநிலை முதல் தூக்கம் வரை அனைத்தையும் பாதிக்கும் நரம்பியக்கடத்தியான செரோடோடின் உற்பத்தி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.