அலையாத்திக் காடுகளை உருவாக்கி இயற்கையையும், காலநிலை சமன்பாட்டையும் பேனும் முயற்சியை உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்..
17ஆவது ஜி-20 மாநாட்டின் ஒரு அங்கமாக இந்தோனேஷியாவில் உள்ள அலையாத்திக் காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட்டனர். மேலும் அலையாத்திக் காடுகளின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றியும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
காலநிலை சமன்பாட்டை பேனும் அலையாத்திக் காடுகளை உருவாக்க சாவதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பில் இந்தியாவும் அங்கம் வகிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். அப்படி என்ன இருக்கிறது இந்த அலையாத்திக் காடுகளில்?
அலையாத்திக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் காலநிலையை சமன்செய்யும் முக்கியமான வேலையைச் செய்கிறது. இவை உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோரப் பகுகளில் மட்டும் காணப்படுகின்றன.
புவியில் உள்ள முக்கியமான சூழல் அமைப்புகளில் இதுவும் ஒன்று. இவை சதுப்புநிலக் காடுகள், சுந்தரவனக் காடுகள், சமுத்திரக்காடுகள், கண்டன் காடுகள், சுரப்புன்னைக் காடுகள் மற்றும் தில்லைவனம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அதிக உப்புத் தன்மை உடைய உவர் நீரும், அதிவெப்பமும் உடைய கடினமான சூழலில் இவை செழித்து வருகின்றன. அதற்குக் காரணம் இத்தாவரங்களில் காணப்படும் உப்பை வடிகட்டும் அமைப்பு மற்றும் அலைகள் நிறைந்த கடலில் மூழ்கி நிலைத்திருக்கப் பயன்படும் சிக்கலான வேர்கள் ஆகியவை ஆகும்.
மேலும் நீரால் சூழப்பட்டு குறைந்த ஆக்ஸிஜன் அளவு உடைய சேறு நிறைந்த இடத்தில் செழித்து வாழ, இத்தாவரங்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. உலகெங்கும் 110 வகையான அலையாத்திக் காடுகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 45 வகையான அலையாத்தி தாவரங்கள் வளருகின்றன. திப்பரத்தை, சுரப்புன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், சிறுகண்டல், நரிகண்டல், கழுதை முள்ளி, நீர்முள்ளி, ஆற்றுமுள்ளி, கண்ணா, பன்னுக்குச்சி, தில்லை, சோமுமுந்திரி, கீரிச்செடி, உமிரி உள்ளிட்ட தாவர வகைகள் இதில் அடக்கம்.
உலகில் மொத்தம் 118 வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல நாடுகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இவற்றின் மொத்தப் பரப்பளவு சுமார் 1,37,000 சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகில் ஐரோப்பா, அண்டார்டிகா கண்டங்களைத் தவிர ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இக்காடுகள் பரவிக் காணப்படுகின்றன.
இந்தோனேசியா சுமார் 23,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டு உலகில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 4,921 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டுள்ள இக்காடுகள் மேற்கு வங்காளம், குஜராத், அந்தமான் நிகோபார், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் பரவியுள்ளன.
தமிழ்நாட்டில் பிச்சாவரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. இவைகள் ஆறானது கடலில் கலக்கும் இடத்தில் வாழ்வதால், ஆற்றில் இருந்து அடித்து வரப்படும் மண், கனிமங்கள் உள்ளிட்ட திடப்பொருட்கள் இவற்றின் அடர்த்தியான வேர்களினால் தடுக்கப்பட்டு அவ்விடத்தில் சேகரமாகின்றன.
இதனால் ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் வடிகட்டப்படுவதால் கடலில் மாசுகள் கலப்பது தடுக்கப்படுகிறது. அதோடு கடலுக்கும் கரைக்கும் அரணாக திகழ்கிறது அலையாத்திக் காடுகள். கடல் அரிப்பையும் தடுக்கின்றன அலையாத்திக் காடுகள்.
அலையாத்தித் தாவரங்கள் கடல் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கடற்கரை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்படாமலும் தடுக்கிறது. மேலும் இது கடலுக்கு அருகில் நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவதையும் தடுக்கிறது.
பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் கார்பன்-டை-ஆக்ஸைடு. உலகளவில் காடுகளைப் பாதுகாப்பதால் பருவநிலை மாற்றத்திற்கான தீர்வில் 30 சதவீதத்தை எட்டலாம். ஏனெனில் நிலத்தில் உள்ள காடுகள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உட்கவர்ந்து கொள்ளும் ஆற்றலுடையவை. ஆனால் அலையாத்திக் காடுகள் நிலத்தில் உள்ள தாவரங்களை விட பத்து மடங்கு கார்பன்-டை-ஆக்சைடை கிரகிக்கும் தன்மை கொண்டது. இது பருவநிலை சமன்பாட்டுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
இப்படி மனிதனுக்கும் இயற்கைக்கும் பேருதவியாக இருக்கும் அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ஐக்கிய நாடுகள் சபை, ஜூலை 26 ஆம் தேதியை அலையாத்திக் காடுகள் பாதுகப்பு தினமாக அறிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் என்னும் பேராபத்தை உலகமும்எதிர்கொண்டு வரும் நிலையில், இப்போது அலையாத்திக் காடுகளை உருவாக்குவதிலும், பாதுகாப்பதிலும் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டுள்ளது. அதன் நீட்சிதான் ஜி-20 மாநாட்டில் அலையாத்திக் காடுகள் முக்கிய அங்கம் வகித்தது.
செய்தியாளர் R. ராய்