நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரை 1942 மே 29 அன்று தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சந்தித்தார். ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் ஜோ ஆக்கிம் வான் ரிப்பன்ட்ராப், வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் வில்ஹெல்ம் கெப்லர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பால் ஷ்மிட் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தியாவைப் பற்றி ஹிட்லருக்கு நல்ல அபிப்ராயம் இருக்கவில்லை. அவர் எழுதிய 'மெய்ன் காம்ஃப்' என்ற தன் வரலாற்று நூலில் "பிரிட்டிஷ் பேரரசின் கையிலிருந்து இந்தியா விடுதலை பெற்றால், அது முழு உலகிற்கும் பெரும் துரதிர்ஷ்டமாக இருக்கும். நான் (இந்தியா மீதான) பிரிட்டனின் மேலாதிக்கத்தை விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதில் இந்தியக் கிளர்ச்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள் என்று ஹிட்லர் நம்பினார்.
செக்-அமெரிக்க வரலாற்றாசிரியர் மிலன் ஹொனர் தனது 'இந்தியா இன் ஆக்சிஸ் ஸ்ட்ராடஜி' என்ற புத்தகத்தில், "இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு கிடைத்தால், இந்தியா்கள் போன்ற ஐரோப்பியர் அல்லாதவர்களை சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த ஹிட்லர் எண்ணம் கொண்டிருந்தார்" என்று எழுதியுள்ளார்.
ஹிட்லரைச் சந்தித்த பிறகு, இந்திய சுதந்தரப் போராட்டத்திற்கு ஜெர்மனியின் உதவியைப் பெறுவது பற்றிய சுபாஷ் சந்திர போஸின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது என்று ஹொனர் கருதினார். இந்த உரையாடலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் ஏமாற்றமடைந்தார்.
ஹிட்லருடனான நேதாஜியின் சந்திப்பு
போஸ்-ஹிட்லர் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பால் ஷ்மிட், போஸின் மருமகள் கிருஷ்ணா போஸிடம், "ஹிட்லரிடம் மிகவும் சாதுர்யமாகப் பேசிய சுபாஷ் போஸ் தான் முதலில் அவரிடம் விருந்தோம்பலுக்கான நன்றியைத் தெரிவித்தார்" என்று கூறினார்.
அவர்களின் உரையாடல் முக்கியமாக மூன்று தலைப்புகளைச் சுற்றியே இருந்தது. முதலாவது, இந்தியாவின் சுதந்திரத்திற்கு அச்சு நாடுகள் பொது ஆதரவை வழங்க வேண்டும். மே 1942இல், ஜப்பானும் முசோலினி தலைமையிலான இத்தாலியும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவாக ஒரு கூட்டுப் பிரகடனத்தைச் செய்வதற்கு ஆதரவாக இருந்தன. இதற்கு ஹிட்லரையும் சம்மதிக்க வைக்க, ரிப்பன்ட்ராப்பும் முயன்றார், ஆனால் ஹிட்லர் மறுத்துவிட்டார்.
ஹிட்லர்-போஸ் உரையாடலின் இரண்டாவது தலைப்பு, ஹிட்லரின் 'மெய்ன் காம்ஃப்' நூலில் உள்ள இந்திய எதிர்ப்புச் சூழலைப் பற்றிய விவாதம். இந்தக் குறிப்புகள் பிரிட்டனில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், ஜெர்மனிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் நேதாஜி கூறினார்.
சுபாஷ் சந்திரபோஸின் பயணப் பாதையைத் தனது கையால் ஹிட்லர் வரைபடமாக வரைந்தார். இந்த பயணம் ஆறு வாரங்களில் முடிக்கப்பட வேண்டும் என்பது ஹிட்லரின் திட்டம். ஆனால் நேதாஜி ஜப்பானை அடைய மூன்று மாதங்கள் ஆனது.
நீர்மூழ்கிக் கப்பலில் மூச்சடைக்கும் இட நெருக்கடி, டீசல் நாற்றம்
பிப்ரவரி 9, 1943 அன்று, நேதாஜி ஆபித் ஹசனுடன் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலில் அந்நாட்டின் கீல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டார். நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே மூச்சடைக்கும் சூழல் நிலவியது. நீர்மூழ்கிக் கப்பலின் நடுவில் ஒரு பதுங்கு குழி நேதாஜிக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய பதுங்கு குழிகள் ஓரங்களில் இருந்தன. நீர்மூழ்கிக் கப்பலில் இப்படி, அப்படி நகர இடமில்லை.
ஆபித் ஹசன் தனது 'சோல்ஜர் ரிமெம்பர்ஸ்' என்ற நூலில் இப்படி எழுதுகிறார்: "பயணம் முழுமைக்கும் குழியில் படுத்திருக்க வேண்டும் அல்லது குறுகலான பாதையில் நிற்க வேண்டும் என்பதை நான் உள்ளே நுழைந்தவுடனேயே உணர்ந்தேன். நீர்மூழ்கிக் கப்பலில் ஆறு இருக்கைகள் மட்டுமே இருந்தன. ஆட்கள் ஒரு சிறிய மேசையைச் சுற்றி நெருக்கமாக உட்காரலாம். உணவு எப்போதும் மேஜையில் பரிமாறப்பட்டது, ஆனால் சில நேரங்களில் ஆட்கள் தங்கள் குழிகளில் படுத்துக் கொண்டு சாப்பிட்டார்கள்".
"நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நுழைந்தவுடனேயே டீசல் வாசனை நாசியைத் தாக்கி வாந்தி வர ஆரம்பித்தது. நீர்மூழ்கிக் கப்பல் முழுவதும் டீசல் வாசனை பரவியது, போர்வைகள் கூட டீசல் வாசனையோடு இருந்தன. இதைப் பார்த்ததும், அடுத்த மூன்று மாதங்களை இந்தச் சூழலில்தான் கழிக்க வேண்டும் என்று நினைத்து என் உற்சாகமெல்லாம் போய்விட்டது" என்று நேதாஜி குறிப்பிட்டுள்ளார்.
நேதாஜி பயணித்த U-180 நீர்மூழ்கிக் கப்பல் மே 1942 இல் ஜெர்மனி கடற்படையில் சேர்க்கப்பட்டது. நேதாஜியின் வருகையின் போது அதன் தளபதியாக இருந்தவர் வெர்னர் முசன்பெர்க். சுமார் ஒரு வருடம் கழித்து, ஆகஸ்ட் 1944 இல், அது பசிபிக் பெருங்கடலில் நேச நாட்டுப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 56 மாலுமிகளும் கொல்லப்பட்டனர்.
நேதாஜிக்காக கிச்சடி ஏற்பாடு
முதல் நாளிலேயே உணவு மேசையில், நேதாஜி எதுவும் சாப்பிடவில்லை என்று அபித் ஹசன் உணர்ந்து கொண்டார்.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ராணுவத்தினருக்கு வழங்கப்படும் கெட்டியான ரொட்டி, கெட்டியான இறைச்சி, தோற்றத்திலும் சுவையிலும் ரப்பர் போன்று இருக்கும் காய்கறிகள் தகர டின்களில் வழங்கப்பட்டன.
சுபாஷ் சந்திரபோஸின் அண்ணன் மகள் கிருஷ்ணா போஸ், சமீபத்தில் வெளியிடப்பட்ட 'நேதாஜி, சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, அரசியல் மற்றும் போராட்டம்' என்ற நூலில் இப்படி எழுதுகிறார்: "நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வதை என்னிடமிருந்து மறைத்துவிட்டார் என்று ஆபித் என்னிடம் கூறினார். நான் சற்று முன்பே அறிந்திருந்தால், என்னுடன் உணவு மற்றும் மசாலாப் பொருட்களை வைத்திருப்பேன் என்றார். ஆபித் நீர்மூழ்கிக் கிடங்கில் சென்று பார்த்தபோது, அங்கு அவர் அரிசி மற்றும் பருப்பு நிறைந்த ஒரு பையைக் கண்டார். மேலும் ஒரு பெரிய முட்டைப் பொடி டப்பாவும் இருந்தது".
"அடுத்த சில வாரங்களுக்கு, ஆபித் நேதாஜிக்குக் காலை உணவாக முட்டைப் பொடியுடன் ஆம்லெட் செய்தார். அவர் அரிசி மற்றும் பருப்பைக் கொண்டு நேதாஜிக்கு கிச்சடி செய்தார், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நேதாஜி ஜெர்மனி அதிகாரிகளை அழைத்து கிச்சடி பரிமாறத் தொடங்கினார்."
அவர் மேலும் எழுதுகிறார்: "ஜெர்மன் வீரர்கள் கிச்சடி சாப்பிட ஆரம்பித்தால், அரிசி மற்றும் பருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்று ஆபித் அஞ்சினார். ஆனால் நேதாஜியிடம் இதைச் சொல்ல தைரியம் வரவில்லை. அவர் ஜெர்மன் வீரர்களிடம் கிச்சடியை மறுக்கச் சொன்னார். அடுத்த சில நாட்களுக்கு நேதாஜி கிச்சடியை ரசித்துச் சாப்பிட வேண்டும் என்பது அவர் எண்ணம்".
பகலில் நீருக்கு அடியில், இரவில் கடல் பரப்புக்கு மேல்
கீலில் இருந்து கிளம்பிய நீர்மூழ்கிக் கப்பல் படையில் போஸின் நீர்மூழ்கிக் கப்பல் ஒர் அங்கம். கீலில் இருந்து சிறிது தூரம் வரை, ஜெர்மனி கடற்படையின் கட்டுப்பாட்டில் தான் கடல் பகுதி இருந்தது.
இதன் காரணமாக, ஜெர்மன் U-படகு கான்வாய் தண்ணீரின் மேற்பரப்பில் நகர்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. டேனிஷ் கடற்கரையோரமாகச் சென்று ஸ்வீடனை அடைந்தது. இந்தப் போரில் ஸ்வீடன் நடுநிலை வகித்ததால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
நார்வேயின் தெற்குக் கரைக்கு அருகில் U-படகுகளின் அணி இரண்டாகப் பிரிந்தது.
இங்கிருந்து சுபாஷ் போஸின் நீர்மூழ்கிக் கப்பலின் தனிப் பயணம் தொடங்கியது. கிருஷ்ணா போஸ் எழுதுகிறார், "பகலில் நீர்மூழ்கிக் கப்பல் கடல் நீருக்கு அடியில் செல்லும். இரவில் அது கடல் நீருக்கு மேல் வரும். இந்த நீர்மூழ்கிக் கப்பல் பேட்டரிகளில் இயங்குவதால், இரவில் பேட்டரியை சார்ஜ் செய்ய தண்ணீருக்கு மேல் வர வேண்டியிருந்தது. விடியற்காலையில், நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் தண்ணீருக்குள் செல்லும்."
நீர்மூழ்கிக் கப்பல் இரவில் மேலே வந்ததும், அதன் கேப்டன் வெர்னர் முசென்பெர்க், நேதாஜியையும் ஆபித் ஹசனையும் வந்து நீர்மூழ்கிக் கப்பலின் கூரையில் கால்களை நீட்டி அமரச் சொன்னார்.
நீர்மூழ்கிக் கப்பல் கிரீன்லாந்தின் அருகே சென்றபோது, நேதாஜியும் ஆபிதும் வட துருவத்திற்குப் பயணம் செல்வதாக நினைத்தனர். நேச நாட்டு விமானங்கள் கண்ணில் படாதவாறும், அவர்களைத் தாக்க முடியாதபடியும் அந்தப் பக்கத்திலிருந்து நீண்ட வழிப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது.
நாட்டை பிரிந்திருந்தது போசுக்குக் கசப்பான அனுபவம்
ஒரு U டேங்கர் பிரான்சின் கடற்கரைக்கு அருகில் வந்து, நீர்மூழ்கிக் கப்பலில் டீசலை நிரப்பியது.
பெர்லினில் உள்ள ஃப்ரீ இந்தியா சென்டருக்கு அழைத்துச் செல்வதற்காக யூ டேங்கர் ஓட்டுநர்களிடம் சில முக்கிய ஆவணங்களை நேதாஜி ஒப்படைத்தார். இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தின் இரண்டாம் நாளிலிருந்தே, நேரத்தைக் கடத்த சில புத்தகங்களைக் கொண்டு வரவில்லை என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தார் ஆபித் ஹசன். திடீரென்று நேதாஜி அவரிடம், "ஹாசன் உங்கள் தட்டச்சுப்பொறியைக் கொண்டு வந்தீர்கள், இல்லையா?" என்று கேட்டார்.
தன்னிடம் தட்டச்சுப்பொறி இருப்பதாக ஹசன் சொன்னதும், தொடங்கிய பணி மூன்று மாதங்களுக்குப் பிறகு பயணத்தின் முடிவில் முடிவடைந்தது.
இந்த நேரத்தில் அவர் தனது 'இந்தியப் போராட்டம்' புத்தகத்தின் புதிய பதிப்பிற்காக அதன் கையெழுத்துப் பிரதியில் சில மாற்றங்களைச் செய்தார். நீர்மூழ்கிக் கப்பலில் நடக்கவோ உடற்பயிற்சி செய்யவோ வாய்ப்பு இல்லை. பகல் வெளிச்சத்திற்கான வாய்ப்பே இல்லை. நீர்மூழ்கிக் கப்பலில் எல்லா நேரமும் விளக்குகள் எரிந்துகொண்டிருந்ததால் இரவு போலவே தோன்றியது.
கிருஷ்ணா போஸ் எழுதுகிறார், "இந்தப் பயணத்தின் போதுதான் நேதாஜி ஜப்பானிய அரசு மற்றும் அதிகாரிகளுடன் எப்படிப் பேசுவது என்று திட்டமிடத் தொடங்கினார். ஜப்பானின் பிரதம மந்திரி ஹிடேகி டோஜோவின் பாத்திரத்தை ஏற்று, தன்னுடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து அவரிடம் கூர்மையான கேள்விகளைக் கேட்கும்படி அவர் அபித் ஹசனைக் கேட்டுக் கொண்டார்."
அவர் மேலும் எழுதுகிறார், "நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் தண்ணீருக்கு மேல் வரும் இரவு நேரங்களில், வேலையிலிருந்து ஓய்வு கிடைத்தது. பின்னர் நேதாஜி அபித் ஹசனுடன் நீண்ட நேரம் பேசுவார். இந்த உரையாடலின் போது அபித் கேட்டார். உங்கள் வாழ்க்கையின் மிகவும் கசப்பான அனுபவம் என்ன? நேதாஜியின் பதில், "என் நாட்டை விட்டு விலகி இருப்பது தான்.'
பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலை மூழ்கடித்த நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல்
இந்தப் பயணத்தின் போது, சுபாஷ் போஸின் பல படங்கள் இப்போதும் கிடைக்கின்றன, அதில் அவர் நீர்மூழ்கிக் கப்பலின் பாலத்தில் அபித் ஹசனுடன் பேசும்போது சிகரெட் புகைப்பதைக் காணலாம். அவர் ஐரோப்பாவில் வாழ்ந்த காலம் வரை சிகரெட்டுகளை புகைத்தார். ஆனால் தெற்காசியாவிற்கு வந்த பிறகு சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது.
மது அருந்துவதில் நேதாஜிக்கு வெறுப்பு இல்லை. ஐரோப்பாவில் வசிக்கும் போது, உணவுடன் மதுவை பரிமாறும் பழக்கம் இருந்த கலாசாரத்துடன் ஒத்துப்போய்விட்டார்.
18 ஏப்ரல் 1943இல், ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தபோது, அவரது நீர்மூழ்கிக் கப்பல் 8000 டன் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலான கோர்பிஸை டார்பிடோ செய்து மூழ்கடித்தது.
அபித் ஹசன் எழுதுகிறார், "இது ஒரு மறக்க முடியாத காட்சி. கடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல் இருந்தது. எரியும் கப்பலில் இந்திய மற்றும் மலேசியத் தோற்றம் கொண்ட சிலர் இருந்ததைக் காண முடிந்தது. ஒரு பெரிய உயிர் காக்கும் படகில் வெள்ளையர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். எரியும் கப்பலில் பழுப்பு நிறத் தோலுடையவர்கள் தனித்து விடப்பட்டனர்."
ஒருமுறை நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பலின் தளபதியான முசென்பெர்க், தனது பெரிஸ்கோப் மூலம் ஒரு பிரிட்டிஷ் போர்க்கப்பலைப் பார்த்து, அதை டார்பிடோ செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார்.
நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோக்களுக்குத் தயாராகும் போது, பிழை ஏற்பட்டு, டார்பிடோக்களை சுடுவதற்குப் பதிலாக, நீர்மூழ்கிக் கப்பல் திடீரென நீரின் மேற்பரப்பிற்கு வந்தது.
அதைப் பார்த்ததும் பிரிட்டிஷ் கப்பல் தாக்கியது. முசன்பெர்க் அவசரமாக டைவ் டவுன் உத்தரவிட்டார்.
நீர்மூழ்கிக் கப்பல் மிகுந்த சிரமப்பட்டு, அடிப்பகுதியை எட்டியது, ஆனால் தண்ணீருக்குள் செல்லும் முன், கப்பலின் தண்டவாளம் நீர்மூழ்கிக் கப்பலின் பாலத்தில் மோதி சிறிய சேதத்தை ஏற்படுத்தியது.
அபித் ஹசன் எழுதுகிறார், "இந்தப் பதற்றத்தில் நான் பயத்தால் வியர்த்துவிட்டேன், ஆனால் நேதாஜி அமைதியாக அமர்ந்து தனது உரையை டிக்டேட் செய்துகொண்டிருந்தார். நிலைமை சீரானதும், முசன்பெர்க், குழுவினரைக் கூட்டி, ஆபத்துக் காலங்களில் அமைதியாக இருப்பது எப்படி என்று தனது இந்திய விருந்தினர் ஒரு உதாரணம் காட்டினார் என்று கூறினார்."
ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏறிய நேதாஜி
ஏப்ரல் கடைசி வாரத்தில், சுபாஷ் போஸின் நீர்மூழ்கிக் கப்பல், நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது. இதற்கிடையில், ஏப்ரல் 20, 1943 அன்று, ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-29 பினாங்கிலிருந்து கேப்டன் மசாவோ தாரோகா தலைமையில் புறப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் புறப்படுவதற்கு முன்பு இந்திய உணவுக்கான பொருட்களை வாங்கிச் சென்றது உள்ளூர் இந்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மடகாஸ்கரில் கடலில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. எனவே இங்கு நேதாஜியை ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இங்கு இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் சிறிது நேரம் அருகருகே ஓடின.
சௌகத் போஸ் தனது 'ஹிஸ் மெஜஸ்டிஸ் ஆப்போனென்ட்' புத்தகத்தில் எழுதுகிறார்: "ஏப்ரல் 27 மதியம், ஒரு ஜெர்மன் அதிகாரி மற்றும் ஒரு சிக்னல்மேன் ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலுக்கு நீந்திவந்தனர். ஏப்ரல் 28 அன்று காலை நேதாஜி மற்றும் அபித் ஹசன் ஆகியோர் U-180 இல் இருந்து இறக்கப்பட்டனர். ரப்பர் படகு ஒன்று, பலத்த கடல் அலைகளுக்கு நடுவே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலான I-29க்கு அவர்களை அழைத்துச் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலுக்கு பயணிகள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் முறை. கடல் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. படகில் ஏறும் போது, நேதாஜியும், ஆபித்தும் முழுவதுமாக நனைந்தனர்.
நேதாஜிக்காகத் தனது கேபினைக் காலி செய்த ஜப்பானிய கமாண்டர்
ஜெர்மனி கடற்படையினர் முழு பயணத்தின் போதும் நேதாஜி மற்றும் அவரது தோழர்களை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டனர். ஆனால் ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலில் ஏறிய பிறகு, போஸும் ஆபித்தும் தங்கள் வீட்டில் இருப்பதாகவே உணர்ந்தனர்.
சௌகத் போஸ் எழுதுகிறார், "ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலை விடப் பெரியது, அதன் தளபதி மசாவ் தரூக்கா நேதாஜிக்காக தனது அறையை காலி செய்தார்."
பினாங்கில் ஜப்பானிய சமையல்காரர்கள் வாங்கிய இந்திய மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு நேதாஜிக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆபித் ஹசன் எழுதுகிறார், "எங்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு வேளை உணவு வழங்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் நேதாஜி ஜப்பானிய தளபதியிடம் மீண்டும் சாப்பிடலாமா என்று கூடக் கேட்டார்."
ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் எங்கள் பயணத்தின் போது எதிரி கப்பல்களுடன் இரண்டு முறை மோதினோம்.
நீர்மூழ்கிக் கப்பலின் தளபதி, வழியில் ஏதேனும் எதிரிக் கப்பலைக் கண்டால், அதைத் தாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதால் இது நடந்தது.
மாறாக, ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலின் தளபதி எந்தச் சூழ்நிலையிலும் எதிர்க் கப்பல்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் சுபாஷ் சந்திரபோஸைப் பத்திரமாக சுமத்ராவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்றும் செயல்பட்டார்.
ஆபித் ஹசன் எழுதுகிறார், "முழுப் பயணத்திலும் நாங்கள் எந்தப் பிரச்சனையும் சந்திக்கவில்லை. ஒரே ஒரு பிரச்சனை, மொழி பிரச்சனை. நேதாஜிக்கும் எனக்கும் ஜெர்மன் மொழி தெரியும். ஆனால் ஜப்பானிய மொழி எங்களுக்குப் புரியவில்லை. நீர்மூழ்கிக் கப்பலில் மொழிபெயர்ப்பாளர் இல்லை."
இந்தியர்களுடன் வானொலி மூலம் உரையாற்றிய போஸ்
மே 13, 1943 இல், ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-29 சுமத்ராவின் வடக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள சபாங்கை அடைந்தது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இறங்குவதற்கு முன் சுபாஷ் சந்திர போஸ் அனைத்து பணியாளர்களுடனும் படம் எடுத்துக்கொண்டார்.
படத்தில் தனது கையெழுத்தையும் இட்டு, "இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தது ஒரு இனிமையான அனுபவம். இந்த பயணம் நமது வெற்றியிலும் அமைதிக்கான போராட்டத்திலும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று செய்தியை எழுதினார்.
சபாங்கில் நேதாஜியின் பழைய நண்பரும், ஜெர்மனியில் ஜப்பானிய ராணுவ உதவியாளராக இருந்தவருமான கர்னல் யமமோட்டோ அவரை வரவேற்றார்.
இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ஜப்பானிய போர் விமானத்தில் டோக்கியோவை அடைந்தார் நேதாஜி.
அங்கு அவர் அரண்மனைக்கு எதிரே உள்ள மிகவும் பிரபலமான இம்பீரியல் ஹோட்டலில் அவர் தங்க வைக்கப்பட்டார். அந்த ஹோட்டலில் அவர் மாத்சுதா என்ற ஜப்பானியப் பெயரில் செக்-இன் செய்தார்.
ஆனால் ஒரு சில நாட்களில் அவரது அனைத்து புனைப்பெயர்களான ஜியாவுதீன், மசோட்டா மற்றும் மாத்சுதா ஆகியவை பின்தள்ளப்பட்டன.
ஒரு நாள் இந்திய மக்கள் வானொலியில் அவரது குரலைக் கேட்டனர், "நான் சுபாஷ் சந்திரபோஸ் கிழக்கு ஆசியாவில் இருந்து என் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறேன்" என்று தொடங்கினார்.