பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு லிஸ் டிரஸ் விலகியிருக்கிறார். நீங்கள் பிரிட்டன் அரசியலை தொடர்ந்து கவனிக்கவில்லை என்றால், அவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள உதவக்கூடிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
லிஸ் டிரஸ் - பிரிட்டனின் குறுகிய கால பிரதமர்
லிஸ் டிரஸ், போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக, செப்டம்பர் 6ஆம் தேதி பிரிட்டன் பிரதமரானார், பின்னர் 45 நாட்களுக்குப் பிறகு ராஜிநாமா செய்தார். இதேபோல 1827இல் பதவியில் இருந்த ஜார்ஜ் கேனிங் 119 நாட்கள் மட்டுமே நாட்டின் பிரதமராக இருந்தார்.
பிரச்னைகளில் விரைவாகவே சிக்கினார்
லிஸ் டிரஸ் ஆதரவுடன், நிதியமைச்சர் குவாசி குவார்டெங் தனது மூன்றாவது வாரத்தில் 45 பில்லியன் பவுண்டுகள் அளவிலான வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டார், அதை அவர்கள் "மினி-பட்ஜெட்" என்று அழைத்தனர். ஆனால் இது பெரும் பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தியதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. அது "சரியான செயல்" என்று அந்த நேரத்தில் டிரஸ் வலியுறுத்திய போதிலும், கிட்டத்தட்ட அனைத்தும் இப்போது தலைகீழாக மாற்றப்பட்டது. மேலும் குவார்டெங் நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
சொந்த கட்சி எம்பிக்களாலேயே விமர்சிக்கப்பட்டார்
டஜன் கணக்கான கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள், டிஸ் பிரஸ் பதவி விலகுமாறு அழைப்பு விடுத்தனர். அவரது அமைச்சரவையில் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் ராஜிநாமா செய்தார்.
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்
அடுத்த பிரிட்டன் பிரதமர் தேர்வு எப்படி நடைபெறும்?
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப தமது முந்தைய எதிர்ப்பாளர்களான கிராண்ட் ஷாப்ஸ், ஜெர்மி ஹன்ட் ஆகியோரை லிஸ் டிரஸ் பணியமர்த்த வேண்டியிருந்தது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை ஒப்புக் கொண்ட லிஸ் டிரஸ்
டெளனிங் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தனது ராஜிநாமா உரையில், "கன்சர்வேடிவ் கட்சிக்காக நான் அளித்த வாக்குறுதியை என்னால் வழங்க முடியாது என்பதை நான் ஏற்கிறேன்," என்று கூறினார்.
ரிஷி சூனக்கை வீழ்த்தி பிரதமர் பதவிக்கு தேர்வானவர் லிஸ் டிரஸ்
கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே லிஸ் டிரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் எம்பிக்களின் வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சூனக் முன்னணியில் இருந்தாலும் இறுதி வாக்கெடுப்பில் 80,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் சூனக்கிற்குப் பதிலாக லிஸ் டிரஸ்ஸை தேர்ந்தெடுத்து அவர் பிரதமர் பதவிக்கு தேர்வாகும் வெற்றிக்கு வழியமைத்தனர்.
லிஸ் டிரஸ்ஸுக்கு பதிலாக யார் இனி பிரதமர்?
அடுத்த வாரத்தில் பிரதமராக யார் இருப்பார் என்பதற்கான தலைமைப் போட்டி நடைபெற உள்ளது. அந்த வகையில் லிஸ் டிரஸ்ஸுக்கு பதிலாக புதிய தலைமை அறிவிக்கப்படும் வரை அவரே தலைவராக நீடிப்பார்.
அரசி இரண்டாம் எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர்
அரசி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு லிஸ் டிரஸ்ஸை அவர் பிரிட்டன் பிரதமராக நியமித்தார். அதைத்தொடர்ந்து அரசிக்கு 10 நாட்கள் அனுசரித்த துக்க காலத்துடன் லிஸ் டிரஸ்ஸின் பிரதமர் பணி தொடங்கியது.
பொருளியலாளராக பணியாற்றியவர் லிஸ்
பல்கலைக்கழக பட்டம் முடித்த பிறகு ஷெல்,கேபிள் & வயர்லெஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார் லிஸ் டிரஸ். மேலும் 2000ஆம் ஆண்டில் கணக்காளர் ஹக் ஓ லியரியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களின் குடும்பம் நோர்ஃபோக்கின் தெட்ஃபோர்டில் வசிக்கிறது.