நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார் என்று பின்லேடனின் மகன் உமர் ஒரு சிறப்பு பேட்டியில் கூறி உள்ளார்.
அமெரிக்காவைதாக்கிய பின்லேடன் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று, காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை அரங்கேற்றினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். சரியாக 10 ஆண்டுகள் கழித்து, இந்த பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந்தேதி, அமெரிக்க தாக்குதலில்
கொல்லப்பட்டார். பில்லேடன் மகன் உமர் பேட்டி இந்த பின்லேடனின் 4-வது மகன் உமர் பின்லேடன் (வயது 41) ஆவார். இவர் ஓவியர், எழுத்தாளர், கலாசார தூதர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர் பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு 1981-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறந்தவர் ஆவார். இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது மனைவி ஜேன் என்ற ஜைனா பின்லேடனுடன் பிரான்சில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசிக்கிறார்.
உமர் பின்லேடன் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும்
'தி சன்' பத்திரிகையில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். நாய்களைக்கொண்டு சோதனை அப்போது அவர் கூறியதாவது:- நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். அங்கு எனது செல்ல நாய்கள் ரசாயன ஆயுதங்களை சோதிக்க பயன்படுத்தப்பட்டன. என் தந்தையின் உதவியாளர்கள் அந்த சோதனையில் ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை.
'நான் பயங்கரவாதியாக வேண்டும்' எனக்கு பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார். நான் என்னால் முடிந்த அளவு, அந்த மோசமான தருணங்களை மறக்கத்தான் விரும்புகிறேன். நான் 2001 ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டேன். கடைசியாக நான் அப்பாவிடம் பேசியது, அவரிடம் விடைபெற்றபோது 'குட்பை' சொன்னதுதான். அவரும் எனக்கு 'குட்பை' சொன்னார்.
எனக்கு அந்த உலகம் போதும். நான் அங்கிருந்து வெளியேறியதில் அப்பா மகிழ்ச்சி அடையவில்லை. அதன்பின்னர் நான் அப்பாவிடம் பேசியதே இல்லை. அப்பாவின் உடல்... என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை. எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். மக்கள் இன்னும் என்னை நியாயம் தீர்த்து வருகிறார்கள்.
என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரது உடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.