வெங்காயம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு சரியாகுமா?
18 Sep,2022
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரது குடும்பத்திலும் குறைந்தது ஒரு நீரிழிவு நோயாளிகளாவது இருக்கின்றனர், இப்போது நீரிழிவு நோய் பாதிப்பு என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பிற்குள்ளாகியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் உழைப்பின்மை, மரபணு மற்றும் உணவு பழக்கவழக்கம் போன்றவற்றால் நீரிழிவு நோய் வருகிறது. இதில் மிகவும் பொதுவானது டைப்-2 நீரிழிவு நோய் இன்சுலின் உற்பத்தி குறைபாட்டால் ஏற்படும் இந்த வகை அதிகளவில் பெரியவர்களிடம் காணப்படுகிறது. கடந்த சில வருடங்களாக டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் ஏரளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நீரிழிவு நோயினால் அதிகளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
நீரிழிவு நோய் வந்துவிட்டாலே முறையான உணவு பழக்கம், உடலுழைப்பு அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. வெங்காயம் அனைவரின் வீட்டு சமயலறையிலும் கிடைக்கக்கூடிய ஒரு எளிமையான பொருள் என்பதால் இதற்கு பெரியளவில் சிரமப்பட வேண்டியதில்லை. வெங்காயத்தில் பல நன்மைகள் உள்ளது அதில் ஒன்றுதான் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, வெங்காயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் உடலில் ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஒரு ஆய்வில் வெங்காய சாறு ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
எளிதில் கிடைத்துவிடும் வெங்காயத்தில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருப்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இனிமேல் அனைவரும் தினமும் உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும் புதிதாக உள்ள வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடும்போது நாம் கூடுதல் நன்மைகளையும் பெறமுடியும். அப்படி பச்சையாக வெங்காயத்தை உட்கொள்ளுவதன் மூலம் உடலில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களை நம்மால் உணர முடியும். நிபுணர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், வெங்காயம் சாப்பிட்ட டைப்-1 மற்றும் டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகளின் உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதை கண்டனர். எனவே வெங்காயத்தை பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் தினம் ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக வெங்காயத்தை சாண்ட்விச், சூப், சாலட் அல்லது தினசரி பருப்பு சாவல் அல்லது சப்ஜி போன்ற உணவு வகைகளில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.