சில சமையல் குறிப்புகள்!
10 Dec,2022
சிலர் புதிதாக இப்போது தான் சமையல் கட்டிற்குள் நுழைந்து சமையலில் பால பாடம் பயிலத் தொடங்கி இருப்பீர்கள். நீங்கள் பின் வரும் குறிப்புகளை அறிந்து வைத்திருந்தால், தேவையான சமயத்தில் உதவிகரமாக இருக்கும்.துவரம் பருப்பை வேக வைக்கும் போது அதனுடன் ஒரு துண்டு தேங்காய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும்.பூரி மாவுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்துப் பிசைந்து செய்தால் பூரி அதிக நேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.
பூசனிக்காயின் உள்ளே இருக்கும் ஜவ்வை வீணாக்காமல் அதைத் தோசை மாவுடன் சேர்த்து அரைத்துச் சுட்டால் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். தோசை மாவுடன் சிறிது வெந்தயப் பொடி கலந்து தோசை சுட்டால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது மாவில் வெற்றிலை காம்புகளைச் சேர்த்து அரைத்தால் புளிக்காது.
கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். சாம்பார், கீரை, கூட்டு ஆகியவற்றைத் தயார் செய்து இறக்கும் நேரத்தில் வெந்தய பொடி தூவி இறக்கினால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
வீட்டில் காய்கறிகள் வைக்கும் கூடையில் ஸ்பாஞ்ச் வைத்துக்கொண்டால் காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மிளகாய்த் தூள், அரிசி மாவு, கோதுமை மாவு மற்றும் இதர மசாலா பொருட்கள் வைத்திருக்கும் ஜாடிகளில் சிறிதளவு உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் பிடிக்காது.
வெயில் காலங்களில் பால் திரிந்து போகாமல் இருக்க 4,5 நெல்லைப் போட்டு வைத்தால் திரிந்து போகாது.வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயம் வெட்டும் போது தோல் உரிக்காமல் வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டினால் தனித் தனியாக வராது.
அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து விட்டு, பிறகு அதைப் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.அல்வா செய்வதற்கு முன்பு பீட்ரூட்டைப் பாலில் வேக வைத்து மசித்துச் செய்தால் ருசி அருமையாக இருக்கும்.
பாதாம், பிஸ்தா பருப்புகளைக் கொதிக்கும் நீரில் பத்து நிமிடம் வைத்து தோலை உரித்தால் எளிமையாக உரிக்கலாம்மைசூர் பாகுக்கு மாவு தயார் செய்யும் போது சிறிது முந்திரிப் பருப்பைப் பொடியாக்கிச் சேர்த்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
உப்பு ஜாடியில் எலுமிச்சை பழத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.