சொரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி நாட்பட்ட தோல் நோய் தான். ஏனெனில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மாதக் கணக்கிலோ அல்லது வருடக் கணக்கிலோ தொடர்ச்சியாகவும், முறையாகவும் சிகிச்சை எடுத்தால்தான் இவற்றைக் கட்டுப்படுத்த இயலும்.
சொரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள தோல் கடினத்தன்மை மிக்கதாகவும், செதில் செதிலாகவும், சிவந்தும் காணப்படும். அரிப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் சொரியாசிஸ் நோய் படர் தாமரை போல் மற்றவர்களுக்கு பரவக்கூடிய தொற்று பாதிப்பு அல்ல. அதே தருணத்தில் சொரியாசிஸ் என்பது பங்கஸ் தொற்று, பாக்டீரியா தொற்று, வைரஸ் கிருமிகளின் தொற்றினாலோ ஏற்படுவதல்ல. இதனால் சொரியாசிஸ் நோய், தொற்று காரணமாக மற்றவர்களுக்கு பரவுவதில்லை.
எம்முடைய தோல் பகுதி இரண்டு அடுக்குகளாக அமையப் பெற்றிருக்கிறது. முதல் பகுதியில் தோல்களும், இரண்டாம் பகுதியில் இரத்தக் குழாய்களும் அமைந்திருக்கும். முதல் பகுதியின் அடிபாகத்தில் நாளாந்தம் செல்கள் உற்பத்தியாகி, அவை மேல் நோக்கி உயர்ந்து பயணிக்கும். தோலின் மேல் பகுதியில் உள்ள செல்கள் நாம் குளிக்கும் போதும், கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளும் போதும் தோல் பகுதியில் அமைந்திருக்கும் இறந்த செல்கள் உதிரும்.
இந்நிலையில் சொரியாசிஸ் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு தோல் பகுதியில் உற்பத்தியாகும் செல்களின் எண்ணிக்கை, இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கும். இதனால் ஒரே நாளில் செல்களின் வளர்ச்சி அடுக்கு பன்மடங்கு பெருகும். உதாரணத்திற்கு சொரியாசிஸ் பாதிப்பில்லாதவர்களுக்கு தோலின் அடிப்பகுதியில் உற்பத்தியாகும் செல்கள் மேல் பகுதிக்கு இடம்பெயர்ந்து, இறந்து, உதிர்வதற்கு ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆனால் சொரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரே வாரத்தில் இது நடைபெறும். இதனால் இயல்பாக நடைபெற வேண்டிய செல் உதிர்வு நிகழ்வு, சமச்சீரற்ற தன்மையாக நிகழும். இதனால் செல்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறி, தோல் பகுதியை கடினமானதாக்குகிறது.
மேலும் அப்பகுதியில் செதில்களையும் உண்டாக்குகிறது. இவை அனைத்தும் இறந்து போன உதிராத செல்களாகும். இதனால் அங்கு அரிப்பு தன்மையும் தோன்றுகிறது. மேலும் செல்களின் உற்பத்தி அதிகரிப்பதால், அதற்கு ஊட்டமளிக்க வேண்டிய இரத்த குழாய்களின் இயல்பான அளவும் விரிவடைகிறது. இதனால் அப்பகுதி சிவந்தும் காணப்படுகிறது.
சுருக்கமாக விளக்கமளிக்க வேண்டும் என்றால், எம்முடைய தோல்பகுதியில் உற்பத்தியாகி, தோலின் மேல் பகுதி வழியாக வெளியேறும் செல்களின் எண்ணிக்கை, இயல்பான அளவைவிட கூடுதலாக நிகழ்ந்தால் அதனை சொரியாசிஸ் என வகைப்படுத்தலாம்.
தோலின் அடிப்பகுதியில் உற்பத்தியாகும் செல்களின் எண்ணிக்கை ஏன் திடீரென்று அதிகரிக்கிறது? என்ற சந்தேகம் இதனை வாசிக்கும் சிலருக்கு ஏற்படலாம். எம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள், தோலின் அடிப்பகுதியில் உற்பத்தியாகும் செல்களை.'நோய்த்தொற்றை உண்டாக்குபவை' என தவறாக கருதி தாக்குவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
மரபியல் காரணமாக இத்தகைய பாதிப்பு 40 சதவீதத்தினருக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. வேறு சிலருக்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் சுற்றுப்புற சூழலியல் காரணிகளால் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு இயல்பான அளவைவிட கூடுதலாக மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை இருந்தாலும் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணி தூண்டப்படும்.